Politics

சொன்னதை செய்துகாட்டிய பள்ளிக்கல்வித்துறை.. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விமானத்தில் கல்வி சுற்றுலா !

தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாளை துபாய் அழைத்து செல்லவுள்ளார்.

பள்ளி அளவில், கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இதில் சிறந்து விளங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் 68 பேரை அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை கல்வி சுற்றுலா அழைத்து செல்கிறார். அவர்களுடன் 5 வழிகாட்டி ஆசிரியர்களும் செல்கின்றனர். இதற்காக, நாளை விமானம் மூலம் புறப்படும் அவர்கள், வரும் 13-ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.

இந்த பயணத்தின் போது, ஷார்ஜாவில் நடைப்பெற்று வரும் பன்னாட்டு புத்தக கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட உள்ளனர். ஷார்ஜா கண்காட்சியில் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த புத்தக நிறுவனங்களின் மூன்று அரங்குகள் இடம் பெற்றுள்ளன. மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு திறன் குறித்து கற்பிப்பதற்கு ஏதுவாக அழைத்து செல்வது பயனுள்ளதாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், துபாயில் சிறப்பாக செயல்படும் பள்ளிகள், ஆய்வகங்களுக்கும், முக்கிய சுற்றுலா தளங்களுக்கும் சுற்றிப்பார்க்க மாணவர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர். கடந்தாண்டு கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடு சுற்றுலாவிற்கு மாணவர்கள் அழைத்து செல்லப்படாத நிலையில், நாளை 68 மாணவர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் ஒன்றும் கட்டவில்லை..பதில் சொல்வது அவர்கள் கடமை: அமைச்சர் சேகர்பாபு!