Politics
"இங்கே உங்கள் மிரட்டல் பருப்புகள் வேகாது".. தமிழிசை சவுந்தரராஜனுக்கு தரமான பதிலடி கொடுத்த சிலந்தி!
கேள்வி: சிலந்திக்கு ஆளுநர் தமிழிசை காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறாரே, பார்த்தீர்களா?
பதில்: மொகரம் பண்டிகையின்போது முஸ்லிம் சகோதரர்களில் ஒரு பிரிவினர் தங்களைத் தாங்களே சவுக்கால் அடித்துக் கொள்வார்கள்; பார்த்திருப்பீர்களே! அம்மையார் கூறியிருப்பது, ஒரு மாலை நாளேடு குறிப்பிட்டபடி, பதிலடி அல்ல; தனக்குத்தானே அடித்துக் கொண்ட சவுக்கடி போலத் தோன்றுகிறது!
கால்பந்தாட்டத்தில் எதிரியை எதிர்கொள்ள முடியாத நேரத்தில் தோல்வி பயத்தில் பந்தை விட்டுவிட்டு ஆளை அடிப்பார்களே; அந்தப் போக்குதான் அம்மையார் பதிலில் தெரிகிறது!
கேள்வி: எரிமலைகளால் இமயமலையை ஒன்றும் செய்ய முடியாது என்கிறாரே தமிழிசை!
பதில்: தன்னைப் பற்றி அதீதமான கற்பனையில் மிதக்கிறார் அவர்! எதிர்ப்பைக் கண்டதும் ஓட்டுக்குள் பதுங்கிடும் நத்தை, அந்த ஓடு இமயமலை போன்றது என எண்ணிக் கொள்ளும்; அம்மையார் பதில், அந்த ரகத்தைச் சார்ந்ததுதான்! விடுங்கள். மடுக்கள் தங்களை மலையாகக் கருதலாம்; மக்களுக்குத் தெரியாதா; மடு எது, மலை எது என்பது!.
கேள்வி: சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருக்கிறார்கள் என ஆவேசப்பட்டுள்ளாரே, ஆளுநர் தமிழிசை!
பதில்: ஒன்றிய அமைச்சர் பதவியில் சீரியலில் நடித்துவிட்டு அமர்ந்திருக்கும் ஸ்மிருதி இராணி மீது ஏதாவது கோபமா அல்லது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள்மீது எரிச்சலா? என்று தெரியவில்லை! அறிக்கைகள் எழுதும்போது எத்தகைய எதிர் வினைகள் வரும் என்பதை சிந்தித்து எழுதவேண்டும் என்ற பக்குவம்கூட இல்லாது ஒரு ஆளுநர் தத்து பித்து என இப்படி எழுதுவதால்தான்; பலருக்கு அம்மையாரை எண்ணும்போது “குருவித்தலை பனங்காய்” பழமொழி நினைவுக்கு வருகிறது. அதனை மேலும் மேலும் ஊர்ஜிதம் செய்து வருகிறார்!
கேள்வி: (தெலுங்கானாவில்) பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியதால் ஆளுநர் மாளிகை மீது கோபம் என்கிறாரே; அந்த மாநில ஆளுநர்.
பதில்: ஆளுநர் பதவிக்கு, தான் எத்தனைப் பக்குவமற்றவர் என்பதை அவரே வெளிப்படுத்தியுள்ளதை இது காட்டவில்லையா? அவர் குறிப்பிட்டுள்ள ‘வாரிசு அரசியல்’ அந்தக் கட்சியின் சொந்த விவகாரம். அந்தக் கட்சியினர் அதுகுறித்து முடிவெடுத்துக் கொள்வர்!
ஒரு ஆளுநர் பணி என்பது ஆளும் கட்சியின் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது அல்ல; என்ற அடிப்படைகூடத் தெரியாமல் சம்பந்தமில்லா விவகாரங்களில் மூக்கையும், வாலையும் நுழைப்பதால்தான் வீண் வம்புகளை விலைக்கு வாங்கிக் கொண்டு, அதற்கு எதிர்வினை ஏற்பட்டதும் அலறுகிறார்!
கேள்வி: இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசுக் குருவிகள் அல்ல நாங்கள் என்று தனது அறிக்கையில் சவடால் விட்டுள்ளாரே; ஆளுநர்!
பதில்: அதற்கு குமரிஅனந்தன் அவர்கள்தான் பதில் கூற வேண்டும்!
கேள்வி: வதந்திகளைப் பரப்பும் சிலந்திகள் நசுக்கப் படலாம் என்று மிரட்டியுள்ளாரே, தமிழிசை!
பதில்: தெலுங்கானாவில் காட்ட வேண்டிய பூச்சாண்டியை, அங்கு காட்ட முடியாததால் ‘சிலந்தி’யிடம் காட்டிப் பார்க்கிறார்; இந்தப் பூச்சாண்டி அல்ல; இதற்கு மேல் படுபயங்கர பூச்சாண்டிகளை எல்லாம் கண்டவர்கள் நாங்கள்! இங்கே மிரட்டல் பருப்புகள் வேகாது!
கேள்வி: இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாதபோது, முரசொலி எங்களை என்ன செய்து விட முடியும்? என்று கேட்டிருக்கிறாரே; தமிழிசை!
பதில் : இடி ஒலி அல்ல முரசொலி; முரசொலி கேட்டு எழும் படைகள் போர்க்களத்தில் எதிரிப்படையின் இடுப்பொடிக்கும் என்பது தெரியாதா அம்மை யாருக்கு!
கேள்வி: தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி நான் கருத்துக் கூறினால், அதை எதிர்த்து கட்டுரை எழுதுவதுதான் உங்கள் கருத்துச் சுதந்திரமா? என்று கேட்டிருக்கும் ஆளுநர் தமிழிசைக்கு சிலந்தியின் பதில் என்ன?
பதில் : மருத்துவப் படிப்பு படித்திருந்தாலும், அரசியல் அறிவில் இன்னும் எல்.கே.ஜி.யாகவே இருக்கிறார் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா!
அரசியல்வாதியாக அண்டை மாநில அரசியல் பற்றிப் பேசலாம்; ஆளுநராக அரசியல் பேசக் கூடாது என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாதவர்களுக்கு என்ன பதில் கூறிட முடியும்?
- சிலந்தி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!