Politics

“சோலிக்கே பீச்சே.. என்று சொல்லியிருந்தால் கை நிறைய சம்பாதிக்க முடியுமா..?” - அமைச்சர் எ.வ.வேலு தாக்கு !

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மக்களுக்கு பல விதத்திலும் இன்னல்களை கொடுத்து வருகிறது. மேலும் மாநிலங்களின் உரிமைகள், விவசாய பிரச்னை, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் பல கேடு விளைவிக்கும் செயல்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக மொழி பிரச்னையையும் உருவாக்க முயன்று வருகிறது.

அந்த வகையில் அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பரிந்துரையை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது.

அதில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என்ற நோக்கமும் இடம்பெற்றுள்ளது. இதற்கு தேசிய அளவில் பல்வேறு மாநிலங்கள் கண்டன குரல்களை எழுப்பி வரும் நிலையில், தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் இந்தி திணிப்புக்கு வலுத்த ஒருமித்த குரல் எழுந்து வருகிறது.

தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி - “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்".

இந்த நிலையில் இந்தி என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் ஒன்றிய அரசின் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணியும்-மாணவர் அணியும் இணைந்து, அண்மையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்தின.

அதோடு அண்மையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இதையடுத்து இந்த தீர்மானத்தை குறித்து பொதுமக்களுக்கு விளக்கி விளக்கி கூறும் வகையில் திமுக சார்பில் மாவட்டந்தோறும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகர செயலாளர் ரகுபதி, மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), பார்த்திபன் எம்.பி, மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக கழக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது மேடையில் பேசிய அவர், ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க மறுப்பது ஏன்? சோலிக்கே பீச்சே என்று சொல்லியிருந்தால் நம் பிள்ளைகள் கை நிறைய சம்பாதிக்க முடியுமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், “இந்தி மொழி திணிப்பதை திமுக தொடர்ந்து எதிர்த்து கொண்டே இருக்கிறோம். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1952-ம் ஆண்டு ஒன்றிய அரசு அலுவலகங்களில் இருந்த இந்தி எழுத்துக்கள் மீது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், திருச்சியில் தார் பூசிய வரலாறு உண்டு. தமிழ் மொழிக்காக 10 எம்.எல்.ஏ.க்கள் பதவியை துறந்ததும் தி.மு.க.வின் வரலாறு.

ஒன்றிய அரசு இந்தியை திணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிற்று மொழியாக இந்தியை கொண்டு வருவது. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆன்மீகத்துக்கு எதிரானவர் அல்ல. ஆன்மீகத்துக்கு எதிரானவர் என்றால் அத்தனை கோயில்களும் குடமுழுக்கு கண்டிருக்குமா? திருவாரூர் தேர் ஓடியிருக்குமா?. அவர் ஆன்மீகத்துக்கு எதிரானவர் என்று பல கட்சிகள் புரளி பேசி வருகிறது.

இந்தி மொழிக்கு வெறும் 500 ஆண்டுகாலம் தான் ஆகிறது. ஆனால் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமையான தமிழ் மொழியை அழிக்க நினைப்பது எந்த விதத்தில் ஞாயம். 4 ஆயிரம் ஆண்டு பழமையான தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க ஏன் மறுக்கிறார்கள்?.

சோலிக்கே பீச்சே என்று சொல்லியிருந்தால் நம் பிள்ளைகள் கை நிறைய சம்பாதிக்க முடியுமா? ஆங்கிலம் பயின்றதால் பல்வேறு நாடுகளுக்கு தமிழர்கள் சென்று சம்பாதித்து பணம், பொருள் ஈட்டி வருகின்றனர். கலை உலகத்தையும், திராவிட இயக்கத்தையும் பிரித்து பார்க்க முடியாது. எங்கள் மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். தமிழுக்கு இணையான மொழி இந்தி அல்ல.

முற்காலத்தில் தமிழை வளர்த்தது பக்தி இலக்கியம் என்றால் பிற்காலத்தில் தமிழை வளர்த்தது திராவிடம் தான். ஆன்மீகத்திற்கு எதிரானவர் கலைஞர் என்று சொல்லி சில அரசியல் கட்சிகள் சிண்டுமுடிய பார்க்கின்றனர். இந்தி வந்தால் திருவாசகம், தேவாரம் பாட முடியுமா? திராவிடம் என்பது ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்க கூடிய இயக்கம்.

மோடியும், அமித்ஷாவும் குஜராத் மாநிலத்தில், குஜராத்தி மொழியை இரண்டாம் நிலையில் விட்டுவிட்டு இந்தியை முதலிடத்தில் உள்ளது. இந்திதான் உங்கள் மாநிலத்தின் முதல் மொழி. நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள். நீங்கள் ஏமாந்ததோடு மட்டுமின்றி எங்களையும் ஏமாற்ற பார்க்கிறீர்கள். வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கு வேலை இல்லை என்பதால்தான் பிழைப்பு தேடி தமிழகம் வருகின்றனர்.

இந்தியாவுக்கு வழிகாட்டி தமிழ் மொழி தான். தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் உருவம் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட இயக்கம் தான் ஆன்மீக இயக்கத்தை காப்பாற்ற போகிறது. எனவே தமிழ் மொழியை காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் அனைவரும் அரணாக இருப்போம்” என்றார்.

Also Read: ‘இந்தி தேர்வில் தோல்வி..’ பள்ளி சிறுவனை பிரம்பால் அடித்தே கொன்ற ஆசிரியர்.. பாஜக ஆளும் உ.பி-யில் கொடுமை !