Politics
பொருளாதாரப் பின்னடைவில் தப்பிக்குமா இந்தியா ? மோடியால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து என்ன ?
உலகம் ஒரு பெரும் பொருளாதாரப் பின்னடைவை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
கோவிட் கால பின்னடைவும் உக்ரெயினின் போரும் இணைந்து இந்த பின்னடைவுக்கு காரணமாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதாரப் பின்னடைவு என்பது என்ன?
ஆறு மாதங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் மைனசில் இருந்தால் பொருளாதாரப் பின்னடைவு எனக் குறிப்பிடுகிறார்கள். அதாவது உள்நாட்டு உற்பத்தி ஒன்றுமில்லை என்றாலும் அல்லது இருக்கும் உற்பத்திக்கு சந்தையில் மதிப்பில்லை என்றாலும் பொருளாதாரம் பின்னடைந்ததாகப் பொருள்.
காரணம் என்ன?
உலகப் பொருளாதாரம் பெரும்பாலும் அமெரிக்க நாட்டைச் சார்ந்துதான் இயங்குகிறது. இடதுசாரிய நாடுகளை தவிர்த்து உலகின் பிற நாடுகள் எல்லாவற்றிலும் அமெரிக்கா கடை விரித்திருக்கிறது. அந்த நாடுகளின் பயனர்கள் அமெரிக்கக் கடையை சார்ந்துதான் வாழ்வார்கள். அந்தக் கடையே மூடப்பட்டுவிட்டால், என்னவாகும்? சரிவுதான்!
அமெரிக்காவில் தற்போது பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பணவீக்கத்தை மட்டுப்படுத்த, அமெரிக்காவின் மத்திய வங்கி, கூட்டி வருகிறது. தொடர்ந்து வட்டி விகிதங்களை கூட்டுவதும் வட்டி உச்சத்தை அடைவதும் அமெரிக்க நாட்டின் பொருளாதாரத்தை சரித்து விடும்.
கடன்களுக்கு வட்டி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி குறையும். வாங்கும் சக்தி குறைந்தால் சந்தையில் பொருட்கள் தேங்கும். தேக்கத்தால் நிறுவனங்கள் நட்டமடையும். வேலையிலிருந்து ஆட்களை நிறுவனங்கள் நீக்கும். வருமான இழப்பு ஏற்படும். வருமானங்கள் குறையும். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என சூழல் மாறும்.
என்ன விளைவுகள் நேரும்?
பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள சில நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 2008ம் ஆண்டு பொருளாதாரப் பின்னடைவு தவிர்த்து, வேறு எதுவும் அதிக காலத்துக்கு நீடிக்காததால், இதுவும் நீடிக்காது என்கின்றனர் ஒரு சாரார். பணவீக்கத்தால் ஏற்படும் சரிவு சீக்கிரம் சரியாகிவிடும் என்கின்றனர் சிலர்.
ஆனால் அமெரிக்காவின் மத்திய வங்கித் தலைவர் சொல்கையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அவர்களின் முயற்சி பலனளிக்குமா என்றோ என்ன பாதிப்பை விளைவிக்கும் என்றோ தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்த வருடத்தில் பொருளாதார பின்னடைவு நிச்சயம் என்றாகி இருக்கிறது. அதன் நீளம் குறித்த அசட்டையான நம்பிக்கையும் எச்சரிக்கையான நழுவலும் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் எப்படி இருக்கும்?
கடந்த 2008ம் ஆண்டில் பொருளாதாரப் பின்னடைவு வந்து இந்தியா தப்பித்தற்குக் காரணம் ஒன்றுதான். அந்த வருடத்துக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி அந்நிய நேரடி முதலீட்டை இந்திய பொதுத்துறைகளில் அனுமதிக்கும் முயற்சி எடுக்கப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்த்து அம்முயற்சி கைவிடப்பட்டது.
அதற்குப் பிறகு பாஜகவின் ஆட்சியில் பிரதமர் இந்தியாவில் இருந்ததை விட பிற நாடுகளில் இருந்ததே அதிகம். அந்தளவுக்கு வெளிநாட்டு மூலதனங்களை கொண்டு வந்தார். அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது. இந்தியப் பொதுத்துறையின் ஆணிவேறான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் சந்தைத் தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டமும் நேர்ந்தது.
இவற்றைத் தாண்டி பணமதிப்புநீக்கம் என சேமிப்பையும் அழித்தனர். ஜிஎஸ்டி என சிறு வணிகர்களின் தலைகளிலும் துண்டைப் போட்டனர். எப்போதும் கண்டிராத அதிசயமாக காபி டே போன்ற பெருநிறுவன முதலாளியே தற்கொலை செய்து கொண்டார். இத்தகைய சூழலில் பொருளாதாரப் பின்னடைவு என்பது நிச்சயமாக இந்தியாவுக்குக் கோரமாகத்தான் இருக்கும் என்கின்றனர்.
இந்திய ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கான சரக்கு 2011ம் ஆண்டிலிருந்து 10.1 சதவிகிதத்திலிருந்து 2022ம் ஆண்டில் 18.1 சதவிகிதம் அளவு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காதான் பிரதான இலக்கு. சுருங்கச் சொல்வதெனில் இந்திய பொருளாதாரம் அமெரிக்காவின் உள்ளங்கையில் இருக்கிறது. எனவே அமெரிக்கா சரிகையில் இந்தியாவும் சேர்ந்தே சரியும், தற்போது சரிந்து கொண்டிருக்கும் இந்திய ரூபாயைப் போல!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!