Politics

“ஒரே நாடு, ஒரே காவலர் சீருடை.. மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மோடி அரசு” : எச்சரிக்கும் ஜவாஹிருல்லா !

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல் என பிரதமரின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரியானா மாநிலத்தில் சிந்தனை அமர்வு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற மாநில உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி நாடு முழுவதும் காவல்துறைக்கு ஒரே சீருடை இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார். அவரின் இந்த கூற்று மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

கூட்டாட்சி தத்துவத்தை முன்னெடுக்காமல் மாநிலங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இதனை நாம் பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு மாநிலமும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் பெரும் முனைப்போடு தான் செயலாற்றி வருகின்றன. இந்தியாவில் மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பாகுபாடுகள் உள்ளன. வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பதே இந்திய மக்களின் சிறப்பு இயல்பு.

மேற்குவங்க காவல்துறையின் சீருடை வண்ணம் வேறு தமிழ்நாட்டில் காவல்துறையின் சீருடை வண்ணம் வேறு. தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பணி காவல் துறையின் சீருடை வண்ணம் வேறு. தமிழகத்தில் பாமர மக்கள் கூட சட்டம் ஒழுங்கு காவலரையும் போக்குவரத்து காவலரையும் சீருடை வண்ணங்களை வைத்து மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.

இத்தகைய சூழலில் பிரதமர் முன்மொழிந்துள்ள ஒரே நாடு, ஒரே காவலர் சீருடை என்பது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல் ஆகும். இந்த முயற்சிக்குத் தமிழகம் உள்ளிட்ட மாநில சுயாட்சி தத்துவத்தை முன்னிறுத்துகிற அனைத்து மாநிலங்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.