Politics
“மக்கள் பிரச்னைக்காக போராடாமல், இருக்கைக்காக போராடுகின்றனர்..” - இபிஎஸ், ஓபிஎஸ்ஸை சாடிய உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்பள்ளிப்பட்டு என்ற கிராமத்தில் தி.மு.க இளைஞர் அணி சார்பில் ‘திராவிட மாடல் பாசறை’ கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தை, சென்னையில் ஜூன் 5-ம் தேதி தொடங்கினோம். திராவிட இயக்கத்தின் கொள்கை மற்றும் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். ஒவ்வொரு தொகுதியாக பயிற்சி பாசறை கூட்டத்தை நடத்த வேண்டும். 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பாசறை கூட்டத்தை நடத்தி முடித்து, ஒவ்வொரு ஒன்றியம், பேரூராட்சி மற்றும் கிராமங்களில் திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்த உள்ளோம்.
திராவிட மாடல் பயிற்சி பாசறை ஏன் அவசியம் என கேட்கப்படுகிறது. மத்தியில் பா.ஜ.க அரசு ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவை தமிழக மக்கள் விரட்டி அடித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தலைவர் மு.க.ஸ்டாலின் தேடி தந்துள்ளார்.
இந்தியா முழுவதும் வெற்றியை பெற்ற பாஜக, தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. திமுகவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக அரசு, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை வழங்க மறுக்கிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழியை முன்னிலைப்படுத்த வேண்டும் என குடியரசு தலைவரிடம் அளித்த பரிந்துரையை முதலில் எதிர்த்து, அதனை திரும்ப பெற வேண்டும் என்றவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும்தான், நாம் குரல் கொடுக்கிறோம். இந்தி மொழியை தமிழகத்தின் உள்ளே திணித்து விட வேண்டும் என பாஜக முயற்சி செய்கிறது.
திமுக இருக்கும் வரை, இந்தி திணிப்பு நடைபெற விடமாட்டோம். இந்தி எதிர்ப்பில் உருவானதுதான் திமுக. இந்தி திணிப்புக்கு எதிர்த்து பல உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்தி திணிப்பை திமுகவும், தமிழக மக்களும் தொடர்ந்து எதிர்ப்போம்.
தமிழகத்தில் அதிமுக பழனிசாமியோ பன்னீர்செல்வமோ ஆட்சி நடத்தவில்லை, தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டார். தமிழகத்துக்கு வரும்போது எல்லாம் திருக்குறளை பற்றி பிரதமர் மோடி பேசுவார். ஆனால், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எந்த நன்மையும் செய்யமாட்டார்.
முன்பெல்லம் திமுகவா, அதிமுகவா என்ற பேச்சு தான் இருந்தது. ஆனால் இப்போது ஆரியமா, திராவிடமா என அதிகம் பேசப்படுகிறது. திராவிட கொள்கைகளை ஊர் ஊராக பிரச்சாரம் செய்து தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாதுரையும், திரைப்பட வசனத்தால் கருணாநிதியும் கொண்டு சேர்ந்தனர். இளைஞரணி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு சென்று சேர்த்தார்.
கொள்கை இல்லாத கட்சி தான் அதிமுக. வலிமையான தலைமை இல்லாததால் அதிமுக நான்காக பிரிந்து கிடக்கிறது. இந்தி திணிப்பை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, டெல்லியில் உள்ளவர்கள் கோபித்து கொள்வார்கள் என்பதால் அதிமுக வெளிநடப்பு செய்தது.
மக்கள் பிரச்னைக்காக போராடாமல், இருக்கைக்காக போராடுகின்றனர். அதிமுக அலுவலகமே கமலாலயமாக மாறிவிட்டது. 2019 மற்றும் 2021-ல் நடைபெற்ற தேர்தல்களில் பெற்ற மிகப் பெரிய வெற்றியை போல், அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை மீண்டும் பெற வேண்டும்” என்றார்.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !