Politics

“வழக்கை போட்டால் அடங்கிவிடுவான் என நினைக்கிறார்கள்.. 2G வழக்கை சந்திக்க தயார்” : ஆ.ராசா MP ஆவேச பேச்சு !

உதகை சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் துணைப் பொதுச் செயலாளராக இரண்டாம் முறை அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றபின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா அவர்களுக்கு உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் பா.மு. முபாரக் தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, “ தமிழகத்தில் தற்போது சிறப்பான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என்ற உணர்வோடு பாடுபட வேண்டும்.

தமிழகத்தில் 40 எம்.பி-க்கள் தி.மு.க சார்பில் வெற்றி பெற்றுவிட்டால், இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பது நமது முதலமைச்சர் மு,க,ஸ்டாலின் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மாநிலத்தில் நம்முடைய ஆட்சியாக இருந்தும், ஒன்றியத்திலும் நம்முடைய கூட்டணி ஆட்சியாக இருந்தால் தமிழ்நாட்டில் அனைத்து வளங்களும் கிடைக்கும்.

என் மீது 2015ல் 2G என்ற ஒரு வழக்கைப் போட்டனர், அதில் ஒன்றுமே இல்லை என ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, தற்போது என்னை அடக்குவதாக நினைத்துக்கொண்டு வழக்கை மீண்டும் தூசி தட்டியுள்ளனர். இப்படியெல்லாம் ஒரு வழக்கை போட்டால் ராசா அடங்கி விடுவான் என நினைக்கிறார்கள். இந்த வழக்கையும் சந்திப்பேன்.

கூடலூர் பகுதி மக்களின் நீண்டகால பிரச்சனையான பிரிவு - 17 நில பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும். அதேபோல் நீலகிரியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஒருமுறை வரைமுறைபடுத்தும் திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கூடலூரில் மின்சாரம் இல்லாத 10 ஆயிரம் வீடுகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் விரைவில் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர்கள் பாபு சேகர், ஒன்றிய செயலாளர்கள் லியாக்கத் அலி, சிவானந்தராஜா, சுஜேஷ் .தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா உட்பட திமுக முன்னணியினர் பங்கேற்றனர்.

Also Read: “ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை” : வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!