Politics

“மோடியே, அமித்ஷாவே.. இங்கெல்லாம் உங்க பருப்பு வேகாது..” - இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி MP !

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு பல இன்னல்கள் கொடுத்து வருகின்றன. மேலும் மாநிலங்களின் உரிமைகள், விவசாய பிரச்னை, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் பல கேடு விளைவிக்கும் செயல்களை முன்னெடுத்து வருகிறது.

அதில் ஒன்று தான் 'புதிய கல்வி கொள்கை'. ஒன்றிய அரசு இந்த கல்விக் கொள்கை மூலம் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறது. இதனை கண்டித்து பல்வேறும் மாநிலங்களின் எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அதோடு அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பரிந்துரையை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது. அதில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என்ற நோக்கமும் இடம்பெற்றுள்ளது.

இதற்கு தற்போது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன. மேலும் மேற்கு வங்கம் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை எடுத்திருக்கும் நிலையில், கேரள முதல்வர் இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தி என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் ஒன்றிய அரசின் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை ஏற்று தி.மு.க. இளைஞர் அணியும்-மாணவர் அணியும் இணைந்து, இன்று காலை 9.00 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற்று வருகிறது.

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையேற்று, தயாநிதி எம்.பி., உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க எம்.பி., தயாநிதி மாறன் மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " ஓவ்வொரு முறையும் எங்களது மொத்த தமிழ் உணர்வை தூண்டி வரும் மோடி மற்றும் அமிதாஷாவிற்கு நன்றி. தேர்தல் வரும்போதெல்லாம் மதம் மற்றும் மொழியை பா.ஜ.க கையிலெடுக்கும். 2024 தேர்தலை கருத்தில் கொண்டு இந்தி மொழியை கையிலெடுத்துள்ளது.

நாளை மத்திய பிரதேசத்தில் மருத்துவம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்தி மொழி புத்தகத்தை அமித்ஷா வழங்கவுள்ளார். இன்று இந்தியாவில் தலைசிறந்து விளங்கும் மாநிலங்கள் எல்லாம் இந்தி மொழி பேசாத மாநிலங்கள்தான்.

அண்ணா, கலைஞர் போன்றவர்கள் ஏற்றிய இந்தி எதிர்ப்பை தற்போது உதயநிதி ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார். மோடியே, அமித்ஷாவே தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகாது.., வேகவே வேகாது..!" என்றார்.

Also Read: இந்தி திணிப்பை எதிர்த்து கிளர்ந்தெழுந்த தமிழ்நாடு.. உதயநிதி ஸ்டாலின் MLA தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!