Politics

நவ. 12 இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்.. குஜராத்தில் எப்போது?: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு இதோ!

இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க-வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் உள்ளார். இந்நிலையில் 68 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப் பேரவை பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், குஜராத் மாநிலத்திலும் 182 சட்டசபை தொகுதிகளுக்கான பதவிக் காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இம்மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது.

இந்த இரண்டு மாநிலங்களும் டிசம்பர் மாதத்துடன் பதவி காலம் முடிவடைவதால் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்திற்கான சட்டப் பேரவை தேர்தலுக்கு மட்டுமே தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்திற்குப் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து டெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

வேட்பு மனுத் தாக்கல் அக் 17ம் தேதி தொடங்கி அக். 25ம் தேதி நிறைவடையும். மனுக்கள் மீதான பரிசீலனை அக். 27ம் தேதி நடைபெறும். அக். 29ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும்" என தெரிவித்தார்

இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் என இருமுனை போட்டிகள் இருந்த வந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: GST வரியால் விவசாயிகள் நிலை மோசமடைந்துள்ளது"-மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் குதித்த RSS விவசாய சங்கம்!