Politics

"சொல்லாததையும் செய்து காட்டுபவர் தான் முதல்வர்.." - தி.மு.க எம்.பி கனிமொழி பெருமிதம் !

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், தி.மு.க சார்பில், பகுதி கழக செயலாளர் கார்த்திக் செல்வராஜ் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், தி.மு.க துணைப்பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக அவர் பேசுகையில், தான் துணைப்பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்பு முதல் கழக நிகழ்ச்சியாக நான் பங்கேற்று உள்ளேன். இதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எந்த அளவிற்கு நம் அரசு மக்களுடைய குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறது என்பது அனைவரும் தெரியும்.

அதேசமயம், கடந்த ஆட்சியின் குறைகளையும் தற்போது தி.மு.க அரசு சரி செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகள் நடைபெற்ற பிரச்னைகள் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் பொறுப்பேற்ற நாளிலிருந்து தி.மு.க ஆட்சியில் முதல்வர் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

மக்களுக்கு என்ன வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்ததற்கு முன்பாகவே நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தி.மு.க அரசிற்கு, இலவச பேருந்து பயணத்திற்கு பெண்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. ஆனாலும், பேருந்தில் இலவச கட்டணத்தை வழங்கினார் முதல்வர். பெண்கள் தன்னம்பிக்கையோடு வேலை செய்து வருகிறார்கள். அதற்கு வாய்ப்பு கொடுத்தது திராவிட முன்னேற்ற கழகம்.

உயர்கல்வி படிப்பதற்காக பெண்கள் எவ்வளவு நாள் படித்தாலும் மாதம் ஆயிரம் ரூபாய் அரசு நமக்காக உருவாக்கித் தந்துள்ளது. பெண்களின் தன்னம்பிக்கை கனவு பறிபோக கூடாது; அவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காகவும் பள்ளிகளில், பசியோடு படிக்க கூடாது என்பதற்காகவும் காலை உணவு திட்டத்தை உருவாக்கி தந்திருக்கிறார் முதல்வர்.

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் வேலைவாய்ப்பு வளர்ச்சி அடைய வேண்டும் என அனைத்து பகுதிகளிலும் தொழில் முதலீடுகள் கொண்டு வர வேண்டும் எனவும், வளர்ச்சி பெற வேண்டும் என்ற முனைப்போடு லட்சக்கணக்கான முதலீடுகளை கொண்டு வந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் முதலீடுகளை கொண்டு வந்துள்ளது தி.மு.க ஆட்சி.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராட கூடிய ஆட்சி இது. எனவே முதல்வரோடு நின்று நம்முடைய எதிர்கால திட்டத்திற்காக சுயமரியாதையுடன் அவர் வழியில் பயணிக்க வேண்டும் என்றார்.

Also Read: "மீண்டும் மொழிப்போர் வந்துவிடக்கூடாது என்பதால் தான் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்" -கனிமொழி MP பேட்டி