Politics

"வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் ஒன்றிய அரசின் சாயம் வெளுத்து விடும்"-திமுக MP விமர்சனம் !

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக கட்டாயம் இந்தி இடம்பெறவேண்டும்.கல்லூரிகளில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை கொண்டு வர வேண்டும்.போட்டி தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள்கள் நிறுத்தப்பட வேண்டும். போட்டி தேர்வுகளில் இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும்.இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்கள் இந்தி அறிவை உறுதி செய்ய வேண்டும் போன்றவை இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராச்சாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூரிய நாராயணன் சாலை உள்ளிட்ட நான்கு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கலாநிதி வீராச்சாமியின் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆங்கிலம் என்பது இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் அந்தந்த மாநிலங்கள் விரும்பும் வரை இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் மாற்று மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசு முயற்சிக்கிறது

வட இந்தியாவில் இருப்பவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலகத்தில் என்ன நடக்கிறது என்பது அறிந்து கொண்டால் அவர்கள் சாயம் வெளுத்து விடும் ஆங்கிலம் தெரியாமல் இருக்கும் வரை தான் அவர்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

ஹிந்தி மட்டும் அறிந்தவர்கள் உலகத்தை அறிய மாட்டார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள் மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது நாம் அறிந்து கொண்டிருக்கின்றோம் ஆனால் அவர்கள் அதை பார்த்து புரிந்து கொள்ளாத நிலையில் தான் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக தான் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். ஹிந்தியில் கம்ப்யூட்டர் மவுஸ் ஹார்டுவேர் என எந்த சொற்களும் இல்லை ஆக மொழியை வளர்க்க முடியாத நீங்கள் எப்படி மொழியை கொண்டு வருவீர்கள்?" எனக் கூறினார்.

Also Read: “ஆரியப் பித்தலாட்டங்களுக்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான்”: ஆளுநருக்கு முரசொலி பதிலடி!