Politics

'பிரதான் மந்திரி' திட்டத்தில் ஒன்றிய அரசை விட மாநில அரசின் பங்கே அதிகம்.. -அமைச்சர் PTR விளக்கம் !

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, தற்போது 95% பணிகளை நிறைவடைந்து (உண்மையாகவே ) திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை சுற்றுசுவரோடு நிற்கிறது.

ஒன்றிய அரசின் இந்த பாகுபாடுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தமிழக மக்களிடைய ஒன்றிய அரசுக்கு எதிரான நிலையை எடுக்கவைத்துள்ளது. இந்த நிலையில், மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட 2 எய்ம்ஸ் மருத்துவமனை கிளைகளில் ஒன்று திறக்கப்பட உள்ளதாகவும் மற்றொன்றில் செங்கல்லில் அடிக்கல் நாட்டியதோடு நிற்பதாகவும் விமர்சித்தார். இதன் மூலம் ஒன்றிய அரசு ONE SIDE GAME விளையாடுவதாகவும் கூறினார்.

மேலும், ஒன்றிய அரசின் திட்டங்கள் என்ற பெயரில் பிரதமரை மக்கள் மத்தியில் பிராண்டிங் செய்யும் வேலைகள் நடந்து வருவதாக விமர்சித்த அவர், பிரதான் மந்திரி என்ற பெயரில் தொடங்கும் திட்டங்களில், ஒன்றிய அரசின் பங்களிப்பைக் காட்டிலும் மாநில அரசின் பங்களிப்புத் தொகை தான் அதிகம் எனவும் விளக்கமளித்தார்.

ஆரம்பத்தில் 75 சதவீதம் பங்குடன் தொடங்கப்படும் ஒன்றிய அரசின் பல திட்டங்களுக்கு படிப்படியாக நிதி குறைக்கப்படுகிறது என்றும், மாநில அரசு 80 சதவீதம் நிதி வழங்கும் போது திட்டத்தின் பெயர் மட்டும் பிரதான் மந்திரி என்று உள்ளது என்றும் கூறினார்.