Politics
“தமிழ்நாட்டில் நின்று முறத்தை வீசுவதில் என்ன வீரமோ?” : ஆளுநர் தமிழிசை கேள்விக்கு ‘சிலந்தி’ பதில்!
கேள்வி:- தமிழ்நாட்டிலிருந்து ஒருகட்சியின் பத்திரிகையில் (முரசொலி) நான் அவமதிக்கப்பட்டதாக எழுதியுள்ளனர். நான் அவமதிக்கப்படவும் இல்லை, அலறவும் இல்லை என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளாரே?
சிலந்தி :- ஹைதராபாத்தில் அவர் அவமதிக்கப்பட்டதாக முரசொலி எழுதவில்லை . அவர் அப்படி கூறியதாக ஏடுகள், செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதைத்தான் முரசொலி சுட்டிக்காட்டியது. அம்மையார் பேசியதாக ஏடுகளில் வெளிவந்த செய்திகள் முழுவதையும் முரசொலி எடுத்துக் காட்டவில்லை . “ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை) மதிக்கப்படுவதில்லை.. பல விவகாரங்கள் குறித்து விவரங்கள் கேட்டால், அரசாங்கம் பதிலளிப்பதில்லை. ராஜ்பவன் தீண்டத்தகாத இடமாக மாறிவிட்டது" என்று அந்த நிகழ்ச்சியில் பேசியதாக “தி இந்து' ஏடு குறிப்பிட்டிருந்தது.
குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை ஆளுநர் மாளிகையில் தான் நடத்திய போது, தெலுங்கானா முதலமைச்சர் மட்டுமல்ல; ஒருமாவட்ட கலெக்டர் கூட அந்தவிழாவுக்கு வரவில்லை; எனக்கு மதிப்பு தராவிடினும் பரவாயில்லை; ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ற அளவில் அந்தப் பதவிக்காவது மரியாதை தந்திருக்க வேண்டாமா? - என்று திருமதி தமிழிசை கேட்டதாக அதே “தி இந்து' ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டுள்ளது)
இதனைத்தான் ஆளுநர், தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை சுட்டிக்காட்டி, அங்கலாய்த்துள்ளார் என முரசொலி எழுதியது. இவை எல்லாம் அவமதிப்பல்ல; என்று ஆளுநர் கூற இயலாது. தான் அவமதிக்கப்பட்டதாக, அதாவது ஆங்கிலத்தில் Humiliated என்ற வார்த்தையைப் பயன்படுத்திப் பேசியதையும் ஆளுநர் மறுக்கிறாரா? அந்தப் பேச்சு யூடியூப்' செய்தியில் அப்படியே இருக்கிறது.
ஒருவேளை ஆளுநர் தமிழிசைக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதனைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே? அம்மையார் எண்ணுவது போல அந்தப் பதவி உயர்பதவியாக இருக்கலாம்; ஆனால் அது நியமனப்பதவி. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, சில ஆளுநர்கள் விபரம் தெரியாமல் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசியல் சட்டம் இயற்றிய மேதைகள் பல்லை புடூங்கி வைத்துள்ளனர். பல் போன பொக்கை வாயைக் கொண்டு, கடித்துக் குதறிவிடுவேன் என்று மிரட்டினால், முடிவில் என்ன கதி ஏற்படும் என்பதைத்தான் தெலுங்கானா நிகழ்வுகள் விளக்கியுள்ளன! அதைத்தான் முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
கேள்வி:- இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால், அதை எப்படி தமிழ்நாட்டிலிருந்து மகிழ்வாக ஏற்க முடியும்? - என்று அதே பேட்டியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கேட்டுள்ளாரே?
சிலந்தி:- இப்படி எல்லாம் பேட்டி தருவதாலும், பேசுவதாலும்தான் நாம் அவரை ஒரு அப்பிராணி என எழுதிக்காட்டியிருந்தோம்! சென்ற இடத்தில் பிறந்த இடத்துக்கு நல்ல பெயர் வாங்கி வந்திருந்தால் சகோதரியை உச்சிமோந்து கொண்டாடுவதும், சென்ற இடத்தில் சண்டை போட்டு, ஏட்டிக்குப் போட்டியாக தாறுமாறாக நடந்து கொள்பவரைக் கண்டித்து புத்திமதி கூறுவதும் தமிழ்நாட்டுப் பண்பாடுதானே.
தமிழ்ப் பண்பாடு குறித்து தமிழிசை அவர்கள், தனது தந்தையிடம் முற்றிலும் கற்கவில்லையோ என்ற ஐயம்தான் நமக்கு அவர் கேள்வியிலிருந்து எழுகிறது!
கேள்வி:- புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சி பரம்பரையில் வந்தவள் நான், என திருமதி தமிழிசை வீரா வேசமாகப் போட்டி தந்துள்ளாரே?
சிலந்தி:- புலியை தெலுங்கானாவில் பார்த்து பயந்து ஓடிவந்துவிட்டு, தமிழ்நாட்டில் நின்று முறத்தை வீசுவதில் என்ன வீரமோ? ஆளுநர் திருமதி, தமிழிசைதான் விளக்க வேண்டும்.
- சிலந்தி
நன்றி : முரசொலி !
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!