Politics
“பதவி மோகத்தில் முந்திரிக்கொட்டை பேச்சு.. தமிழிசை திருத்திக் கொள்வது நல்லது” : வெளுத்து வாங்கிய சிலந்தி !
புதுவை மாநில மேதகு ஆளுநர் தமிழிசை, எல்லை தாண்டி தமிழகத்துக்குள் மூக்கை நுழைத்துப் பார்க்கிறார்; சமயம் கிடைக்கும் போது வாலை நீட்டி ஆழம் பார்த்திடவும் முயற்சிக்கிறார்!
தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ரவி அவரது எல்லைக்குள் வரம்பு மீறி செயல்படுகிறார் என்றால் தமிழிசை எல்லை தாண்டி வரம்பு மீறுவதும், வாலை நீட்டுவதும் தமிழக ஆளுநர் ரவிக்குக்குக் கூட கோபத்தை உருவாக்கக் கூடும்.
தமிழக பா.ஜக. தலைவராக தமிழிசை இருந்தபோது, இப்படி ஏதாவது எக்குபுக்காகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்; அப்போ தெல்லாம் தமிழ்நாட்டிலுள்ள 'மீம்ஸ் தயாரிப்பாளர்களெல்லாம் அவரைக் கிண்டல் அடிப்பதற்காக வடிவேலு, கவுண்டமணி காமெடி காட்சிகளின் கிளிப்பிங்குகளை வைத்துக் கொண்டு காத்திருப்பர். தமிழிசை பேட்டி வந்ததும், சகட்மேனிக்கு அவரைக் கலாய்த்து மீம்ஸ்கள் வெளி வரும்.
சகோதரி தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்த போது தமிழ்ப்பெண் ஒருவருக்கு ஆளுநர் பதவி கிடைத்துள்ளதே என்று, கட்சி மாச்சர்யம் மறந்து பலரும் சந்தோசம் கொண்டாடிய வேளையில், பல மீம்ஸ் தயாரிப்பாளர்களும் அதில் சந்தோஷப்பட்டபாலும் தங்களுக்கு இனி பெரிய அளவில் தகவல்கள் கிடைக்காமல் போய் விட்டதே என்று உள்ளுக்குள் சிறிது வருந்தியவர்களும் உண்டு
அவர்களது அந்தக் கவலைகளைத் தீர்க்கவோ என்னவோ தமிழிசை அவர்கள் மீண்டும் தமிழக அரசியலுக்குள் நுழைந்து தனது அரசியல் அரைகுறைத் தனத்தைக் காட்டிடத்துவங்கியுள்ளார்.
புதுவையில் தங்களது பா.ஜ.க.வின் கூட்டணி அரசு நடைபெறுகிறது என்பதை மறந்து, புதுவை மாநில அரசின் முதலமைச்சரை ஓரம் கட்டி, அங்கு முதலமைச்சர், அமைச்சர்களெல்லாம் இருக்கிறார்களா, அல்லது கவர்னர் ஆட்சி நடைபெறுகிறதா என்று மக்கள் எல்லாம் சந்தேகிக்கும் வகையில் எல்லை மீறிய செயல்களை செய்து வரும் ஆளுநர் தமிழிசை செயல்களால் மாநில முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கொதிப்படைந்துள்ளனர் என்ற செய்திகள் "கிசுகிசுக்களாக வெளிவருகின்றன! நெருப்பு இருக்கிறதோ, இல்லையோ நாமறியோம்! ஆனால் புகைச்சல் கிளம்பியுள்ளது!
"உப்புகண்டம் பறிகொடுத்த சுத்த சைவப் பெண்ணின் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி வகையறாக்கள் இருப்பதாகவும் செய்திகள் புதுவை மாநிலம் மட்டுமின்றி வெளியிலும் பரவத் தொடங்கியுள்ளன!
புதுவை ஆளுநரை ஆட்சி செய்ய விட்டுவிட்டு முதல் அமைச்சரும், மற்ற மற்ற அமைச்சர்களும் டம்மி பீஸ்களாக இருப்பதாக புதுவை மாநில மக்களே பேசிடும் அளவு நிலைமை அங்கு மோசமாகி வருகிறது; புதுவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடை வழங்கப்படாமல் இருப்பது குறித்தும், மதிய உணவு தரமற்று இருப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் வகையில் ஓர் சீர்கெட்ட நிலைமை புதுவையில் இருக்கிறது.
இவைகளை எல்லாம் கவனித்து சீர் செய்திடாது அந்த மாநிலத்து அரசியலை விட்டு விட்டு தமிழ்நாட்டுக்குள் நுழைந்து எல்லை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபவதை திருமதி தமிழிசை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்போது திருமதி தமிழிசையின் அரைகுறை அரசியல் அறிவில் எழுந்த கேள்வியைப் பார்ப்போம்.
- தமிழ்நாடு அரசு நவோதயாபள்ளிகளைத் திறப்பதை தடுப்பது ஏன்? நவோதயா பள்ளிகளில் எங்கே இந்தித் திணிப்பு? - என்று கேட்டுள்ளார். திரு குமரி அனந்தன் அவர்கள் தனது குழந்தையான இந்த அம்மையாருக்கு சிறு வயதில் பெயர் சூட்டும் போது, பெரும் தவறு இழைத்து விட்டார்; குமரி அனந்தனின் அணுவெல்லாம் உறைந்து கிடக்கும் தமிழ் மீது கொண்ட வற்றாதபற்றால், பாசத்தால் தனது மகளுக்கு "தமிழிசை என்று பெயர் சூட்டி, உச்சி மோந்தார்! ஆனால், அந்த 'தமிழிசை, இன்று பதவி மோகத்தில் இந்திக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் என்று அவர் அன்று எண்ணியிருக்க மாட்டார்!
“தமிழிசை இப்படி இந்தியிசை'யாக மாறி நவோதயா பள்ளிகளுக்கு நடையா வாடை விரிக்கும் என்று கனவுகூட கண்டிருக்க மாட்டார்.
திருமதி. தமிழிசையின் கூற்று ஏற்புடையது தானா? நவோதயா பள்ளிகளில் எங்கே இந்தித் திணிப்பு இருக்கிறது? - என ஒரு அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார் தமிழிசை.
தமிழ்நாடு இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த கொடுத்த உயிர்ப்பலிகள் எத்தனை என்பதை தமிழிசை அறியவில்லை என்றால் அவரது தந்தையாரிடம் கேட்டு தெரிந்துகொள்வது; நல்லது!
1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போர், தி.மு.கழகம் ஆட்சியில் அமர்ந்த பிறகும் தொடர்ந்தது. அந்த வரலாறு தெரியாமல் தமிழிசை பேசக்கூடாது: தமிழக மக்கள், மாணவர்கள், தமிழ்ப்பேரறிஞர்கள் அனைவரும் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பைத் தடுத்து நிறுத்தாவிடில் “தமிழ் இனி மெல்லச்சாகும் என்று தமிழ்காக்க எல்லாவிதத்தியாகத்துக்கும் தயார் என வெகுண்ட நிலையில்தான். அண்ணா தலைமையிலான தி.மு.கழக ஆட்சி தமிழகத்தில் 'இருமொழிக்கொள்கை தான் இனி- எனப் பிரகடனப்படுத்தியது!
இந்தியாவின் சுதந்திரப் போரின் வரலாற்றை ஒட்டியது தமிழ்நாட்டின் மொழிப் போர்! அந்தப் போர் நடந்த காலத்தில் தமிழிசை நான்கு வயது குழந்தை! அவருக்கு முழு விபரம் தெரிய நியாயமில்லை ; அவரது தந்தையாரைக் கேட்டால் தெளிவான விளக்கம் கிடைக்கும்!
திருமதி. தமிழிசைக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். முதலில் நவோதயா பள்ளிகளின் நதி மூலம், ரிஷி மூலத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தப் பள்ளிகளுக்கு அனுமதியே நுழைவுத் தேர்வு மூலம்தான்! அங்கேயே "சமூக நீதி அடித்துத் தரைமட்டமாக்கப்படுகிறது! ஏழைஎளிய மக்கள் வீட்டில் பயிற்சி பெற இயலாத நிலையிலுள்ள படிப்பறிவு அற்ற பாமர மக்களின் குழந்தைகள் அங்கு நுழைய முடியுமா?
அடுத்து நவோதயா பள்ளிகளில் இலவச சீருடை, பாடநூல்கள் இலவசம் இவையெல்லாம் தரப்படும் என்பது யாருக்கு?. ஆறாம் வகுப்பில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்குத் தான்! அந்த நுழைவுத் தேர்வில் யாரால் வெற்றி பெற முடியும்? தமிழிசை கூறுவாரா?
ஆங்கிலம், இந்தி தாய்மொழி என்பது எட்டாம் வகுப்பு வரைதான்! எட்டாம் வகுப்புக்குப் பின் ஆங்கிலமும், இந்தியும் தான் என்பது இந்தித் திணிப்பல்லவா?
பாவம் இதெல்லாம் தெரியாது அல்லது புரியாது. நுனிப்புல் மேய்ந்த நிலையில் திருமதி தமிழிசை பேசுகிறார்! பதவி மோகத்தில், தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவதை மேதகு புதுவை ஆளுநர் உணர்ந்து தன்னை திருத்திக் கொள்வது நல்லது!
"முந்திரிக்கொட்டை" பேச்சுக்கள் தனக்குத் தானே மூக்குடைபடும் நிலையை உருவாக்கிடும் என்பதை உணர்வாராக?
- சிலந்தி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!