Politics

“ஆளுநர்கள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்களா? - ஏன் தமிழ்நாட்டினுள் மூக்கை நுழைக்கிறார் தமிழிசை” : சிலந்தி !

பல்கலைக் கழகங்களை மேம்படுத்தவே ஆளுநர்கட்கு வேந்தர் பதவி வழங்கப்படுகிறது என்று புதுவை மாநில ஆளுநர் தமிழிசை தனது அரிய கண்டுபிடிப்பை ‘ட்விட்’ செய்த செய்தி ஊடகங்களில் வந்துள்ளது!

அம்மையார் ஜெயலலிதா ஒரு முறை சி.பி.ஐ. என்ன ஆகாயத்திலிருந்து குதித்ததா? என்று கேட்டார். அதே கேள்வியைத்தான் ஆளுநர் தமிழிசை அவர்கட்கும் வைக்க விரும்புகிறோம்.

பல்கலைக் கழகங்களை மேம்படுத்த ஆளுநர்கள் என்ன ஆகாயத்திலிருந்து குதித்தவர்களா? இதுதான் ஆளுநர் தமிழிசைக்கு நாம் எழுப்பிடும் கேள்வி! ஊழல் மற்றும் செக்ஸ் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சந்தி சிரித்த ஆளுநர்கள் பட்டியலே உண்டு.

அரசியலில் முழுமூச்சாக இறங்கும் முன்பு அவரது அப்பாவுடன் சேர்ந்து பேச்சுக் கலையை வளர்ப்பது எப்படி என்பது குறித்து அதற்கான தயாரிப்பு வேலைகளில் இருந்ததால் அதை எல்லாம் இன்றைய ஆளுநர் தமிழிசை கவனித்திருக்கமாட்டார் போலும்!

மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட கோனா பிரபாகர் ராவ் அந்தப்பல்கலைக்கழகத்தை எப்படி ‘மேம்படுத்தினார்’ என்பது நாடறிந்த விவகாரமல்லவா? அவர்மீது அதிகாரத்தைப் பயன்படுத்தி பணஆதாயம் (Monetary Gain) பெற்றதாக பல புகார்கள் இருந்த நிலையில் எம்.டி. (M.D.) தேர்வில் தலையிட்டது மட்டுமின்றி அந்த மாநில பல்கலைக் கழக துணை வேந்தர்களையும் மற்றும் பல்கலைக்கழக முக்கிய அதிகாரிகளையும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தவறு செய்ய தூண்டியது தொடர்பாக பதவி துறந்ததாக வந்த செய்திகள் - பல்கலைக் கழகங்களை ஆளுநர்கள் வேந்தர்களாகி மேம்படுத்திய விவகாரமா?

ஆந்திர பிரதேச ஆளுநராக இருந்த 86 வயதான பெரியவர் திவாரி பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரம் தொலைக்காட்சிகளில் வந்து அதனால் தனது ஆளுநர் பதவியை துறக்க வேண்டிய நிலை வந்ததே; அம்மையாருக்கு இது தெரிந்திருக்காதா? திவாரி போலிஸ் அதிகாரியாக இருந்து ஆளுநர் ஆனவரல்ல; பெரும் அரசியல் தலைவர்! பலமுறை முதலமைச்சராக விளங்கியவர். பல்கலைக்கழக வேந்தர் பதவி வழங்கப்பட்ட அந்த ஆளுநர் பல்கலைக் கழகத்தை ‘மேம்படுத்திய’ விதம் நாடெங்கும் முடை நாற்றம் அடித்ததே?

போலிஸ் அதிகாரியாயிருந்து ஆளுநர் ஆனவர்களும் இந்த பட்டியலில் உண்டு! கோவாவில் ஆளுநராக இருந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி வான்கோ, ‘அகஸ்தா ஹெலிகாப்டர் ஊழல்’ விவகாரத்தில் சிக்கியவர்தானே! அந்த குற்றச் சாட்டு தொடர்பாக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த விவகாரம், எப்பேர்பட்டவர்கள் பல்கலைக் கழகத்தை மேம்படுத்த ஆளுநர் ஆக்கப்பட்டார்கள் என்பதை உணர்த்தவில்லையா?

இளம் பெண்களைக் கொண்டு ராஜ்பவனில் ‘லேடிஸ் கிளப்’ நடத்திக் கொண்டிருக்கிறார் என்று மேகாலயா ஆளுநர் மீது ராஜ்பவன் ஊழியர்களே புகார் அனுப்பியதைத் தொடர்ந்து அந்த மாநில ஆளுநராக இருந்த சண்முகநாதன் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டதே. அந்தப் புகார்களில் உண்மையிருப்பின் இத்தகைய குணம் கொண்ட ஆளுநர்கள் வேந்தர் பதவி பெற்றால் எப்படி எல்லாம் பல்கலைக் கழகங்கள் மேம்பட்டிருக்கும் என்று எண்ணிப் பார்த்திருந்தால் தமிழிசை இப்படி பேசியிருப்பாரா?

வேறு மாநிலங்களுக்குச் செல்வானேன்! ஆளுநர் தமிழிசை அரசியல் நடத்தி வரும் தென்மாநிலங்களில் இருந்த ஒரு ஆளுநர் குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டிருந்த செய்தி இது! தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஆளுநரின் தவறான நடத்தை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் வந்துள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்படுகிறது.

அந்த ஆளுநர் ராஜ்பவனில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெறத் தொடங்கியுள்ளது. அந்த கவர்னர் யார் என்பதை மத்திய அரசு வெளிப்படுத்தவில்லை. -இதுதான் அந்த செய்தி! இப்படிப்பட்டவர்களும் வேந்தர் பதவியிலிருந்தது பல்கலைக் கழகங்களை மேம்படுத்தவா? என்று ஆளுநர் தமிழிசை தான் தெரிவிக்க வேண்டும். இத்தனை ஏன்? தமிழகத்தில் இருந்த ஆளுநர் மீது சில ஆண்டு களுக்கு முன் புகார் எழவில்லையா?

பேராசிரியை ஒருவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பெயர் இடம் பெற்று சில காலம் அது பூதாகரமாக ஏடுகள், ஊடகங்களில் வலம் வந்ததே! அந்த ஆளுநர் தேர்ந்தெடுத்த துணைவேந்தர் மீது அதிகார துஷ்பிரயோகம், பணி நியமனங்களில் பணம் பெற்றது.

கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாக பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களை பணி நியமனம் செய்தது போன்று பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதன்பேரில் ஒரு விசாரணைக் கமிஷனே அமைக்கப்பட்டு விசாரிக்குமளவு சென்றதே!

(கமிஷன் அறிக்கை நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளிவராமல் இருக்கிறது) வேந்தர் பதவி வகித்த ஆளுநர் மீதும், அவரால் துணைவேந்தர் பதவி பெற்றவர் மீதும் எழுந்த இந்தக் குற்றச்சாட்டுகள் பல்கலைக் கழகத்தை மேம்படுத்திய செயல்களா?

ஆளுநர் தமிழிசை தனது எல்லையைவிட்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குறித்து ‘டிவிட்’ செய்திருப்பதைத் தொடர்ந்தே அம்மையார் தெளிவு பெற மேற்கண்ட விளக்கங்களைத் தர வேண்டி வந்தது! புதுவை மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை பிரதமர் மோடியைப் போன்று கடற்கரைக்கு சென்று, அங்கு தேங்கிக்கிடக்கும் குப்பைகளை எடுத்து, சுவச்(ளுறiஉhh) புதுவையை உருவாக்குவது போல புகைப்படங்களுக்கு ‘போஸ்’ தந்து கொண்டு இருந்தவர் ஏன் அந்த வேலைகளை விட்டு விட்டு தமிழ்நாட்டினுள் மூக்கை நுழைக்கிறார் என்று புரியவில்லை!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்திட நினைப்பது மக்கள் விரோதச் செயல் என்பதை ஆளுநர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்!

தங்களை ஆளுநராக நியமித்த கட்சிக்கு நன்றியுணர்வு காட்டவேண்டும் என்ற நோக்கில் நியாயத்துக்கும் நீதிக்கும் எதிராக வரம்பு மீறி செயல்பட்டு, மக்களாட்சியின் மாண்பினை குலைத்துவிடக் கூடாது!

- சிலந்தி

Also Read: “OPS மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை? - பதில் அளிக்குமா பழனிசாமி கும்பல்” : சிலந்தி கட்டுரை!