Politics
அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்.. மூட்டை முடிச்சுடன் நாட்டை விட்டு தப்பி ஓடுகிறாரா கோத்தபய?
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்து வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தினமும் 15 மணி நேரத்துக்கும் மேல் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இப்படி இலங்கை மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலைக்குக் காரணமாக உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கோரி அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்கள் போராட்டத்தை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாததால் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், இடையில் பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே வந்த பின்னரும் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிகாலை முதலே பொதுமக்கள் அதிபர் மாளிகை நோக்கி குவிந்தனர்.
இந்த போராட்டத்தை முன்னிட்டு ஊரடங்கு நிலை அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், மக்கள் அதிபர் மாளிகையை நோக்கி அணிவகுத்தனர். சிறிது நேரத்தில் அதிபர் மாளிகையின் பாதுகாப்பு அரண் உடைக்கப்பட்டு மாளிகையின் முன்பகுதி பொதுமக்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
இதைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ பாதுகாப்பில் தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் மாளிகையில் இருந்து சொகுசு கார்கள் விமான நிலையம் நோக்கி சென்ற வீடியோ இணையத்தில் வெளியானது. இதனால் அதிபர் நாட்டில் இருந்து தப்பி செல்கிறாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இலங்கையில் இருந்து கிளம்பிய ராணுவ கப்பலில் சிலர் கடைசி நேரத்தில் ஏறியதாகவும், அது கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினராக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலையில் அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. உலகெங்கும் இனவாத,மதவாத அரசியல் செய்பவர்களை இறுதிக்கட்டத்தில் மக்கள் அடித்து விரட்டும் நிலை ஏற்பட்டிருப்பது வலதுசாரி அரசியல்வாதிகளை பீதியடைய வைத்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!