Politics

GST வரி விதிப்பில் மோடி அரசு இழைத்திருக்கிற அநீதி கொஞ்சம் நஞ்சமல்ல.. கடுமையாக எச்சரிக்கும் தீக்கதிர் ஏடு!

ஜி.எஸ்.டி முறைமையானது மாநிலங்களின் உரிமைகளுக்கும், கூட்டாட்சி விழுமியங்களுக்கும் ஊறு விளைவிக்கிறது. எனவே ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடு நீட்டிப்பை உறுதி செய்வதே நியாயம் என ‘தீக்கதிர்’ நாளேடு 4.7.2022 தேதியிட்ட இதழில் “மாநிலங்களின் ஒருமித்த குரல்’’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அது வருமாறு:

ஜி.எஸ்.டி முறைமை கூட்டாட்சி விழுமியங்களுக்கு எதிராக இயங்குகிறது என்பதை சமீபத்திய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டமும் நிரூபித்துள்ளது. என்றாலும் மாநிலங்கள் ஒன்றுபட்டு எழுப்பிய குரல் குறிப்பிடத்தக்க ஒன்று.

101 வது அரசியல் சாசன சட்டம், பிரிவு 18 இன் படி இம்முறைமை அமலுக்கு வந்த தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளின் வருவாய் உயர்வு 14 சதவீதம் ஆக இருப்பதற்கு பாதுகாப்பு வழங்கப்படும்; குறைந்தால் ஒன்றிய அரசு ஈடு கட்டும்; அடிப்படை ஆண்டாக 2015- 16 ஆக இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த இழப்பீடு “ராஜ்யம்” எதிர் வரும் ஜூன் 30 உடன் முடிகிறது. இந்த இழப்பீடு முறை தொடர வேண்டும் என்பதே மாநிலங்களின் கோரிக்கை. 16 மாநிலங்கள் விவாதத்தில் கலந்து கொண்டதில் 12 மாநிலங்கள் இழப்பீடு முறைமை தொடர வேண்டும் என்று வலியுறுத்தின என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐந்தாண்டுகள் எனபதுதானே சட்டம், எப்படி நீட்டிப்பு கேட்கிறார்கள் என்று கேள்வி எழுப்புபவர்கள் உண்டு. மாநில அரசுகள் தங்கள் வரி போடும் அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் போது அவர்களது வருவாய் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதமே இந்த இழப்பீடு முறைமை.

ஆனால் ஒன்றிய அரசு இந்த காலத்தில் மாநில அரசுகளுக்கான வரி பகிர்ந்தளிப்பில் இழைத்திருக்கிற அநீதி கொஞ்சம் நஞ்சமல்ல. வரிகளை செஸ், சர்சார்ஜ் என்ற வகையில் விதித்தால் மாநிலங்களுக்கு வரிப் பங்கை தர வேண்டியதில்லை என்ற வழியை கையாண்டுள்ளது. இதனால் மாநிலங்கள் வருவாய் பாதிப்பால் திணறுகின்றன.

இரண்டாவது கோவிட் பேரிடர். பெருமவில் பொருளாதார பாதிப்புகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. மாநிலங்கள் வெளியே கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளும் கடுமையாக உள்ளன. ஆகவேதான் கட்சி வேறுபாடு இன்றி மாநிலங்கள் அநேகமாக ஒரே குரலில் பேசியுள்ளன.

பல மாநிலங்கள் இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிப்பு கேட்டுள்ளன. மிக மிகச் சில மாநிலங்களே “எங்கள் சொந்தக் கால்களில் நிற்போம்” என்று வித்தாரம் பேசி யுள்ளன. கூட்டாட்சி அமைப்பில் “சொந்தக் கால்” என்ற வாதம் பொருந்தாது. ஒன்றியம் என்பதே மாநிலங்களின் இணைவில் உருவானதுதானே.

வேறு முன் மொழிவுகளும் விவாதத்தில் வந்துள்ளன. மத்திய ஜி.எஸ்.டி - மாநில ஜி.எஸ்.டி பகிர்வு விகிதம் மாற்றப்படலாம் என்பதே அது. கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தற்போதைய 50:50 க்கு பதிலாக 40:60 என்ற ஆலோசனையை முன் வைத்துள்ளார். சத்தீஸ்கர் நிதியமைச்சர் ஒரு படி மேலே போய் 30: 70, 20: 80 வரை பேசி உள்ளார்.

ஒரு உண்மை தெளிவாக முன்னுக்கு வந்திருக்கிறது. ஜி.எஸ்.டி முறைமையானது மாநிலங்களின் உரிமைகளுக்கும், கூட்டாட்சி விழுமியங்களுக்கும் ஊறு விளைவிக்கிறது என்பதே. ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி இழப்பீடு நீட்டிப்பை உறுதி செய்வதே நியாயம்!

Also Read: நாமக்கல் மாநாடு: கொள்கை தொடங்கி நடைமுறைச் சிக்கல்கள் வரை அனைத்துக்கும் தீர்வு சொன்ன முதல்வர் - முரசொலி !