Politics

‘ஆட்டுக்கு தாடி; நாட்டுக்கு ஆளுநர்?’ - ஆளுநருக்கு எதிராக கலகக்குரல் எழுப்பும் மாநில அரசுகள்: என்ன காரணம்!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, தங்களால் ஆட்சியை பிடிக்க முடியாத மாநிலங்களில் தங்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை வைத்து பல்வேறு இடையூறுகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலஙளில், ஆளுநருக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டி ஆட்சி செய்த அ.தி.மு.க ஆட்சி, மோடி அரசுக்கு இணக்கமாக செயல்பட்டதால், ஆளுநர் மூலம் பறிக்கப்பட்ட தமிழ்நாடு உரிமைகளை கேள்வி எழுப்ப முடியாத நிலையே முதலமைச்சர் இருந்துவந்தார். இதேபோல், தமிழ்நாடு தவிர இதர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கட்டவர்கள் அம்மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.

குறிப்பாக கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான், அம்மாநில இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார். இதனால் ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான அரசு, ஆளுநரை நீக்குவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் எனக் கலகக்குரல் எழுப்பியது.

அதேபோல், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஆளுநர் ஜகதீப் தன்கர், மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் ஆளுநருக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இடையே பனிபோர் மூண்டதாக ஊடங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இதனிடையே ஆளுநர் அழைத்திருந்த விருந்து ஒன்றிற்கு செல்லாமல் விருந்தை மம்தா புறக்கணித்தது அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் மகாராஷ்டிரா, தெலுங்கனா மற்றும் ஜம்மு - காஷ்மீர் என ஆளுநர்களின் தலையீடு குறித்த பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க தலைமையிலான அரசிடம், தனது அலட்சியைப்போக்கை கையில் எடுத்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. குறிப்பாக தமிழ்நாடு நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அனுப்பிய மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

பின்னர், 142 நாட்களுக்கு பிறகு, மீண்டும் ஒப்புதல் கொடுக்கப்படாமல் மசோதா திருப்பி அனுப்பட்டது. மற்றொருமுறை நடைபெற்ற சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அப்போது, நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு காலம் தாழ்த்தாமல் அனுப்பிவைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக கொண்டு இந்த சந்திப்பினை நிகழ்த்தினர்.

மேலும் நீட் விலக்கு மசோதா மீது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும், பேரவையின் மாண்பையும் ஆளுநர் உணர்ந்து செயல்பட வேண்டும். அதேவேளையில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்படுவதால் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாகவும், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழா மற்றும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்கமாட்டார். மக்களாட்சி மாண்பின் அடையாளமான சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் அலட்சியப்படுத்துவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் தொடர்ச்சியாக இந்தி திணிப்பு, மொழி தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றி அறியாமல் கருத்து சொல்வதையே வாடிக்கையாக வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தமிழ்நாடு அரசின் இத்தகைய அறிவிப்புக்கு, தோழமை மற்றும் எதிர்க்கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

முன்னதாக “பேரறிஞர் அண்ணா அவர்கள், 30.3.1967 அன்று பேரவையில், “ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய போது, ‘கவர்னர் பதவியே வேண்டாமென்று முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன நேரத்தில் அது ரொம்ப பைத்தியக்காரத்தனம் என்று பேசிக் கொண்டிருந்த அரசியல் வட்டாரத்தில் ஒரு பகுதி இன்றைய தினம் அதே கண்ணோட்டத்திற்கு வந்திருப்பதற்காக நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.

அதேபோல், ஆளுநர் பதவி குறித்து பேரறிஞர் பெருந்தகை ஒற்றை வரியில் சொன்னார்.. ‘ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?’ என்று! ”. இந்நிலையில் மீண்டும் அதே முழக்கத்தை இன்றைய எதிர்க்கட்சி மாநில அரசுகள் முழங்கி வருகின்றனர்.

Also Read: “கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார்?” - பொய்ப் பிரசாரங்களை உடைக்கும் கட்டுரை!