Politics

சட்ட விதிமுறைகளை மீறிய ஆளுநர் - ‘நீட்’க்கு எதிராக தமிழ்நாட்டு மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியதன் மூலம் தன் கடமையை செய்யாமலும், காலம் தாழ்த்தியும் தமிழக மக்களை அவமானப்படுத்தி விட்டார் என தமி ழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ‘தினகரன்’ நாளேடு தனது 5.2.2022 தேதிய நாளேட்டில் ‘ஓங்கி ஒலிக்கட்டும்’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.

அது வருமாறு:-

”நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கிறார். நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் உச்சபட்ச அதிகாரம் பெற்ற அமைப்பு நாடாளுமன்றம் மட்டுமே. அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே ஜனாதிபதியின் வேலை. ஒருவேளை, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதி திருப்பி அனுப்பினால், ஒன்றிய அரசு, அந்த மசோதாவில் திருத்தம் செய்தோ அல்லது அப்படியே மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்பலாம். அப்படி இரண்டாவது முறை, வரும் மசோதாவுக்கு, அவர் ஒப்புதல் அளித்துதான் ஆகவேண்டும்.

நாடு தழுவிய ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு இதுதான் நடைமுறை. இதேபோல், மாநில அரசுகளும், மாநில பட்டியலில் உள்ள விவகாரங்கள் மற்றும் பொதுப்பட்டியலில் உள்ள விவகாரங்களில் சட்டங்கள் இயற்றலாம். இந்த சட்டங்கள், ஒன்றிய அரசின் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கும் பட்சத்தில், கவர்னரே ஒப்புதல் அளித்துவிடலாம். உதாரணம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ கலந்தாய்வில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா.

இல்லையெனில், அரசியலமைப்பு சட்டம் பிரிவு 254(2)-ன்படி, ஜனாதிபதிக்கு அனுப்பி, ஒப்புதல் பெறவேண்டும். அவர் மாநில அரசின் மசோதாவை பரிசீலனை செய்துவிட்டு, ஒப்புதலும் அளிக்கலாம், நிராகரிக்கவும் செய்யலாம். இதுபோன்ற விஷயத்தில் கவர்னின் வேலை என்பது, ஜனாதிபதிக்கும்-மாநில அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவதுதான். மாநில அரசின் மசோதா, ஒன்றிய அரசின் சட்டங்களை மீறுவதாக இருந்தால், அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்புவதுதான் கவர்னரின் பணி.

ஆனால், தற்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேர்எதிராக செயல்பட்டுள்ளதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கவர்னரின் இந்த செயல், சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என திமுக உள்ளிட்ட 99 சதவீத கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு குரல் கிளப்பியுள்ளன. தமிழக மக்களை, கவர்னர் அவமானப்படுத்திவிட்டார் என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர் அமைப்பினர், கவர்னருக்கு எதிரான அறவழி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது பற்றி விவாதிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா தவிர, மீதமுள்ள அத்தனை கட்சிகளும் ஒரு சேர பங்கேற்க உள்ளன. இது, தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிக்கு பெரும் வெற்றியாக அமைந்துள்ளது. இந்த கூட்டத்தில், ஒன்றிய அரசுக்கு எதிரான, தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரல் ஓங்கி ஒலிக்கும். அதன் அடிப்படையில் நீட் விவகாரத்தில் நல்லது நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: சமூக நீதி காத்திட அனைத்திந்திய கூட்டமைப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிகளுக்கு யெச்சூரி பாராட்டு!