Politics

போன ஆண்டு வேலை தூக்கிக்கொண்டு சுற்றித் திரிந்தவர்கள் இப்போ எதும் கவலைப்பட்டார்களா? - சேகர்பாபு நச் பதில்!

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த ஆய்வுப்பணி மற்றும் முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்றார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் பேசியதாவது,

"கோவில்களை திறக்க வேண்டும்" என பாஜகவை சேர்ந்தவர்கள் குரல் கொடுப்பது குறித்து கேட்டபோது, ஜனவரி 1ஆம் தேதி ஆண்டின் முதல் நாள் என்பதால், கொரோனா பரவல் இருந்த நிலையிலும் பொதுமக்கள் மனச்சோர்வு அடையக் கூடாது என வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முதலமைச்சர் அனுமதி அளித்தார்.

அதேபோல 3ஆம் அலை வேகமாக பரவிவரும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளனர். தைப்பூச நாளில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இறைதரிசனம் என்பதை இல்லங்களில் இருந்து மேற்கொள்ளலாம்; இறை தரிசனத்தை விட மனித உயிர் முக்கியமானது; அந்த உயிர் காப்பாற்றப்பட வேண்டும்; தொற்று பரவக்கூடாது என்பதால்தான் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆராய்ந்து, ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிய கோவில்களை மூடும் முடிவை எடுத்துள்ளோம்.

இத்தகைய கருத்துகளை சொல்லும் அரசியல் தலைவர்களிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், இதேபோல கடந்த ஆண்டு தைப்பூச நேரத்தில் வேலினை தூக்கிக் கொண்டு மாவட்ட மாவட்டமாக சுற்றி வந்தவர்கள், இந்த ஆண்டு வேலினை பற்றி ஏதாவது கவலைப்பட்டார்களா? வீரவேல் என்றார்கள், வெற்றிவேல் என்றார்கள், அந்த வேல்கள் தற்போது தமிழ்நாட்டில் எங்காவது காட்சிக்கு வந்ததா? ட்விட்டரில் போட்டோவை பரவ விட்டுக்கொண்டே இருந்தார்கள்.

Also Read: ”அரசியலில் அட்ரெஸ் தேடுவோருக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை” - ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

ஆனால் எங்கள் நிலைப்பாடு அது அல்ல. அனைத்து மதமும் சம்மதம்; இறை அன்பர்கள் விரும்புகின்ற, இறை வழிபாட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்தித் தரும் நோக்கம் கொண்டவர் தான் தமிழக முதலமைச்சர். அதனுடைய எடுத்துக்காட்டுதான் நேற்று இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒன்றே முக்கால் மணிநேரம் பங்கேற்று குறைகளை கேட்டது. ஆகவே ஆன்மீகவாதிகளுக்கு நல்லாட்சியாக திகழ முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்கள். கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அனைத்து திருவிழாக்களுக்கும் முதலமைச்சர் அனுமதி வழங்குவார்கள்.

வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதால் தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆன்மீக பெருமக்களை கலந்தாலோசித்த போது கும்பாபிஷேகத்தை தள்ளி வைப்பது ஏற்புடையது என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே கும்பாபிஷேகம் திட்டமிட்டபடி நடக்கும். அதில் அனைவரையும் பங்கேற்க வைப்பதா அல்லது குறிப்பிட்ட சிலரை மட்டும் அனுமதிப்பதா என முதலமைச்சரை கலந்தாலோசித்து நல்ல முடிவை அறிவிக்க இருக்கிறோம். இன்று முதலமைச்சரிடம் கும்பாபிஷேக பத்திரிகையை அளித்தோம். நல்ல முடிவை சொல்வதாக கூறியுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை முதலமைச்சர் அவர்கள், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்த கருத்து, அவரவர் விரும்பும் வழிபாட்டுக்கு எந்த வகையிலும் இடையூறு இருக்கக்கூடாது; சுதந்திரமாக ஈடுபட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.” என்றார்.

Also Read: கோயில்களில் வசதிகளை செம்மைப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம்-முக்கிய ஆலோசனை!