Politics
” ‘ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக’ காட்டிக் கொள்கிறார் போல” - பாஜக அண்ணாமலையை சாடிய ஆசிரியர் கி.வீரமணி!
"ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் வேறு உருவத்தில் வருமாம்! ‘அனுகூல சத்ருவா’ தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்?
தி.மு.க.வுக்கு அடுத்து பா.ஜ.க.தானாம் - ஆசைப்படலாம் அண்ணாமலை ஆனால், யதார்த்தம் கைகொடுக்காது!" என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்க அதன் புதிய தலைவர் அண்ணாமலை (அய்.பி.எஸ். - ஓய்வு) திசை தெரியாமல் திக்குமுக்காடுகிறார்; தெளிவற்ற அவரது பேச்சுகளுக்கு சில ஏடுகள் விளம்பரம் கொடுத்தாலும், அவை விழலுக்கிறைத்த நீராகவே ஆவது உறுதி!
தி.மு.க.வுக்கு அடுத்து பா.ஜ.க.தான் தமிழ்நாட்டில் வலிமையுள்ள கட்சியாக வரும் என்று தனது ஆசையை வெளியிட அவருக்கு உரிமை உண்டு என்றாலும், யதார்த்தம் அவருக்குக் கைகொடுத்து நிற்கவில்லையே! அதை யோசிக்க வேண்டாமா? ஆனால், தமிழ்நாட்டு மக்கள் புரிந்துள்ளார்கள்.
வேளாண் சட்டம் ரத்தும் - தேர்தல் கண்ணோட்டமும்!
மூன்று வேளாண்மைச் சட்டங்களை பிரதமர் மோடி, திரும்பப் பெறுவதாக திடீர் அறிவிப்புக் கொடுத்ததை - மனமாற்றம் என்பது அச்சட்டத்தில் உள்ள விவசாய விரோத அம்சங்களை உணர்ந்ததால் அல்ல; மாறாக, அடுத்து வரும் 5 மாநில தேர்தல்களில் பா.ஜ.க. படுதோல்வி அடையக் கூடும் என்ற அச்சத்தாலும், அரசியலில் ஏற்பட்ட பெகாசஸ் உச்சநீதிமன்ற விசாரணை ஆணை, ரஃபேல் விமான பேரத்தில் புதிதாக வெளிவந்துள்ள பல தகவல்கள் - இப்படிப் பல கடுமையான விமர்சனங்கள், காரணங்கள் என ஏடுகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன!
விவசாயிகளோ, பிரதமரின் மன்னிப்பை விட, உருப்படியான, ஏற்கத்தகுந்த அறிவிப்புதான் எங்களுக்கு முக்கியம்; நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை; வரும் நவம்பர் 29 ஆம் தேதி டில்லியில் பெரிய பேரணியை நடத்திடுவோம் என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் வேளாண் சட்டங்களின் சிறப்புகளை சிலாகித்துப் பேசியதோடு, மீண்டும் வேறு ரூபத்தில் மூன்று வேளாண் சட்டங்களும் வரும் என்று பேட்டி கொடுத்து, ‘ராஜவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக’ காட்டி, தனது பதவியை ஆடாமல் பார்த்துக் கொள்கிறார் போலும்!
சந்தேக மேகங்கள் - விவசாயிகள் மத்தியில் திரண்டுள்ள நிலையில், இப்படி இவர் பேசுவது, இவர் பா.ஜ.க.வின் தலைவரா? அல்லது எதிர்க்கட்சியினருக்கும், விவசாயிகளுக்கும் உதவும் ‘அனுகூல சத்ருவா?’ என்று கேட்கவே தோன்றுகிறது!
Also Read: “ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.164 கோடிக்கு ஊழல் செய்த மோடி அரசு” - புதிய குண்டு வீசிய ராகுல்!
‘எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது!’
தங்களிடமுள்ள குறைவான நிதி வருமான நிலையில், தி.மு.க. அரசு எதைச் செய்ய முடியுமோ, அதைச் செய்துவிட்ட நிலையில், தொடர் போராட்டம் நடத்துவோம் என்ற அறிவிப்பு, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வளர்ச்சி இத்தகைய போராட்டங்களால் அசல் கேலிக் கூத்தாகுமே தவிர, கைகொடுக்காது. ‘எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது!’
மாறாக, 2014 இல் மதுரையில் எய்ம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 7 ஆண்டுகளாகியும், மருத்துவமனையும் தொடங்கப்படவில்லை; ஒன்றிய அரசு அதற்கு நிதியும் ஒதுக்கியதாகத் தெரியவில்லை!
ஒரு செங்கல்லே தேர்தல் பிரச்சாரமாக - கடந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் நடத்தப்பட்டதே மறந்துவிட்டதா? அப்பிரச்சினைக்கு பா.ஜ.க. போராடலாமே!
ஏன் செய்யவில்லை? 700 பேர் மரணம் - ஓர் அனுதாபம் உண்டா?
செங்கற்பட்டு அருகே உள்ள மூடப்பட்டு இருந்த ஒன்றிய அரசின் தொழில் நிறுவனத்தை ‘ஆக்சிஜன்’ தயாரிப்பு தொழிற்சாலையாக மாற்றி நடத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தார்; தொழில்துறை அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் முறையே ஒன்றிய அமைச்சர்களிடம் வற்புறுத்தியும், அதுவும் ‘கிணற்றில் போட்ட கல்லாகவே’ இதுநாள் வரை இருக்கிறதே, அதுபற்றி போராட்டம் நடத்தலாமே, செய்தார்களா?
மழை, வெள்ள நிவாரணத்திற்கு அதிக நிதி உதவியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தரவும், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரவும் போராடலாமே?
இவர்களை மிஞ்சும் வகையில், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வினரும் இப்படி ஒரு விமர்சனத்தை மாநில அரசுக்கு எதிராக வைக்கிறார்கள்; வேறு யாருக்கும் புரியாத மூன்று வேளாள் சட்டங்களால் விவசாயிகள் மேன்மை - நலன்கள் அடைவார்கள் - ‘விவசாயிகளின் நண்பர் பிரதமர் மோடி’ என்று நற்சான்று அளிக்கிறார்கள்.
அறவழியில் ஓராண்டு போராட்டத்தின்போது 700 விவசாயிகள் மாண்டார்கள். பிரதமரிடமிருந்து ஓர் அனுதாபம் உண்டா?
அடிமைத்தனத்தின் பாசத்திற்கும் ஓர் எல்லையில்லையா?
50 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு நாளாவது, சில கிலோ மீட்டர் தூரம்தான் என்றாலும், ஒரே முறையாவது விவசாயிகளை பிரதமர் சந்தித்துப் பேசினாரா? என்ற விவசாயிகளின் கேள்விகளுக்கு ஒ.பி.எஸ். பதில் கூறுவாரா?
அடிமைத்தனத்தின் பாசத்திற்கும் ஓர் எல்லை இல்லையா? வேதனையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது நமக்கு; காரணம், இன்னமும் அவர்கள் நமது சகோதரர்கள்தானே!
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!