Politics

யோகி-ஷா’வாக மாறுகிறதா மோடி-ஷா கூட்டணி? - அமித்ஷா பேச்சால் பாஜகவில் சலசலப்பு - உ.பியில் நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலத்தில் 2022ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அங்கு இப்போது முதலே தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி கடந்த வெள்ளியன்று லக்னோ மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது கூட்டத்தின் போது பேசிய அவர், 2024ம் ஆண்டில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் எனில் 2022ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்யநாத்தையே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசியிருந்தார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு பாஜகவினரிடையே மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மோடி மீண்டும் பிரதமராவது ஏதோ யோகியின் கையில்தான் உள்ளது போன்று பொருள்பட்டதாக பாஜகவின் முக்கிய தலைகளிடம் ஐயப்பாட்டையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

மேலும் அமித்ஷாவே இவ்வாறு பேசியுள்ளது பாஜகவின் மேலிடம் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரையில் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது. இதனால் இது தொடர்பான விவாதங்களையோ செய்தியையோ பெரிதுபடுத்த வேண்டாம் என ஊடகங்களையும் பாஜக தரப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷாவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியதோடு இதுவரையில் மோடி-ஷா கூட்டணியாக இருந்தது யோகி-ஷா கூட்டணியாக மாறுவதற்கான உத்தியா எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Also Read: 13 மாநில இடைத்தேர்தலிலும் மண்ணைக் கவ்வும் பா.ஜ.க : 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கான முன்னோட்டமா?