Politics
கரூரில் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: விரைவில் கைதாகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் கடந்த 22 ஆம் தேதி மாவட்ட திட்ட அலுவலர் மந்தராச்சலம் தலைமையில் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய பிறகு, அதிகாரி மந்தராச்சலம் தேர்தலை ஒத்திவைப்பதாக கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் அங்கு இருந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் அதிகாரியின் காரை வழிமறித்து தேர்தல் ஒத்திவைக்க காரணம் என்ன? என விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் தலைமையிலான போலீசார் கூட்டத்தை கலைத்து அதிகாரியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சுமார் 50 பேர்களை போலீசார் கைது செய்து அன்று இரவு அவர்கள் அனைவரையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் மாவட்ட திட்ட அலுவலர் மந்தராச்சலம் அளித்த புகாரின் அடிப்படையில் கரூர் தாந்தோன்றிமலை போலீசார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் பேசுதல், சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் கரூர் மாவட்ட குழு உறுப்பினர் திருவிக , அவரது மகன் தமிழ்ச்செல்வன், கரூர் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் வார்டு செயலாளர் சுந்தர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் விரைவில் கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!