Politics

சிறையிலேயே மாதந்தோறும் ரூ.65 லட்சம் செலவிட்ட சுகேஷ்; சிக்கிய முக்கிய அதிகாரிகள் -திகாரில் என்ன நடக்கிறது?

இரட்டை இலை வழக்கின் முக்கிய குற்றவாளி சுகேஷ் சந்திர சேகருக்கு உதவியதாக டெல்லி திகார் சிறை கண்காணிப்பாளர்கள் இருவர் கைது.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்று கைதான சுகேஷ் 2017 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்தபடியே ரூ.200 கோடி மோசடியில் ஈடுபட்டதாக புதிய வழக்கில் சுகேஷும் அவரது மனைவியும் நடிகையுமான லீனா மரியாயும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இதற்காக சிறையில் சுகேஷ் தொலைப்பேசிகளைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போது, சிறை அதிகாரிகளுக்கு மாதந்தோறும் 65 லட்சம் ரூபாய் வரை செலவிட்டதாக சுகேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை நபர் ஒருவர் மூலமாக சிறைக்குள் பயன்படுத்த ஐ-போன் பெற்றதாகவும் சுகேஷ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தற்போது 2 சிறை கண்காணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சுகேஷ் முன்பு அடைப்பட்டிருந்த திகார் சிறை மற்றும் தற்போது வைக்கப்பட்டுள்ள ரோகிணி சிறை அதிகாரிகள் 9 பேரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 6 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சிறைத்துறை தலைவர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.200 கோடி மோசடி... 'இரட்டை இலை' சின்ன மோசடியில் சிக்கிய சுகேஷின் மனைவியை கைது செய்த டெல்லி போலிஸ்!