Politics

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எதற்கு இந்த கபட நாடகம்? - பாஜக அரசை கடுமையாக சாடிய தினகரன் நாளேடு!

"பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காமல் தேவையற்ற நாடகங்களை அரங்கேற்றி மக்களை ஏமாற்றுகிறது ஒன்றிய அரசு" என தினகரன் தலையங்கத்தில் கண்டனம் செய்துள்ளது.19.9.2021 தேதிய தினகரன் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

"விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அதை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவதுதான் ஒரே வழி என்பது போன்ற செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரம்புக்குள் இந்த இரு வாகன எரிபொருளும் வந்தால் பெட்ரோல் லிட்டர் 75 ரூபாயாகவும் டீசல் 68 ரூபாயாகவும் குறையும் என்றெல்லாம் கூற ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைக்கு பெட்ரோல், டீசல் இப்படி அநியாய விலைக்கு விற்கப்படுவதற்கு காரணமே ஒன்றிய அரசுதான் என்பது உலகறிந்த உண்மை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்தபோதும், அதன் பலனை மக்களுக்கு தராமல் உற்பத்தி வரியை அதிகரித்து கொள்ளையடித்தது ஒன்றிய அரசு.
கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு விதித்த உற்பத்தி வரி எவ்வளவு தெரியுமா? ரூ.17.46தான். இன்றைக்கு நாம் ஒவ்வொரு லிட்டருக்கு தரும் உற்பத்தி வரி ரூ.32.90, அதாவது 88 சதவீதம் அதிகம்.

2015ல் டீசல் லிட்டருக்கு ரூ.10.26 ஆக இருந்த உற்பத்தியை மோடி அரசு இப்போது ரூ.31.80 ஆக அதாவது 209 சதவீதம் அதிகரித்துவிட்டது. விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் என்று தெரிந்தும் இந்த வரி உயர்வு. நிதி நெருக்கடியை சமாளிக்க சாமானியனின் பர்ஸில் கைவைத்த மோடி அரசு, ஓராண்டில் 3.71 லட்சம் கோடி ரூபாயை இதன் மூலம் சம்பாதித்தது. மக்கள் படும் சிரமத்தை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெட்ரோலுக்கு மாநில அரசு விதிக்கும் வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைத்தார்.

மக்கள் நலனே பிரதானம் என்று நினைத்திருந்தால், ஒன்றிய அரசும் தன் பங்குக்கு வரியை குறைத்திருக்க வேண்டும். அதுவும் எவ்வளவு, கடந்த 5 ஆண்டில் பெட்ரோல் லிட்டருக்கு அதிகரிக்கப்பட்ட வரி ரூ.15.44ஐயும், டீசல் லிட்டருக்கு உயர்த்தப்பட்ட வரி ரூ.21.54ஐயும் குறைத்தாலே போதும். பெட்ரோல் லிட்டர் ரூ.83.52க்கும், டீசல் லிட்டர் ரூ.71.72க்கும் விற்கலாம். ஆனால், அதைச் செய்யாமல், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் என்று ஒன்றிய அரசு பூச்சாண்டி காட்டுகிறது. பெட்ரோல்-டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதில் பெரும் இழப்பு மத்திய அரசுக்குதான். மாநிலங்களுக்கும் கணிசமான இழப்பு ஏற்படும்.

இதனால், மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது ஒன்றிய அரசுக்கு தெரியும். ஆனாலும், மாநிலங்கள் எதிர்த்ததால், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர முடியவில்லை என்று ஜிஎஸ்டி நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். எதிர்பார்த்தது போலவே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பின் பெட்ரோல், டீசல் இப்போதைக்கு ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என்று கூறியிருக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் ஒன்றிய அரசுக்கு இருந்திருந்தால், உயர்த்தப்பட்ட உற்பத்தி வரியை குறைத்தாலே போதும். அதை செய்யாமல் இப்படி தேவையற்ற நாடகங்களை அரங்கேற்றி மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் இருக்கலாமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: இந்திக்காரர்களின் வாக்குகளை வாங்கி இந்தியாவை ஆளலாம் என்ற நினைப்பு எந்நேரமும் எடுபடாது - முரசொலி தாக்கு!