Politics

வானதி சீனிவாசன் கூட்டத்தில் பெண்ணை தாக்கிய பாஜக நிர்வாகிகள்: நிர்மலா சொன்ன பாதுகாப்பின் லட்சணம் இதுதானா?

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி நடைபெற இருக்கிறது.

அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அரசியல் கட்சிகளும் அது குறித்தான பணிகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில், பாஜக சார்பில் விருப்ப மனு பெறும் கூட்டம் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.

அதில், பாஜக மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று விருப்ப மனுக்களை அளித்தனர்.

கூட்டத்துக்கு பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, மீனாட்சி என்ற பெண்ணை பாஜகவினர் சிலர் தாக்கியதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து பலராமன் என்ற மாவட்ட தலைவர் பெண்ணை சமாளித்து அனுப்பி வைத்தார்.

இருப்பினும் சமாதானம் ஆகாத அப்பெண் மீண்டும் வந்து தன்னை தாக்கியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக மாவட்ட பாஜக தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

அண்மையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள ஒரே கட்சி என்றால் அது பாரதிய ஜனதா கட்சிதான் என பெருமிதமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.