Politics
“மோடி அரசின் ‘வாய்ச்சேவை’ தொழில்களைக் காப்பாற்றுமா?”: பா.ஜ.க வகையறாக்களை சாடிய கனகராஜ் - சிறப்பு கட்டுரை!
இந்தியாவிலுள்ள தனது உற்பத்தி ஆலைகளை மூடிவிடப் போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படி மூடுவதன் மூலம் சுமார் 3,300 நிரந்தரத் தொழிலாளர்களும் 40,000ற்கும் மேற்பட்ட துணைத் தொழில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
சுமார் 4,000 சிறுகுறு தொழில்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். சிலர் நிரந்தரமாக மூடவேண்டிய நிலை ஏற்படலாம். போர்டு நிறுவனத்திற்கான உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்வதற்காக பிரத்யேகமாக வாங்கப்பட்ட எந்திரங்கள் பயனற்றுப் போய்விடும். இந்த நிறுவனத் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள், உணவகங்கள், இவர்கள் குடியிருக்கும் வீடுகள் சிலர் வாங்கியிருக்கும் கடன்கள் இவை அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் மூன்றாவது வாகனத் தயாரிப்பு பன்னாட்டு நிறுவனம் ஃபோர்டு ஆகும். இதற்கு முன்பு ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகியவை இப்படி மூடிவிட்டுச் சென்றிருக்கின்றன.
தன்னுடைய தொழிற்சாலை மூடப்போவதை அறிவிக்கப் போகிறோம் என்று அந்த நிறுவனத்தின் தொழிலாளர் பிரதிநிதிகளிடம் அறிவிப்புக்கு 10 நிமிடத்திற்கு முன்பாக நிர்வாகம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு நிறுவனத்தை மூடுவதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய இந்திய சட்டங்கள் அனைத்தையும் தன் காலுக்கு கீழே போட்டு மிதித்துக் கொண்டுதான் அந்த நிறுவனம் மூடப்படுவதை இப்படி அறிவித்திருக்கிறது.
ஒரு தொழிற்சாலை மூடப்பட்டால் சங்பரிவார ஆதரவாளர்கள் சங்கம் வைத்ததால்தான் கெட்டுப் போய்விட்டது என்று ஒரு புளுகுமூட்டையை தூக்கிக்கொண்டு அலைவார்கள்.
இந்த நிறுவனத்தில் உள்ளீட்டு தொழிற்சங்கம் மட்டுமே உள்ளது. அந்த தொழிற்சங்கம் ஃபோர்டு நிறுவனம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் செயல்படும் தொழிற்சங்கத்தோடு இணைந்து செயல்படுகிறது. ஆனால், குஜராத்தில் சனத் என்கிற இடத்திலுள்ள தொழிற்சாலையும் மூடப்படவிருக்கிறது. அது சென்னையிலுள்ள தொழிற்சாலைக்கு முன்பே மூடப்படும். அது மாடல் மாநிலம் அல்லவா அதனால் மூடுவதிலும் மாடலாக விளங்குகிறது.
எனவே, சங்பரிவார் மூடுவது பற்றிய வழக்கமான தன்னுடைய கதாகால சேபங்களை சற்று மூடி வைத்திருப்பது நல்லது.
நிற்க...
25 ஆண்டு காலம் கடந்த பிறகு ஃபோர்டு நிறுவனம் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது. இந்த முடிவிற்கான காரணங்களாக விபரம் தெரிந்தவர்கள் கீழ்க்கண்டவற்றை முன்வைக்கிறார்கள்;
1. மின்சார கார்களுக்கு உடனடியாக மாறப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்தபோது, ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படாமல் இருக்கும் டீசல், பெட்ரோல் கார்கள் விற்கடாமல் போக சாத்தியமிருக்கிறது. எனவே, ஒன்று இப்படி மாறக்கூடிய காலத்தை நீட்டித்துச் சொல்ல வேண்டும் அல்லது உற்பத்தியாளர்களுக்கு மட்டும் உடனடியாகச் சொல்லி டீசல், பெட்ரோல் கார் உற்பத்திகளை குறைத்து நட்டம் இல்லாமல் மின்சார கார்களுக்கு மாற வேண்டும்.
இல்லையேல் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கார்கள் விற்கப்படாமல் மிகப்பெரும் நட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். தவிரவும், ஒருமுறை கார் வாங்குவோர் கார் வாங்கும் முடிவை தள்ளிப் போடுவார்கள். எனவே, மேற்சொன்ன ஆலோசனைகளில் இரண்டில் ஒன்றை அமல்படுத்த வேண்டும் என்றும் உற்பத்தியாளர்களும் துறை வல்லுநர்களும் சொன்னதை மோடி அரசு வழக்கம் போலவே கேட்கத் தயாராக இல்லை.
2. டீசல் கார்களின் விலை அதிகமாக இருந்தாலும் டீசலின் விலை குறைவாக இருந்த காரணத்தினால் பலரும் டீசல் கார்களுக்கு மாறிக் கொண்டிருந்த நேரத்தில் பெட்ரோல் விலைக்கு நிகராக டீசல் விலையை உயர்த்தியது, டீசல் கார்கள் விற்பனையில் ஒரு தேக்கத்தையும் வீழ்ச்சியையும் உருவாக்கிவிட்டது.
3. இந்திய கார்களுக்கான சில முக்கியமான உதிரிப் பாகங்கள் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. எந்த முன்யோசனையும் அற்றவர்கள் சீனாவுடன் சில வர்த்தக கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தததும், சீன எதிர்ப்பு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டதும், உரிய தயாரிப்புகள் இன்றி ஆத்ம நிர்பார் அத்தனையும் இந்தியாவுக்குள்ளேயே தயாரித்துவிட்டது போன்ற தம்பட்டம் ஆகியவற்றால் சீனா இந்தியாவுக்கு அளித்து வந்த உதிரிப் பாகங்களில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துவிட்டதாக சொல்கிறார்கள். மகிந்திரா அன்ட் மகிந்திரா கடந்த ஒரு வார காலமாக உற்பத்தியை நிறுத்தி வைத்திருப்பதற்கு சீனாவிலிருந்து வர வேண்டிய உதிரிப் பாகங்கள் வராததுதான் காரணம் என்கிறார்கள்.
4. கொரோனவிற்கு முன்பாகவே ஆட்டோமொபைல் விற்பனை மிகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்ட நிலையில் ஒட்டுமொத்தமாக ஜி.எஸ்.டியை 18 சதவிகிதம் அளவிற்கு குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதை ஒன்றிய அரசு புறந்தள்ளியதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
மொத்தத்தில் 50 லட்சம் பேர் வரை வேலைவாய்ப்புகளை அளித்து வரும் இந்த துறை குறித்து ஒன்றிய அரசு எவ்வித முன்யோசனையும் இன்றி வெற்று சவடால்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது இத்தனை பெரிய மோசமான முடிவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்புதான் மாருதியின் ஆர்.சி.பார்கவாவும் டி.வி.எஸ்-சின் வேணு சீனிவாசனும் அரசு வெறும் வாய்ச் சேவைதான் செய்து கொண்டிருக்கிறது. உருப்படியான எந்தத் திட்டமும் ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த செய்யவில்லை என்று கூறியிருந்தார்கள்.
இதுதான் உண்மை, ஒவ்வொரு துறையிலும் வெற்றுச் சவலால்களும் வீம்புகளும் வீராப்புகளுமாய் இந்தியாவின் பொருளாதாரத்தை மோடியும் அவரது பரிவாரங்களும் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், இந்திய தொழில்துறை பெரும்பாலும் மோடியின் துதிபாடிகளாகவும், மோடி எதைச் சொன்னாலும் அதை புகழ்கிறவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
மோடி வகையறாவின் வெறுப்புப் பேச்சுக்களை எல்லாம் இவர்கள் துளியும் கண்டு கொண்டதில்லை. சிற்சில நேரங்களில் பொத்தாம்பொதுவாக வளர்ச்சிக்கு அமைதி முக்கியம் என்று அருளாசி வழங்குவது போல் சொல்லிவிட்டு வேறு எந்த விமர்சனத்தையும் வைப்பதில்லை. பார்கவாவும் வேணு சீனிவாசனும் கூட இப்படி எல்லாம் சரி என்று பேசுகிற பரிவாரத்தின் உறுப்பினர்களே. அவர்களே வாய்ச் சேவை மட்டும்தான் நடக்கிறது என்று சொல்லியிருப்பதே தீவிரத்தை உணர்த்தும்.
இந்தக் காலத்தில்தான் இந்தியாவின் தொழில்துறையும் இதுகாறும் இசுலாமியர்கள், ஜனநாயகவாதிகள், பத்திரிக்கையாளர்கள், அறிவுஜீவிகள், எதிர்க்கட்சிகள் எதிர்கொண்ட வெறுப்புப் பேச்சின் தாக்கத்தை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பியூஸ் கோயல் டாடா நிறுவனத்தை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்று குறிப்பிட்டதும் பாஞ்சசன்யா என்கிற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பத்திரிக்கை இன்போசிஸ் நிறுவனத்தை ஆன்ட்டி இந்தியா பட்டம் சூட்டி மகிழ்ந்ததும் தற்போது நடந்திருக்கிறது.
இந்தியாவின் சாதாராண மக்கள் இதேபோன்ற தாக்குதலுக்கு உள்ளாகும்போது இந்தியாவின் பெரு முதலாளிகள் அமைதி காத்தார்கள் அல்லது அரசின் தயவுக்காக காணாதது போல் கடந்து சென்றார்கள் என்பது இன்றைக்கு அவர்கள் தலையிலேயே இறங்கியிருக்கிறது.
இந்திய பெரு முதலாளிகளில் பஜாஜ் குழுமத்தின் ராகுல் பஜாஜ், ராஜீவ் பஜாஜ் இருவர் மட்டுமே தொடர்ச்சியாக இந்திய அரசாங்கம் மற்றும் சங்பரிவாரின் வெறுப்பு பிரச்சாரத்தை விமர்சித்து வந்திருக்கிறார்கள். அதேபோல, தொழில்துறை வளர்ச்சி குறித்த அரசின் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று வாய்ச்சவடால்கள் என்று விமர்சித்து வந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் பெருமுதலாளிகள் தங்கள் நலனோடு சற்று தேசத்தின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதாவது இந்தியாவின் பெரு முதலாளிகள் சமூக அமைதி, மதச்சார்பின்மை, சட்டத்தின்படியான ஆட்சி ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல் சிவனே என்றிருந்தால் அவர்கள் தொழில் மட்டும் வளர்ந்துவிடும் செழித்துவிடும் என்று நினைப்பது பகற்கனவாகவே இருக்கும்.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்று எடுத்திருக்கும் முடிவு இதர ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேசமயம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதும் வளங்களை வாரிக்கொண்டு செல்வதும், சிறு நட்டங்கள் ஏற்பட்டாலும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடிப்போவதும் வாடிக்கையாக இருக்கிறது. என்ரான், நோக்கியா, குலோபல் டிரஸ்ட் பேங்க், ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
முதலீடு செய்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அந்த தொழிற்சாலையை அரசிடம் ஒப்படைப்பதற்கான முறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உருவாக்கப்படுவதே இவற்றைத் தடுப்பதற்கான வழியாக இருக்கும்.
மோடி வகையறா மீதமுள்ள தொழில்களையேனும் பாதுகாப்பதற்கான உரிய பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம், இப்படி மூடப்படும் தொழிற்சாலையை நம்பி முதலீடு செய்துள்ள சிறுகுறு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதற்கும் உரிய சட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். அதைவிடுத்து சரியானதைச் செய்வதற்குப் பதிலாக தாங்கள் செய்கிற அறிவுக்கு ஒவ்வாத அத்தனையும் சரியென வாதிடுவதால் மட்டும் இந்தியாவை முன்னேற்றிவிட முடியாது. முன்னேறுவது என்பதைவிட இருப்பதைக் கூட தக்கவைத்துக் கொள்ள முடியாது.
- க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர். சிபிஐ(எம்)
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?