Politics
”இதுவரை வெறும் சரவெடி; இனிமேல்தான் அதிர்வேட்டு” - கொடநாடு வழக்கின் திகுதிகு திருப்பங்கள்: ஷாக் ரிப்போர்ட்
எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்றில்லை; தமிழ்நாட்டின் தலைவர்கள் எல்லோருடைய படபடப்பையும் எகிறவைத்துக் கொண்டிருக்கிறது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு. இந்த வழக்கை தமிழக காவல் துறை மறுபடியும் தூசி தட்டியதும், புயல் கிளம்பியது அரசியல் அரங்கில். வழக்கில் தன்னைச் சேர்க்க முயற்சி நடப்பதாக பதறினார் எடப்பாடி பழனிசாமி. வெளிநடப்பு செய்தார்கள். ஆளுநரிடம் மனு கொடுத்தார்கள். ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். அ.தி.மு.க. தலைவர்கள் ஆடிப்போனதை அகில இந்தியாவும் கவனிக்கிறது.
அரசியல் அதிர்வுகள் அடுத்தடுத்து அரங்கேறிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில் விசாரணையும் தீவிரமாகிக் கொண்டிருந்தது. மேல் விசாரணைக்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எஸ்டேட் உரிமையாளர் சசிகலா ஆகியோரையும் விசாரிக்க வேண்டுமென்று குற்றவாளிகள் சார்பிலேயே தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் விசாரிக்கப்படுவதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சட்டபூர்வமான காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே, மறுபுறத்தில் போலீஸ் விசாரணையில் அடுக்கடுக்காக ஆதாரங்கள் கிடைப்பதில், அரசு தரப்பு கொஞ்சம் தெம்பாயிருக்கிறது.
அ.தி.மு.க. தலைவர்களிடம்தான் தடுமாற்றமும், அச்சமும், கலக்கமும் அப்பட்டமாகத் தெரிகிறது. வழக்கு விசாரணைக்கு மேலும் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதால், விசாரணை வளையம் இன்னும் பெரிதாகும் என்றும் கணிக்கப்படுகிறது. இந்த வழக்கில் யார் யாருக்குத் தொடர்பு என்பதை அறிவதற்கு எட்டுக் கோடித் தமிழக மக்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதையும் விட, கொடநாடு கொள்ளையில் பங்களாவிலிருந்து திருடப்பட்டவை என்ன என்பதை அறிந்து கொள்வதுதான் அனைவரின் ஆவலாக இருக்கிறது. காவல் துறைக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களையும், குற்றவாளிகள் கூறியுள்ள வாக்குமூலங்களையும், சசிகலா தரப்பு தந்துள்ள தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் முழுநீளச் சித்திரம் ஓரளவுக்குப் பூர்த்தியாகி விட்டதாகத் தெரிகிறது.
விசாரணை விவரங்களை நன்கறிந்த ஓர் உயர் போலீஸ் அதிகாரி சில விஷயங்களைப் பகிர்ந்தார். ‘‘சம்பவம் நடந்திருப்பது அ.தி.மு.க. ஆட்சியில். சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அந்த ஒருவரும் இப்போது உயிருடன் இல்லை. அவருடைய மரணமும் மர்மமாய் இருக்கிறது. அங்கு நடந்த கொள்ளை, வெறும் பணத்துக்காகவோ, தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருளுக்காக மட்டுமே நடந்ததாக இருந்திருந்தால், கனகராஜ், சயான் மனைவி, மகள், சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ் என அடுத்தடுத்து பலரும் மர்மமாக இறந்திருக்க வாய்ப்பேயில்லை. அதனால்தான், அங்கு கொள்ளையிடப்பட்டது வெறும் பொருட்களில்லை. விலை மதிக்கவே முடியாத, அதாவது அ.தி.மு.க. தலைவர்கள் பலருடைய அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கிற ஆவணங்களாக இருக்குமென்று யூகிக்கப்பட்டது. இப்போது கிடைத்துள்ள பல தகவல்கள் அதை உறுதி செய்திருக்கின்றன.
2016 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, தேர்தலை எதிர்கொள்ள பெரும் நிதி தேவைப்படுகிறது என்று திட்டம் வகுத்த ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என எல்லோரிடமும் அவரவருக்கு வழங்கப்பட்ட பவருக்கு ஏற்ப ஒரு தொகையைத் தருமாறு உத்தரவிட்டிருக்கிறார். அதற்கு முன்பே, ஒவ்வொரு அமைச்சர், எம்.எல்.ஏ. என அனைவருடைய சொத்து விவரங்களையும் உளவுத்துறை மூலமாக அவர் திரட்டி வைத்திருக்கிறார். யாரிடமிருந்தும் அவர் எதிர்பார்த்த தொகை வரவில்லை என்றதும், ஒவ்வொருவருடைய சொத்து ஆவணங்களையும் எடுத்து, அவர்கள் முன்னால் போட்டிருக்கிறார். அவர்களின் பழைய நிலையைச் சுட்டிக்காட்டி, ‘என்னையே ஏமாத்தப் பாக்குறீங்களா’ என்று கொந்தளித்திருக்கிறார். அத்தனை பேரிடமிருந்தும், அவரவர் சேர்த்த சொத்து விவரங்கள், அவற்றின் மதிப்பைக் குறிப்பிட்டு, அவரிடம் மன்னிப்புக் கோரும் கடிதத்தை வாங்கியிருக்கிறார். கூடவே, ஜெயலலிதா அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்த ‘அம்மா டிரஸ்ட்’டுக்கு அவற்றை தானமாக வழங்குவது போன்றும் அவர்களிடம் எழுதி வாங்கியதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
அந்தக் கடிதங்கள், ஆவணங்கள் வேறு யாருடைய கையிலாவது கிடைத்தால், அ.தி.மு.க. தலைவர்களின் எதிர்காலமே கந்தலாகி விடும். பல ஆண்டுகளாக பதுக்கிப் பதுக்கி சேர்த்த சொத்துகளும் கையைவிட்டுப் போய்விடும். அந்த ஆவணங்கள் சசிகலா தரப்புக்குக் கிடைத்தால், அதை வைத்து கட்சியை மீண்டும் கைப்பற்றி விடுவார்கள். அதே நேரத்தில் அந்த ஆவணங்களைக் கைப்பற்றிவிட்டால் அதை வைத்தே, தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.ஸை தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம். அதன்பின் அந்தக் கடிதங்களை வைத்தே, அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். கட்சியையும், ஆட்சியையும் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில்தான், அந்த ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அதற்காக நடந்த முயற்சியில்தான், எதிர் பாராதவிதமாக இந்தக் கொலை நடந்துவிட்டது. விவகாரம் பெரிதாகிவிட்டது’’ என்றார் அந்த அதிகாரி.
‘‘சொத்து ஆவணங்கள் மட்டுமின்றி, வேறு மாதிரியான சில கடிதங்களும் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது அவரவர் மனைவி கொடுத்த புகார்கள், சில நடிகைகளுடன் சிலருக்கு இருந்த தொடர்புகள் பற்றியும் உளவுத் துறை தகவல் கொடுத்திருக்கிறது. அதை வைத்து அவர்களிடம் உண்மையை ஒப்புக்கொண்டது போல எழுதி வாங்கிய கடிதங்களும் அங்கு இருந்திருக்கின்றன. இப்படிக் கடிதம் வாங்குவதும், கட்சி நிர்வாகிகளைத் திட்டியும், அடித்தும் அனுப்புவது கார்டனிலும், எஸ்டேட்டிலும் அடிக்கடி நடந்திருக்கிறது. அதே வழக்கத்தில்தான் ஜெயலலிதாவும், சசிகலாவும் இந்தக் கடிதங்களையும், ஆவணங்களையும் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அதை வாங்கி எஸ்டேட்டில் பத்திரப்படுத்திய பின், துரதிருஷ்டவசமாக 2016 தேர்தலுக்குப் பின் ஆட்சியை மீண்டும் பிடித்தபின், அவர்களிருவராலும் அங்கு போகவே முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், ஜெயக்குமார், இரண்டு விஜயபாஸ்கர்கள் என பலரிடமும் வாங்கப்பட்ட கடிதங்களும், ஆவணங்களும் அங்கு இருந்திருக்கின்றன. அவைதான் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது!’’ என்று கூடுதலாக சில தகவல்களையும் தெரிவித்தார்.
ஐ.ஜி. சுதாகர் தலைமையில்தான் விசாரணை நடக்கிறது. எஸ்.பி. ஆசிஷ் ராவத், டி.எஸ்.பி.க்கள் சுரேஷ், துரை, விசாரணை அதிகாரி வேல்முருகன் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அசைன்மென்ட் தரப்பட்டுள்ளது. குற்றவாளிகள், சாட்சிகள் சொல்லும் பல தகவல்களும் ஆதாரங்களும் முரண்பட்டுள்ளன. இதுபற்றி நம்மிடம் விளக்கினார் மற்றொரு போலீஸ் அதிகாரி. "சம்பவத்தின்போது சஜீவனும் அங்கு இருந்ததாக ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் சம்பவம் நடப்பதற்கு மூன்று நாளுக்கு முன்பே, அதாவது 2017 ஏப்ரல் 20 அன்றே அவர் துபாய் போய்விட்டதாக அவர் சொல்லியிருக்கிறார். அது தொடர்பான ஆவணங்களையும் சரிபார்க்கிறார்கள். டவர் பாயின்ட் வைத்து, குறிப்பிட்ட தேதிகளில் யார் யார், யார் யாருடன் பேசினார்கள் என்ற தகவல்களை எடுத்திருக்கிறார்கள். சம்பவத்துக்கு முந்தைய நாள், 2017 ஏப்ரல் 22 அன்றைக்கு, மனோஜ், சயான், கனகராஜ் இரண்டு சாமியார்கள் உட்பட ஆறு பேர், ஊட்டியில் சாந்தா என்பவருக்குச் சொந்தமான விடுதியில் தங்கியிருக்கிறார்கள், அன்று இரவே கொடநாடு எஸ்டேட் பக்கம் வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள். மறுநாள் 23ஆம் தேதி இரவு, சான்ட்ரோ, இன்னொவா, பொலிரோ என மூன்று கார்களில் இரண்டு சாமியார்கள் உட்பட 11 பேரும் எஸ்டேட் வளாகத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
கொள்ளையடிக்கும் போது, பங்களாவுக்கு வெளியில் இரண்டு சாமியார்கள் மந்திரம் சொல்லி பூஜைகள் செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை கனகராஜும், சயானும் சேலத்துக்கு எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அப்போது அவர்களுடன் சஜீவன் போனதாகச் சொன்ன தகவலும் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதித்தால் அது உண்மையா எனத் தெரிந்துவிடும். ஆனால் சேலத்துக்குப் போனது கனகராஜும், சயானும்தான். இதுபற்றி போலீஸார் விசாரிப்பது தெரிந்ததும், கனகராஜ், சேலத்தில் யாரிடமோ பேசியிருக்கிறார். தேவைப்பட்டால் சரண்டராகி வெளியில் வந்துவிடலாம் என்றும் ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போதுதான் கோவை அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவி, ‘நான் சொல்லும் டி.எஸ்.பி.யிடம் ஆஜராகுங்கள்’ என்று கனகராஜிடம் சொல்லியிருக்கிறார். அதற்குப் பின், கனகராஜும், சயானும் சந்திக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அதற்குள் விபத்தில் கனகராஜ் பலியாகிவிட்டார். சயான் குடும்பத்துடன் விபத்தில் சிக்கியிருக்கிறார். அவரின் மனைவியும், மகளும் இறந்துவிட்டார்கள் என்று இப்போது நடந்த விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
தான் பேசிய பணமும் தனக்குக் கிடைக்கவில்லை, தான் உயிருக்கு உயிராக நேசித்த மனைவியையும், மகளையும் கொன்று விட்டார்கள் என்ற விரக்தியில்தான் சயான் அப்ரூவர் ஆகியிருக்கிறார். சயானுடன் வந்தவர்கள், நீலகிரி வழியாகக் கேரளா போனதும், அங்கு செக்போஸ்ட்டில் சிக்கியது, அதைத் தாண்டி வாட்ச்கள் உள்ளிட்ட சில பொருட்களை வெளியில் வீசிச் சென்றது எல்லாமே செட்டப் ஆக இருக்குமோ என்றும் சந்தேகம் வந்திருக்கிறது. மேனேஜர் நடராஜன் இந்த சம்பவத்தில் மற்றொரு நபரின் மீது வலுவான சந்தேகம் கிளம்பியிருக்கிறது. கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன்தான் அவர். உண்மையில் அவர் சசிகலாவுக்கு விசுவாசமாக இருக்கிறாரா அல்லது சஜீவனுடன் சேர்ந்து இந்த கொள்ளைக்கும் மறைமுகமாக உதவியிருக்கிறாரா என்ற சந்தேகம் வந்துள்ளது. அவரும் சஜீவனும் கொடநாட்டில் இருந்த பேங்க் மேனேஜர் ஒருவரும் சேர்ந்து பல விஷயங்களில் ‘பார்ட்னர்’ ஆக இருந்திருப்பதாகவும் சிலர் தகவல் கூறியிருக்கிறார்கள். ஆனால் சசிகலா தரப்பு இன்னும் அவரை நம்பிக் கொண்டிருக்கிறது. விசாரணைக்கு ஆஜராகும் முன்பு, சசிகலாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் நடராஜன். அவரிடம் ‘முக்கியமான விஷயங்களை குறிப்பு எடுத்துக் கொண்டு போங்க; உங்களுக்குத் தெரிஞ்ச உண்மைகளை மறைக்காமல் தைரியமா சொல்லிடுங்க!’என்று சசிகலா சொல்லியிருக்கிறார்.
செப்டம்பர் 3ஆம் தேதி, நடராஜனிடம் முதல்கட்ட விசாரணை நடந்திருக்கிறது. ஐ.ஜி. சுதாகர் தான் நேரடியாக விசாரித்திருக்கிறார். அவரிடம் பேசிய நடராஜன், ‘சம்பவம் நடந்தது எனக்குத் தெரிந்ததும் காலை 4.00 மணிக்கு தகவல் தெரிவித்து விட்டேன். நாலரை மணிக்கெல்லாம் போலீஸ் அதிகாரிகளும், கலெக்டரும் வந்துவிட்டார்கள், எஸ்டேட்டில் வேலை செய்தவர்களுக்கு உள்ளே வந்தவர்களை நன்கு அடையாளம் தெரிந்துள்ளது. கனகராஜும், அவருடன் வந்தவர்களும், ‘அம்மா வாழ்ந்த இடத்தில் இரும்பு கடப்பாரையால் உடைத்துள்ளார்கள், உள்ளே மரச் சாமான் வேலை செய்யும் கருவிகளால் உடைத்திருக்கிறார்கள். அம்மா, சின்னம்மா வரும்போதுதான் நான் பங்களாவுக்குள் போவேன். அதன் பிறகு யாரும் போக மாட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார். அவரிடம் மூணு மணி நேர விசாரணை நடத்தியபின், ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகள் பங்களாவுக்குப் போயிருக்கிறார்கள். பங்களாவைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் ஐ.ஜி.சுதாகர். கொள்ளையின்போது உடைக்கப்பட்டவை அப்படியே சரி செய்யப்படாமல் இருந்திருக்கின்றன. அதுபற்றி நடராஜனிடம் கேட்டதற்கு,‘‘எதுவும் செய்யவேண்டாம். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரையில் அது இருந்தபடியே இருக்கட்டும் என்று சின்னம்மா சொல்லிவிட்டார்’’ என்று சொல்லியிருக்கிறார். உடைக்கப்பட்ட பீரோ, கதவு எல்லாவற்றையும் வீடியோ எடுத்திருக்கிறார்கள்.
நடராஜனைத் தவிர, எஸ்டேட் ஊழியர்கள் சிலரிடமும் விசாரித்திருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்ததில் பல நல்ல தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அடுத்த கட்டமாக ஊட்டியில் ரூம் கொடுத்த சாந்தாவை விசாரிக்கப் போகிறார்கள். கூடிய விரைவிலேயே எடப்பாடி பழனிசாமியையும், சசிகலாவையும் விசாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தத் தகவல் தெரிந்தே, நான்காம் தேதியன்று ரொம்பவும் சோர்வுடன் சேலத்துக்குப் போயிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!’’என்றார் அந்த போலீஸ் அதிகாரி. விசாரணை நடக்கும் அறையில் சி.சி.டி.வி. கேமரா, வாய்ஸ் ரெக்கார்டர் பொருத்தியுள்ளனர். வாக்குமூலங்கள் கம்ப்யூட்டரிலும் பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை எடுத்துள்ள வாக்கு மூலங்கள் சரவெடி என்றால், இனி எடுக்கப்போகும் வாக்கு மூலங்கள்தான் அதிர் வேட்டு என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். தீபாவளிக்கு முன்பே பட்டாசு தெறிக்கப்போகிறது தமிழகம்!
நன்றி - மின்னம்பலம்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!