Politics

“வேலுமணி கண்டுபிடித்த ஊழல் கொள்கை” : கார்த்திகேய சிவசேனாபதி தாக்கு! #Video

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்குச் சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எஸ்.பி.வேலுமணியிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், வேலுமணியின் வங்கிக் கணக்கு, லாக்கர்கள், பாஸ்போர்ட் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலிஸார் இன்று முடக்கியுள்ளனர். மேலும், எஸ்.பி.வேலுமணி வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில், அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணியின் பல்வேறு ஊழல்கள் குறித்து தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

“நூதனமான ஊழல் முறையை உருவாக்கியவர் எஸ்.பி.வேலுமணி. தன்னோடு சேர்த்து நூற்றுக்கணக்கானோரைச் சேர்த்து கொள்ளையடித்து, அவர்களுக்குச் சிறு பங்கை ஒதுக்கிவிட்டு பெரும் கொள்ளையில் ஈடுபடுவார். சதவிகித கமிஷனில் ஈடுபடுபவர் அல்ல வேலுமணி. ஒவ்வொரு கொள்ளையிலும் பெரும் பங்கு வேலுமணிக்குத்தான் செல்லும்.

மக்களின் வரிப்பணத்தை அரசுப் பணத்தை திருடும் குற்றவுணர்ச்சி அற்றவர் வேலுமணி. அமைதிப்படை படத்தில் சத்யராஜ் நடித்த ‘அமாவாசை’ எனும் கதாபாத்திரம்தான் எஸ்.பி.வேலுமணியின் உண்மையான கேரக்டர்.

எஸ்.பி.வேலுமணி, கலைஞர் கொடுத்த 3 செண்ட் நிலத்தில் அமைந்த வீட்டில் வாழ்ந்தவர். இன்று எஸ்.பி.வேலுமணியின் மகன் ஆஸ்திரேலியாவில் சொந்தமாக விமானம் வைத்து ஓட்டி வருகிறார்.

எஸ்.பி.வேலுமணி அமைச்சரான பிறகு அடித்த கொள்ளைக்கும் செய்த ஊழல்களுக்கும் அளவில்லை. இந்நிலையில்தான் அவருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்துள்ளது. குறைந்தபட்சம் 1 லட்சம் கோடி அளவுக்காவது வேலுமணி ஊழல் செய்திருப்பார்.

வேலுமணி இனி பல ஊழல் வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுவார். 2021 தான் எஸ்.பி.வேலுமணி கடைசியாக தேர்தலில் நின்ற ஆண்டு.”

இவ்வாறு பேட்டியில் தெரிவித்தார்.

Also Read: க்ரீன்வேஸ் சாலை வீட்டில் டெண்டர் விட டிஸ்கஸ் நடத்திய SP வேலுமணி & கோ - FIRல் உள்ள முக்கிய தகவல்கள் இதோ!