Politics
“ஒன்றிய அரசு.. ‘இது ஒரு பெயர்தானே!’”: தேவையற்ற விவாதங்களை நடத்தும் பா.ஜ.கவிற்கு ‘தி டெலிகிராப்’ பதிலடி!
கொல்கத்தாவில் 1982 ஜூலை 7ஆம் தேதி முதல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் பிரபல ஆங்கில நாளேடு ‘தி டெலிகிராப்’ ஆகும். பிரபல பத்திரிகையாளர் அரூப் சர்க்காரை ஆசிரியராகக் கொண்டு ஏ.பி.பி குழுமத்தின் மூலம் கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த ‘தி டெலிகிராப்’ ஆங்கில நாளேட்டிற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக வாசகர்கள் உண்டு.
லண்டனில் வெளியாகும் ‘தி சண்டே டைம்ஸ்’ ஏட்டின் இயக்குநர் எட்வின் டைலரால் துவக்கத்தில் வடிவமைக்கப்பட்டு, வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப செய்திகளும், கட்டுரைகளும் எடிட் செய்யப்பட்டு இந்த ‘தி டெலிகிராப்’ கொல்கத்தாவிலிருந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆங்கில நாளேடுகளில் இதுவும் ஒன்று. இந்திய பத்திரிகை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இதன் செய்திகளும், கட்டுரைகளும் இருக்கும் என்பது பெரும்பாலானோர் கருத்துமாகும். அப்படிப்பட்ட புகழ்மிக்க ‘தி டெலி கிராப்’ ஆங்கில நாளேட்டில் ‘ஒன்றிய அரசு’ குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கருத்துக்கு தேவையற்ற விவாதங்களை நடத்தும் பா.ஜ.க.வினர் குறித்து ‘இது ஒரு பெயர்தானே!’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியாகியுள்ளது :-
‘இது ஒரு பெயர்தானே’ என்றத் தலைப்பிலும் “தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்” என்ற துணைத் தலைப்பில் “டெலிகிராபிக் இந்தியா டாட் காம்” என்ற இணைய இதழில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
“தேனீர் கோப்பைக்குள் ஏற்பட்ட புயல் விளிம்பில் சிதறியது போல் இது தோன்றுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய ஆட்சிக்குத் தலைமை வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஒன்றிய அரசு” என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்டுள்ள விவாதம் காலவிரயமாகவே தோன்றுகிறது.
பா.ஜ.கவின் தலைவர்கள் அவர்களுடைய கூட்டணிக் கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவான அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போது பயன்படுத்திய மத்திய அரசு என்ற பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதலாவதாக அவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் வழக்கமாகப் பயன்படுத்தி வந்த சொல்லை மாற்றக் கூடாது என்று கூறுகின்றனர். இது உண்மையில் முட்டாள்தனமானது. இந்த வெறும் பெயர்ப் பட்டியலுக்கான மாற்றம். எதிர்க்கட்சிகளுக்கு ஏன் இடையூறை ஏற்படுத்த வேண்டும்?
இந்தச் சொற்கள் இடையிடையே மாறிமாறி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் பா.ஜ.க மறைவான திட்டம் எதுவும் இதற்குள் இருக்கக்கூடுமோ என்று சந்தேகிக்கிறது. மேலும் தீய நோக்கத்துடன் கூடிய உள் நோக்கங்கள் இந்தச் சொல்லை தேர்ந்தெடுத்ததன் மூலம் புதிய அரசுக்கு இருக்குமோ என்றும் சந்தேகம் கொண்டுள்ளது.
தி.மு.க தலைமையின் வாதம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் விளக்கம் அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளிலும் நாட்டின் அரசு இந்திய ஒன்றியம் என்று தான் குறிப்பிடப்படுகிறது. இது தவறானதோ இதன் தமிழ்மொழி பெயர்ப்பு புதிதானதோ இல்லை. இது 1957 ஆம் ஆண்டிலேயே தி.மு.கழகத்தைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா (சி.என்.அண்ணாதுரை) அவர்களாலேயே பயன்படுத்தப்பட்டு, அதிலிருந்து தொடர்ச்சியாகப் பயன்படுத் தப்பட்டு வருகிறது.
மாநில பா.ஜ.க மத்திய அரசை “மத்திய அரசு” என்று அழைக்க வேண்டும் என்று வற்புறுத்துவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று கட்சி ரீதியான பாதுகாப்பு இன்மை - அது எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.கவுடன் சேர்த்துவிடப்பட்டுள்ளது. இந்தத் தோல்வி மேற்கு வங்காளத்தின் மாபெரும் தோல்வியுடன் சேர்ந்து ஏற்பட்டுள்ளது.
கேரளாவிலும் அது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் இந்த மாநிலங்களில் ஒன்றிணைக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் விரித்துரைக்கப்பட்ட உள்நோக்கம் இந்த மாநிலங்களில் நிறைவேறவில்லை. அவர்கள் தங்களுக்குரிய குரலை தாங்களே பெற்றுள்ளனர்.
முன்னதாக தி.மு.கழகம் எதிர்க் கட்சியாக இருந்தபோது ஒன்றிய அரசு மாநில உரிமைகளின் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்தது. அது தனது தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி கோட்பாட்டினை இடம்பெறச்செய்தது. எனவே இந்தப் பெயரை மாற்றியுள்ள காலத்தை எண்ணி எதிர்க்கிறது. இந்த (தி.மு.க) அரசு “போராடக் கூடியதாக” இருக்கும் என்று கருதுகிறது.
பா.ஜ.க பார்வையின் அடிப்படையில் தி.மு.கழகம் ஓர் அடிப்படையான நரம்பைத் தொட்டுள்ளது. இது மாநில பா.ஜ.க துள்ளுவதற்கான இரண்டாவது அடிப்படை காரணம். ஏனெனில் மாநிலங்களின் கூட்டமைப்பு என்பதற்குப் பதிலாக பா.ஜ.க இந்தியாவை, மாநில பா.ஜ.க பொதுச் செயலாளரின் கருத்துப்படி இந்தியா ஒரே அமைப்புதான். மாநிலங்கள் ஆட்சி செய்வதற்கான காரணமாகத்தான் அமைக்கப்பட்டுள்ளன.
பா.ஜ.கவின் ஒவ்வொரு துறையிலும் மையப்படுத்துவதற்கான அழுத்தம் அளிக்கப்பட்டு வருவது இந்த சுயபார்வையிலும் தெரிகிறது. இது தேனீர் கோப்பைக்குள் ஏற்பட்ட ஒரு புயல் அல்ல; ஆனால் ஒரு அரசியல் மற்றும் தத்துவ மோதல். அதுதான் இந்தியாவில் பதற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?