Politics
“ஒன்றிய அரசின் நிர்வாக அலங்கோலங்களும் ஏழாண்டுக்கால மோடி ஆட்சி எழுப்பும் கேள்விகளும்” : பேரா.ராஜன் பதிவு!
சென்ற வாரம் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்று ஏழாண்டுகள் நிறைவடைந்து விட்டன. அதையொட்டி அவரது ஆட்சியை மதிப்பிட்டு விவாதங்கள் தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் நிகழ்ந்தன. அவை பரவலாக நிகழ ஒரு முக்கிய காரணம், வட இந்திய மாநிலங்களில் மோடிக்கிருந்த நற்பெயர் பெரும் சரிவுக்கு உள்ளாகியுள்ளதாகத் தோன்றுவது. மோடி தடுப்பூசி தயாரிப்பில் கடுமையான சுணக்கம் காட்டி கொரோனா இரண்டாம் அலையில் நாட்டை பரிதவிக்கவிட்டதும், கங்கையில் பிணங்கள் மிதந்ததும், டெல்லியில் கும்பல், கும்பலாகப் பிணங்கள் எரிக்கப்பட்ட காட்சிகளும் அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்வியை, திட்டமிடுதலில் நிகழ்ந்த பெரும் சொதப்பலை வெளிப்படுத்தியுள்ளன. அதனால் மோடி அரசாங்கத்தின் ஏழாண்டு நிறைவு குறித்து விவாதிப்பது அவசியமானதாகத் தோன்றியதில் வியப்பில்லை. இன்னம் மூன்றாண்டுகளா என்று பலரும் ஆயாசப்படுகிறார்கள்.
ஆனால், இந்த விவாதங்கள் நிகழும்போது அதில் பொருளாதார வளர்ச்சி குறித்த வாதப்பிரதிவாதங்கள் முக்கிய இடம்பிடிப்பது ஒரு சோகம். ஜிடிபி (GDP) அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு கூடுகிறது என்பதுதான் ஓர் அரசாங்கத்தினை மதிப்பிடுவதற்கு அளவுகோலா என்ற கேள்வி எழுகிறது. உற்பத்தி அதிகமாகியிருக்கிறதா என்பதை மையப்பொருளாக வைத்து அதை மதிப்பிடுவதற்கு, ஒரு தேசத்தின் அரசாங்கம் என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. கார்ப்பரேட் நிறுவனத்தில்கூட தொழிலாளர் நலன், சமூகப் பொறுப்பு குறித்துப் பேசுவார்கள். மக்களாட்சியில் ஓர் அரசாங்கத்தை மதிப்பிடும்போது அதை அரசியல் ரீதியாக மதிப்பிடுவதே முக்கியம். பொருளாதாரம் அரசியல் இல்லையா என்று கேட்கலாம்.
வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சி என்று சேர்த்துக் கேட்டால் அது அரசியல் ஆகலாம். அதானியின் வளர்ச்சியும், அம்பானியின் வளர்ச்சியும் தேசத்தின் வளர்ச்சியா என்ற கேள்வி முக்கியமான அரசியல் கேள்விதான். ஆனால், வெறும் வளர்ச்சியின் சதவிகிதம் குறித்த புள்ளிவிவர விவாதம் அரசியல் அல்ல. அதற்குப் பதில் மோடி அரசாங்கத்தின் ஏழாண்டு ஆட்சியில் அரசியல் ரீதியான முக்கிய முன்னெடுப்புகள், எரியும் பிரச்சினைகள், மூன்றினை மட்டும் பட்டியல் இட்டுப்பார்த்தால் இந்திய அரசியல் சந்திக்கும் அடிப்படை கேள்வி எதுவென்று துலக்கமுறும்.
ஒன்று: பொருளாதார நிலையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு என்ற தத்துவத்தின் தார்மீக அடிப்படைகளையே தகர்த்து நொறுக்கிய ஒரு சட்டம், ஆதிக்க சாதிகளை சார்ந்த ஏழைகளுக்குப் பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது. பொருளாதார நிலை என்பது துரிதமாக மாறக்கூடியது. ஒரு பெரிய செல்வந்தர் திடீரென தொழிலில் ஏற்படும் இழப்பால் ஏழையாகலாம். அவருடைய பிள்ளைகள், பெயரன்களுக்கு இது ஒதுக்கீடு என்று சொன்னால் அவர்கள் அனுபவத்தில் இருந்திருக்கக் கூடிய வசதிகளை, மனோவியலை கருத்தில்கொள்ள வேண்டாமா?
சாதி அமைப்பு என்பது கல்விக்கான வாய்ப்புகளிலிருந்தும், சில தொழில்களிலிருந்தும் ஒடுக்கப்பட்ட சாதிகளை விலக்கி வைத்ததால்தான் அதை ஈடுகட்ட இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. அதைத்தான் Socially and Educationally Backward என்ற வரையறை சுட்டுகிறது. அதில் Economically என்பதைச் சேர்த்ததன் மூலம் மொத்தமாக சமூக நீதி என்பதையே சிதைத்துவிட்டது பாரதீய ஜனதா அரசு, இதை திமுக தவிர காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கவில்லையே என்ற கேள்வி எழலாம்.
வட மாநிலங்களில் முன்னேறிய வகுப்பினர், ஆதிக்க சாதியினர் எண்ணிக்கையும், அரசியல் செல்வாக்கும் அதிகம் என்பதால் இந்தச் சட்டத்தை எதிர்த்தால் தேர்தல்களில் பின்னடைவு ஏற்படும் என்பதுதான் பிரச்சினை. அந்தக் கட்சிகளாக இந்தச் சட்டத்தைக் கொண்டிருக்க வந்திருக்காது; கொண்டு வந்த பிறகு எதிர்க்க முடியாது என்பதுதான் அவர்கள் நிலை.
இரண்டு: காஷ்மீர் மாநிலத்தின் தனி தகுதியை நீக்கியதும்; மாநிலம் என்ற தகுதியையே நீக்கியதும்
ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசாங்கம் மூன்றாகப் பிரித்து ஒன்றிய ஆட்சி பகுதிகளாக (Union Territories) மாற்றியது என்பது இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சீர்குலைப்பது. அதே போல காஷ்மீர் மாநிலத்தை இந்து மன்னரின் ஒப்புதலின்பேரில் இந்தியாவுடன் இணைத்தபோது அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்ட தனித் தகுதியை அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒப்புதல் இன்றி நீக்குவது என்பதும் தார்மீக நெறிகளுக்கு முற்றிலும் எதிரானது. இன்று காஷ்மீருக்கு நடந்தது நாளை பிற மாநிலங்களுக்கும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மூன்று: குடியுரிமையையும், மத அடையாளத்தையும் இணைத்தது
குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய நாடுகளிலிருந்து குடியேறிய இந்து அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கலாம் என்ற நிலையை உருவாக்கியது குடியுரிமையையும், மத அடையாளத்தையும் இணைக்கும் விபரீதமான சட்டமாகும். இஸ்லாமிய நாடுகளில் துன்புறுத்தப்பட்டு தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்களுக்கோ (உ-ம்: ரொஹிங்கா), பெளத்த பெரும்பான்மை நாட்டிலிருந்து மொழி அடையாளத்தால் துன்புறுத்தப்பட்டு தஞ்சம் புகுந்த இந்துக்களுக்கோ (இலங்கைத் தமிழர்) இந்தச் சட்டம் பொருந்தாது என்பது இந்தச் சட்டம் மத அடையாளத்தைக் குடியுரிமையுடன் இணைக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது. இது தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும்போது தங்கள் மூதாதையர் குறித்துத் தகுந்த ஆதாரமில்லாத இஸ்லாமியர்களை மட்டும் நாடற்றவர்களாக ஆக்கும் சாத்தியம் கொண்டது.
இது மூன்றுமே பார்ப்பனீய இந்து அடையாளத்தை தேசிய அடையாளமாக்கி கட்டப்படும் மிகையுணர்ச்சி தேசியத்தின் (Brahminical Hindu Hyper-nationalism) வெளிப்பாடுகள் என்பது தெளிவானது.
இந்திய அரசியலின் இன்றைய கேள்வி
இந்தியத் தேர்தல்களில் மக்கள் மாநில அரசியல் சமன்பாடுகளுக்கு, முரண்களுக்கு ஏற்பத்தான் வாக்களிக்கிறார்கள். பாரதீய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்கூட அந்தந்த மாநிலங்களின் அரசியல் முரண்களின் அடிப்படையில்தான் கட்சி நடத்துகின்றன, கூட்டணி அமைக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸின் இரண்டாம்நிலை தலைவர்களை விலைக்கு வாங்கித்தான் அந்தக் கட்சியுடன் வங்காளத்தில் மோதியது பாரதீய ஜனதா கட்சி. போதாக்குறைக்கு தங்களது பழைய வடிவமான ஜனசங்கத்தை நிறுவியது சியாமா பிரசாத் முகர்ஜி என்ற வங்காளிதான் என்று கூறி மாநில அடையாளத்தை உயர்த்திப் பிடித்தது.
கேரளாவில் எதிர் எதிரே மோதிக்கொண்ட காங்கிரஸும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் இடம்பெற்றன. இந்த நிலையில் அரசியல் என்பது மாநிலங்களில் வேர்கொண்டதாக விளங்குவது தெளிவாகிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும்போதும் மக்கள் தேசிய அளவில் எந்த அரசியல் சமன்பாட்டையும், முரணையும் கண்டு வாக்களிப்பது சாத்தியமற்று போகிறது. பல மாநிலங்களிலிருந்து பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசியல் கட்சிகளிலிருந்தே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இதில் பல மாநிலக் கட்சிகள் காங்கிரஸிலிருந்து பிரிந்தவை; காங்கிரஸ் வேர்கள் கொண்டவை அல்லது காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பவை.
இப்படி மக்கள் ஆதரவெனும் அரசியல் ஆற்றல் மாநிலங்களில் நிலைகொள்ளும்போது, அதற்கு முரணாக அரசியல் அதிகாரம் ஒன்றிய அரசாங்கத்திடம் குவிக்கப்படுகிறது. இதன் மிக முக்கியமான சமீபத்திய வெளிப்பாடு சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax - GST) என்பது மாநில அரசுகளிலிருந்துப் பிரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஆணையத்திடம் அளிக்கப்பட்டது.
இதுவும் காங்கிரஸ் அரசால் திட்டமிடப்பட்டாலும், அதன் தற்போதைய வடிவத்தில் அவசரமாக நடைமுறைப்படுத்தியது மோடி அரசாங்கமே. இப்படியான அதிகாரக் குவிப்பு ஒன்றிய அரசில் நிகழும்போது, அதற்கு மாறாக அரசியல் ஆற்றல் மாநிலங்களில் வேர்கொள்வது பெரியதொரு முரணாக உருவெடுக்கிறது. இந்த முரண் இரண்டு விதங்களில்தான் சமன் செய்துகொள்ள முடியும்:
முற்போக்கான நேர்மறை சாத்தியம், ஒன்றிய அரசாங்கத்தில் குவிந்துள்ள அதிகாரம் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதும், ஒன்றிய அரசாங்கமும் மாநில அரசியல் ஆற்றல்களின், கட்சிகளின் கூட்டாட்சியாக மாறுவது. இதுவே திராவிட சித்தாந்தம் வலியுறுத்திய மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.
பிற்போக்கான எதிர்மறை சாத்தியம் ஒரே கட்சி மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றி, மாநிலங்களின் அரசியல் ஆற்றல்கள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி அதிகாரத்தை முழுவதும் ஒன்றிய அரசில் குவிப்பது. இதுவே ஆர்எஸ்எஸ் - பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்யும் தீர்வு.
இந்த இரண்டு சாத்தியங்களுக்கும் இடையிலான முரண் என்பது மொழி, கலாச்சார முரண் மட்டுமல்ல. மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது மக்கள் நலனை முன்னெடுப்பது; மையப்படுத்துவது. மத்தியில் அதிகாரக் குவிப்பு என்பது பெருமுதலீட்டிய நலனை முன்னெடுப்பது; மையப்படுத்துவது. மக்கள் நலனா, பெருமுதலீட்டிய நலனா என்பதை மொழி, கலாச்சார உரிமைகளிலிருந்து பிரிக்க முடியாது.
திராவிட முன்மாதிரி
இன்று இந்திய மக்களாட்சி வரலாறு சந்திக்கும் இந்தக் கேள்விக்கு வலுவான அடித்தளமிட்டது திராவிட அரசியல்தான். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் அரசியல் முரண் மற்றும் சமன்பாடு மாநில அளவில் இருந்தாலும் அது மாநிலக் கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளும் ஆன முரண்பாடாக வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளாக தீவிரமான மண்ணின் மைந்தர்களுக்கான அரசியல் நடந்து மாநிலக் கட்சிகளும், தீவிரவாதக் குழுக்களும் உருவான அஸ்ஸாமில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணியும் மோதுகின்றன.
பிரிவினை வாதம் ஆயுதப் போராட்டமாகவே வடிவெடுத்து பத்தாண்டுகள் கிளர்ச்சி நடந்த பஞ்சாபில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்கிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நாற்பத்து நான்காண்டுகள் ஆட்சி செய்த வங்காளத்தில் மாநிலக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்ய, பாரதீய ஜனதா கட்சி பிரதான எதிர்க்கட்சியாக வடிவெடுத்துள்ளது. தனக்கென்று தனிப்பட்ட அரசியல் வரலாறு கொண்ட கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிகளே பிரதான சக்திகளாக உள்ளன.
தமிழகத்தில் மட்டுமே ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டுமே மாநிலக் கட்சிகளாக, திராவிட இயக்கத்தில் உருவான கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்குள் எண்பது சதவிகித ஓட்டுக்களைப் பிரித்துக்கொள்ளும் ஆற்றலுடன் உள்ளன. இவர்கள் தலைமையிலான கூட்டணியில்தான் பிற கட்சிகள், தேசிய கட்சிகள் சில தொகுதிகளை வெல்ல முடியும். மூன்றாவது சாத்தியமாக எந்தக் கட்சி தன்னை நிறுத்திக்கொண்டாலும் இருபது சதவிகித வாக்குகளைத்தான் பிற உதிரிகளுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
சுருக்கமாகச் சொன்னால் மாநில அளவிலான முரண்கள், சமன்பாடுகளில் பிறக்கும் அரசியல் ஆற்றலே எல்லா மாநிலங்களிலும் அரசியலை வடிவமைக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே அந்த ஆற்றல் முழுமையாக மாநிலக் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால்தான் அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும், இந்திய அரசியலின் முக்கிய முரணைச் சுட்டிக்காட்டும் மாநிலமாகத் தமிழகமும், திராவிட அரசியலும் விளங்குகின்றன.
- ராஜன் குறை கிருஷ்ணன்., பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடெல்லி.
நன்றி : மின்னம்பலம் இணையதளம்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !