Politics
“ஆளும்போது மக்களை அழவைத்துவிட்டு தோல்வி பயத்தில் முதலை கண்ணீர் வடிக்கும் பழனிசாமி” - முரசொலி தலையங்கம்!
தோல்வி என்பது நூறு சதவிகிதம் உறுதியானதும் போலிக் கண்ணீர், பொய்க் கண்ணீர் வடித்து, தான் மட்டுமாவது வெற்றி பெற முடியுமா என்று நினைக்கிறார் பழனிசாமி! ஏதாவது அனுதாபம் தேட முடியுமா என்று பார்க்கிறார்!
அவரது இறுதி நேரத்து அழுகை அ.தி.மு.க.வின் இறுதி அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது! அ.தி.மு.க.வின் பத்தாண்டு காலத்தில் எழுந்த எத்தனை அழுகைகளுக்கு பழனிசாமி ஆட்சி பதில் சொன்னது? எதுவும் இல்லை! அழுகையின் உச்சமான பொள்ளாச்சி மக்களுக்கு வழங்கப்பட்ட நீதி எங்கே? ‘இது பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சியே சாட்சி’யாக இன்று வரை இருக்கிறது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்துக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி வந்தது ஆளும் கட்சி. "அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. அதற்கு என்ன ஆதாரம்? ஆதாரம் இல்லாமல் சொல்வதா?" என்று பழனிசாமி கேட்டார். பிறகு பிரச்சினை பெரிதானதும், நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று முதலமைச்சர் பழனிசாமி சொன்னார். பொள்ளாச்சி சம்பவமே அ.தி.மு.க. பிரமுகர்களால்தான் நடத்தப்பட்டது என்பதை சி.பி.ஐ. சொல்லிவிட்டது.
அருளானந்தம், பாபு, கரோன்பால் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த மூவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அருளானந்தம் என்பவர் அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருக்கிறார். அமைச்சர் வேலுமணிக்கு வேண்டியவர். வேலுமணியுடன் பல்வேறு விழாக்களில் பங்கெடுத்துள்ளார். அதேபோல், பொள்ளாச்சி ஜெயராமனுடன் இவர் இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜெயராமனுடன் இருந்துள்ளார். ஜெயராமன் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் அவரோடு அருளானந்தம் உள்ளார். அ.தி.மு.க.வின் சுவரொட்டிகளில் அருளானந்தம் படம் இடம் பெற்றுள்ளது.
அதேபோல் கைதாகி இருக்கும் பாபு, கரோன்பால் ஆகியஇருவரும் பொள்ளாச்சி ஆச்சிடிபட்டி ஊராட்சித் தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான ரெங்கநாதனுடன் நெருக்கமாக இருந்துள்ளார்கள். இவர்கள் படங்களும் சமூக வலைத்தளங்களில் வந்தது. இப்படி கைதான மூவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இவர்களை தப்ப வைக்கவே முதலமைச்சர் பழனிசாமி முதல், அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட அனைவரும் தவியாக தவித்தார்கள். பிரச்சினை பெரிதானதும் பார் நாகராஜனை நீக்கினார்கள்.
தன்னைக் கட்சியை விட்டு நீக்கிய மறுநாளே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் போய் நின்று கொண்டு துணிச்சலாகப் பேட்டி கொடுத்தார் பார் நாகராஜன். இந்த விவகாரம் வெளியில் வந்ததில் இருந்து அதனை மறைக்க அ.தி.மு.க. அரசு முயற்சித்தது. இந்த விவகாரத்தில் உள்ள தடயங்களை மறைப்பதற்காக, அழிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என்று சொல்லி அ.தி.மு.க. அரசு சதி வேலையில் இறங்கியது. சாட்சிகளை அழிப்பதற்காகவும், சாட்சிகளை பயமுறுத்துவதற்காகவும் அ.தி.மு.க. அரசு செயல்பட்டது.
தி.மு.க. தலைவர் இதில் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் திருநாவுக்கரசு என்பவரை கைது செய்தது போலீஸ். அந்த அறிக்கை வெளியிடாமல் போயிருந்தால் பொள்ளாச்சி கொடூரம் அப்போதே ஊத்தி மூடப்பட்டு இருக்கும்! பெண்களைப் பாதுகாக்கப் பிறந்ததாக வேஷம் போடும் பழனிசாமிக்கு, "அடிக்காதீங்கண்ணா.. அடிக்காதீங்கண்ணா" என்ற அவலம் அப்போது கேட்காமல் போனது ஏன்? பழனிசாமியின் பெயரைச் சொல்லி ‘நக்கீரன்’ பத்திரிக்கையை ஹரீஸ் என்பவர் போனில் மிரட்டுகிறார்.
அந்தளவுக்கு பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு துணையாக இருந்த அரசு இந்த பழனிசாமி அரசு! இதே போல் நாகர்கோவிலில் ஒரு கொடூரம் நடந்தது. "உருகி உருகி காதலிச்சு ஏமாத்திட்டான்.. என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டினான்" என்று பெண் ஒருவர் காசி மீது அளித்த புகாரின் பேரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த காசியால் சீரழிக்கப்பட்டவர்கள் பட்டியல் மிக நீண்டது. பல்வேறு வழக்குகளில் காசி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கை ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாகஅழுத்தி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது!
Also Read: “பா.ஜ.க விளம்பரத்தில் என் படமா? தாமரை மலரவே மலராது” - ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் கிண்டல்!
தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 13 பேரைத் துள்ளத் துடிக்க சுட்டுக்கொன்றவர் பழனிசாமி அல்லவா? அன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அலுவலகத்தில் இருந்து மனுவை வாங்கி இருந்தால் பிரச்சினையே இல்லை. அவரை வேண்டுமென்றே வெளியூருக்குப் போக வைத்துவிட்டு, தூத்துக்குடி மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியது பழனிசாமி அரசாங்கம். குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் வந்தவர்களைச் சுட்டுப் பொசுக்கினார்கள்.
தூத்துக்குடி ரஞ்சித்குமார் லூர்தம்மாள்புரம் கிளாஸ்டன் சிலோன் காலனி கந்தையா ஓட்டப்பிடாரம் தமிழரசன் மாசிலாமணிபுரம் சண்முகம் தூத்துக்குடி ஸ்னோலின் தூத்துக்குடி அந்தோணி செல்வராஜ் தாமோதரன் நகர் மணிராஜ் தூத்துக்குடி கார்த்திக்தி ரேஸ்புரம் ஜான்சி தூத்துக்குடி செல்வசேகர் தாளமுத்துநகர் காளியப்பன் உசிலம்பட்டி ஜெயராமன்- உள்ளிட்ட 13 பேர் கொலை செய்யப்பட்ட போது பழனிசாமி என்ன சொன்னார்? டி.வி.யைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்றார்.
இவரா இன்று அழுவது? சாத்தான்குளத்தில் அப்பாவையும் மகனையும் அடித்தே கொன்றுவிட்டு, இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார்கள் என்று சொல்லும் இவரா அழுவது?தமிழ்நாட்டை அழச்செய்தவர்க்கு அழுகை எப்படி வரும்?
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!