Politics
“அ.தி.மு.கவினர் பண விநியோகம் - மவுன ஆணையாமாக காட்சியளிக்கும் தேர்தல் ஆணையம்” : தினகரன் தலையங்கம் !
தமிழக தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் 2016 சட்டசபை தேர்தலைப்போல அலட்சியத்துடன் காத்து இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது என தினகரன் நாளேடு தலையங்கம் திட்டியுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-
2016 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நேரம். சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தப்பட்ட கன்டெய்னர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. படங்களும், செய்திகளும் பத்திரிகைகளில் வந்தன. ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்பது தேர்தல் கமிஷன் அறிவித்த முடிவு. அதை தொடர்ந்து அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் மற்றும் அவரது நண்பர் அன்புநாதன் பற்றியும் அத்தனை செய்திகள். அதன்பின்னர் திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் மூன்று கன்டெய்னர்களில் கொண்டு போனது பிடிபட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழு அலுவலர் விஜயகுமார், சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்ட பறக்கும் படையினர் துணை ராணுவத்தினருடன் பெருமாநல்லூர்குன்னத்தூர் செல்லும் சாலையில் நிற்காமல் சென்ற 3 கன்டெய்னர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்கள். அதில் இருந்தது வெறும் ரூ.570 கோடி தான். ஆதாரங்கள், நகல்கள் எல்லாம் போலி. அப்போதே தகவல் வெளியானது.
பாதுகாப்பு கூட ரிசர்வ் வங்கிவிதிமுறைகள்படி நடக்கவில்லை. காவலுக்கு சென்ற காவல்துறையினரும் லுங்கியுடன் காட்சி அளித்தார்கள். பணம் பிடிபட்டு 18 மணி நேரம் கழித்தே, கோவை வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோரினர். பலத்த இழுத்தடிப்பு, நாடக காட்சிகள் அரங்கேறிய பிறகு அது விஜயவாடா வங்கி பணம் என்றார்கள். ஆமாம்..ஆமாம் என்றார் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி. நம்புவோம். அதே போல் காட்சிகள் தான் இப்போதும் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. அதுவும் கடந்த சில நாட்களாக.. வழக்கம் போல் தேர்தல் ஆணையம் தமிழகத்தை பொறுத்த வரை மவுன ஆணையமாக காட்சி அளிக்கிறது
தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடா அப்பட்டமாக நடக்கிறது. அதையெல்லாம் இன்றுவரை ஆணையம் கண்டுகொள்ளவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக வழக்குப்பதிவு செய்வதோடு நிறுத்தி விடுகிறது. அமைச்சர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் அளித்தும், அவர்களுக்கு காவல்துறையில் சில அதிகாரிகள் உதவி செய்வதாக பட்டியல் அளித்தும் தென்மண்டல ஐ.ஜி முருகன் உள்ளிட்ட சிலரை தவிர வேறுயார் மீதும் நடவடிக்கை எடுக்க ஆணையம் துணியவில்லை என்பது ஆகச்சிறந்த உதாரணம்.
அதன்விளைவு பட்டவர்த்தனமாக பணப்பரிமாற்றம் ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. ஆட்சி அதிகாரத்தின் முழு லகானும் இப்போது ஆணையத்தின் கையில். உளவுத்துறை அறிக்கை கூட கேட்டு ெபற முடியும். போதாக்குறைக்கு துணைராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வருமானவரித்துறை வாய்பிளந்து காத்துக்கொண்டு இருக்கிறது.
இன்னும் என்ன வேண்டும்? ஏன் நடவடிக்கை எடுக்க தாமதம். சொல்லப்போனால் எங்கெங்கு பணம் கொண்டு சென்று பதுக்கி வைக்கப்பட்டது என்ற விவரம் கூட ஆணையத்தால் பெற முடியும். அத்தனையும் இப்போது ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் தமிழக தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் 2016 சட்டசபை தேர்தலைப்போல அலட்சியத்துடன் காத்து இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
அத்தனை அலட்சியமாக ஆணையத்தின் நடவடிக்கைகள் உள்ளது மக்கள் மனதில் கூட சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இப்படி பட்டவர்த்தன பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டு, ஒரு சட்டசபை தேர்தல் நடந்தால் அது ஜனநாயகம் அல்ல.. பண நாயகம். அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!