Politics
உதய சூரியன் என்ற தடுப்பூசியை செலுத்தினால்தான் அதிமுக எனும் தொற்றுநோய் ஒழியும்; மக்களின் வாழ்வு விடியும்!
ஸ்டாலின்தான் வாராரு’ என்ற பாடல் இன்றைக்கு தமிழகத்தின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது என்றும் சமூக நீதி அரசியல் வெற்றி கண்டவர் கலைஞரின் வாரிசான தளபதி என்றும் திருச்சியில் நடைபெற்ற ``விடியலுக்கான முழக்கம்’’ பொதுக்கூட்டத்தில் `சமூக நீதி’ என்ற தலைப்பில் பேசுகையில் எழுத்தாளர் வே. மதிமாறன் குறிப் பிட்டார்.
திருச்சியில் "விடியலுக்கான முழக்கம்" பொதுக்கூட்டத்தில் எழுத்தாளர் வே.மதிமாறன் ஆற்றிய உரை வருமாறு:
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி நான் ஒரு திடீர் வருகை. எனக்கு இந்த வாய்ப்பு திடீரென்று கிடைத்தது. எப்படிக் கிடைத்தது என்றால், நம்முடைய எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எப்படி முதல்வர் பதவி திடீரென்று கிடைத்ததோ, அதுமாதிரி எனக்குக் கிடைத்தது. அவர் அந்தப் பதவியை எப்படி வாங்கினார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தப் பதவியை எப்படி வாங்கினார் என்றால், தன்னுடைய சுயமரியாதையை கீழே விரித்து, முட்டி தேயாமல் தவழ்ந்து தவழ்ந்து தவழ்ந்து போய் அந்த முதல்வர் பதவியை வாங்கினார். ஆனால், எனக்கு அப்படியில்லை. எனக்கு நேற்று மாலைதான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கான அழைப்பு வந்தது. எனக்கு சிறப்பு அழைப்பு தந்தது யார் என்றால், என்னுடைய சுயமரியாதையை மதித்து, என்னுடைய பெரியார் அம்பேத்கர் சமூக நீதி அரசியலை மதித்து தலைவர் தளபதி சிறப்பாக என்னை அழைத்தார். என்பதினால், இங்கு வந்து சுயமரியாதையோடு பேசுகிறேன்.
தமிழகத்தின் தேசிய கீதம்!
‘‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல்தரப் போறாரு'' இந்தப் பாட்டு சினிமாப் பாட்டு அல்ல. ஆனால், இன்றைக்குத் தமிழகம் முழுவதும் கிராமம், நகரம், பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோர் மத்தியிலும் ஒரு சூப்பர் ஹிட் பாடலாக தமிழகத்தின் தேசிய கீதமாக இருக்கிறது. ‘‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல்தரப் போறாரு'' அதைப் பாடலாக மக்கள் பார்க்கவில்லை. அதற்கு என்ன காரணம் தெரியுமா? அந்தப் பாடலின் உள்ளடக்கம்தான் காரணம். அந்த உள்ளடக்கம் என்ன? தளபதியின் மீது மக்கள் வைத்திருக்கின்ற பேரன்பின் உள்ளடக்கத்தின் காரணமாகத்தான் அந்தப் பாடல் இன்றைக்கு சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. வருங்காலத்தில், விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியில், இந்தப் பாடலைப் பாடுகிறவர்களுக்குத்தான் முதல் பரிசு என்ற சூழல் வரப்போகிறது. குறிப்பாக ஒன்றைச் சொல்லவேண்டும், தமிழ்நாட்டின் பிரமுகர்கள் என்று எடுத்துக்கொண்டால், கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய மூன்று பேரை தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதற்குப் பிறகு, தமிழகம் முழுவதும் தெரிந்த ஒரே பிரமுகர், தலைவர், நம்முடைய தளபதிதான். தளபதியை தமிழகத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் தெரியும்; ஆனால், தமிழக முதல்வராக இருக்கக் கூடியவரை எடப்பாடி ஊரிலேயே தெரியாது.
தமிழகம் முழுக்க அறிந்த ஒரு பிரபலமாக கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு, நம்முடைய தளபதிதான். குறிப்பாக, கலைஞருக்குப் பிறகு தளபதிதான் என்பது எல்லோருக்கும் தெரியும். யாருக்கு? திராவிட ஆதரவாளர்களுக்கு தி.மு.க. ஆதரவாளர்களுக்கு. ஆனால், அதிலிருந்து அடுத்தகட்டத்திற்குத் தளபதி கொண்டு சென்றிருக்கிறார். எப்படித் தெரியுமா? தி.மு.க. ஆதரவாளர்களின் மத்தியில், தி.மு.ககாரர்கள் மத்தியில், கலைஞருக்குப் பிறகு எப்படி தளபதிதான் என்று முடிவாயிற்றோ அதுபோல், தி.மு.க. அல்லாத அண்ணா தி.மு.க. மத்தியில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு, அ.தி.மு.கவுக்கு, இரட்டை இலைக்கு வாக்களித்த மக்கள் மத்தியில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்குப் பிறகு, இன்று தளபதிதான் அங்கேயும் நிற்கிறார். தி.மு.கவிலும் தளபதிதான் வளர்ந்திருக்கிறார்; அ.தி.மு.கவிற்குள்ளும் தளபதிதான் வளர்ந்திருக்கிறார். குறிப்பாக, தாய்மார்கள் எம்.ஜி.ஆரைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்குப் பிறகு ஜெயலலிதாவை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், ஜெயலலிதா அருகே யாரும் செல்ல முடியாது; 10 அடி தள்ளிதான் நிற்க வேண்டும். எப்படி பொன்.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மடத்தில் தரையில் அமர்ந்தாரோ, அதுபோன்றுதான் ஜெயலலிதாவிடம் பெண்களே தள்ளி நிற்பார்கள் தீண்டாமையைக் கடைபிடித்தார் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு, மக்கள் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று விரும்பிய ஒரே தலைவர் யார் என்றால், தளபதி ஒருவர்தான். தளபதியை தாய்மார்கள் தன்னுடைய மகன் மாதிரி பார்க்கிறார்கள்; சகோதரிகள், தன்னுடைய அண்ணன் மாதிரி பார்க்கிறார்கள். மகள்கள், தன்னுடைய அப்பா போன்று பார்க்கிறார்கள். அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் தலைவர் தளபதி! தளபதியோடு தோளில் கை போட்டுக்கொண்டு செல்பி எடுக்கிறார் ஒரு பெண்; இது போன்று வேறு எந்தத் தலைவரிடமாவது முடியுமா? தளபதி அண்ணா தி.மு.க. தொண்டர்களுக்கும் தலைவராகிவிட்டார். தலைவர் எப்படி வளர்ந்திருக்கிறார் என்று பார்த்தீர்களேயானால், நாமெல்லாம் ‘தி.மு.க.வுக்குத் தலைவராக இருக்கிறார்; கலைஞருக்குப் பிறகு தலைவராக இருக்கிறார்’ என்று பார்க்கிறோம். ஆனால், அவர் அ.தி.மு.கவிற்கு இரட்டை இலைக்கு வாக்களித்தவர்களுக்கும் இன்றைக்குத் தலைவராக தளபதிதான் இருக்கிறார். தளபதி அவர்களுக்கு ஆரத்தி எடுக்கின்ற பெண்கள் கைகளில் இரட்டை இலைச் சின்னம் பச்சைக்குத்தப்பட்டிருக்கிறது.
அப்படியென்றால், மக்கள் மத்தியில், அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கிறார், நம்முடைய தளபதி. ‘‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போறாரு'' என்கிற பாடல், மக்களின் உணர்வாக இருக்கிறதா? இல்லையா? மக்கள் என்று நான் சொல்வது, தி.மு.க.வை மட்டும் நான் சொல்லவில்லை; இரட்டை இலைக்கு வாக்களித்த, எம்.ஜி.ஆருக்காக வாக்களித்த மக்கள் இன்றைக்கு நம்முடைய தளபதி தன் தலைவராக எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், நம்முடைய சூப்பர் ஸ்டார் ஒரு திரைப்படத்தில் சொல்வார், ஆண்டவன் சொல்றான்; அருணாசலம் செய்கிறான் என்பார். சூப்பர் ஸ்டார் என்றால், சினிமாவிற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான். அதுபோல, தமிழ்நாட்டு அரசியலின் சூப்பர் ஸ்டார் என்றால், நம்முடைய தளபதி ஒருவர்தான் சூப்பர்ஸ்டார். ரஜினிகாந்த் சொல்லியது போல, நம்முடைய தலைவர் தளபதி (ஆண்டவர்) சொல்கிறார்; எடப்பாடி பழனிசாமி செய்கிறார். கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்று ஆண்டவர் சொல்கிறார்; ஆண்டவர் என்றால், உள்ளாட்சித்துறை அமைச்சராக தமிழகத்தை ஆண்டவர்; துணை முதலமைச்சராக தமிழகத்தை ஆண்டவர் சொல்கிறார்.
நீட் நுழைவுத் தேர்வு விலக்கு வேண்டும் என்று முதல் குரல் கொடுக்கிறார் உடனே எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வருகிறார். நம்முடைய தலைவர் கூட்டங்களில் உரையாற்றுவதை, நாம் பார்க்கிறோமோ இல்லையோ ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான், அந்தக் கூட்டங்களைத் தொடர்ந்து பார்த்துவிட்டு, மாலையில், அவர் சொல்வதை காப்பியடித்து சொல்லிவிடுகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்த அமைச்சர்களையும், முதலமைச்சரையும் விசாரணை செய்து சிறையில் தள்ளுவோம் என்று சொன்னார் நம்முடைய தளபதி. தளபதி சொல்வதையெல்லாம் செய்கின்ற எடப்பாடி பழனிசாமி, உங்களை சிறையில் தள்ளுவோம் என்று சொன்னாரே, அதன்படி செய்வீர்களா? செய்யமாட்டீர்கள்; தளபதி முதலமைச்சராக வந்த பிறகு, ‘‘ஸ்டாலின்தான் வரப்போறாரு, ஊழல் அமைச்சர்களை உள்ளே தள்ளப் போறாரு'' என்று மாறப் போகிறது. ‘கும்பிடுறேன் சாமி’ என்கிற அடிமைத் தமிழையும், ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன ஆதிக்க சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற சுயமரியாதைச் சொல்லை அறிமுகப்படுத்தியது, பிரபலப்படுத்தியது பெரியார் அண்ணா கலைஞர் தலைமையிலான திராவிட இயக்கம்.
‘வணக்கம்’ என்கிற சொல், சமூக நீதியில் திராவிட இயக்கத்தில், தி.மு.கவின் ஒட்டுமொத்த அரசியலின் ஒரு புரட்சிகர குறியீடு ஒரே ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், ‘வணக்கம்’ என்கிற ஒருவார்த்தைப் போதும். அது ஒரு கலகச் சொல்; ஒரு புரட்சிகர சொல். இன்றைக்குக்கூட திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள், தி.மு.க. எதிர்ப்பாளர்கள் முதலில் ஆரம்பிக்கும் பொழுது, திராவிட இயக்கம், தி.மு.க. கொண்டு வந்த வணக்கத்தைச் சொல்லிவிட்டுத்தான், தி.மு.கவையே திட்டுகிறார்கள்.
சமூக நீதியின் புரட்சி வடிவம்!
உங்களை வணக்கம் சொல்ல வைத்தது யார்? மோடியையே வணக்கம் சொல்ல வைத்தது திராவிட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த வணக்கம் என்ற சொல் சமூக நீதியின் ஒரு புரட்சிகர வடிவம். வணக்கம் என்கிற ஒரு தனிச் சொல்லை எடுத்துவைத்துக் கொண்டு, தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியலை மிக விரிவாகப் பேசமுடியும். சமூகநீதி அரசியலின் குறியீட்டை ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், வணக்கம் என்றுதான் சொல்லவேண்டும். சமூகநீதி என்றால் என்ன? கல்வி, வேலை வாய்ப்பில் நமக்கு உரிமை. அதற்குப் பிறகு, மொழி உரிமை தமிழ் உணர்வு சமூகநீதி.
பெண்களின் நலன் குறிப்பாக ஒன்றைச் சொல்லவேண்டும் இந்தியாவிலேயே யாரும் செய்யாத ஒன்றை 2009ஆம் ஆண்டு கலைஞர் செய்தார். ஆதிதிராவிடப் பெண்களுக்கு விமானப் பணிப்பெண் பயிற்சியை இந்தியாவிலேயே முதன்முதலாகத் தொடங்கியவர் டாக்டர் கலைஞர். கல்வி, வேலை வாய்ப்பு, சிறுபான்மை மக்களின் நலன் இவையெல்லாம்தான் சமூக நீதி. சமூக நீதி என்றால் என்னவென்று, அண்ணா தி.மு.க.வில் இருக்கின்ற ஒரே ஒரு நபருக்குக்கூட தெரியாது. முதலமைச்சருக்கே கூட தெரியாது. ஏன் அண்ணா தி.மு.க.காரர்களுக்கு சமூக நீதி என்றால் என்னவென்று தெரியாது என்றால், அண்ணா தி.மு.க.வில் எந்தக் கொள்கையும் இல்லை. ஒரே கொள்கை அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், காலில் விழுந்தோமா காசைப் பார்த்தோமா என்பதுதான் அண்ணா தி.மு.க. இந்தி எதிர்ப்பைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இந்தித் திணிப்பா அண்ணா தி.மு.க. திணித்திருக்கிறது. சமஸ்கிருதத் திணிப்பா அண்ணா தி.மு.க. திணித்திருக்கிறது. நீட் தேர்வா அதையும் செய்திருக்கிறது அண்ணா தி.மு.க. ஏனென்றால், இந்த சமூக நீதி அரசியலில் இருக்கின்ற நீட் எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆதரவு, இந்தி எதிர்ப்பு இவையெல்லாம் இரட்டை இலைக்கு வாக்களித்த மக்களுக்குத் தெரியாது; இதையெல்லாம் படித்து வாக்களிப்பவர்கள் 90 சதவிகிதம் தி.மு.கவிற்குத்தான் வாக்களிப்பார்கள்.
ஆகவே, நீட்டை தேர்விலிருந்து விலக்குக் கோருவதால், பயனில்லை என்று நீட் தேர்வை அமல்படுத்திவிட்டார்கள். ஆனால், தளபதி அடுத்தகட்ட பாய்ச்சலோடு, சமூக நீதியில் ஒரு மாபெரும் தலைவரான தளபதி, கிராமத்தில் உள்ள இரட்டை இலைக்கு வாக்களித்த சகோதரிகளின் முன்பு சென்று கிராம சபைக் கூட்டங்களை நடத்தினார். இதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி அலறினார்; ஏனென்றால், அவர்களுக்கு ஓட்டே அங்குதான் கிடைக்கிறது; அதையும் தளபதி சென்று அடித்து நொறுக்குகிறாரே என்று நீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கினார். கலைஞரின் வாரிசாக தளபதி அவர்கள் சமூக நீதி அரசியலில் வெற்றி கண்டவர், எம்.ஜி.ஆரைப் போல் இரட்டை இலைக்கு வாக்களித்த மக்களைச் சந்தித்து, அவர்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். கைகளில் இரட்டை இலைச் சின்னத்தைப் பச்சை குத்திக்கொண்டு, அவர்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்கக் கூடிய அளவிற்கு தளபதி அவர்களை மாற்றிவிட்டார். அண்ணா தி.மு.க. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பி.எஸ். சோ தலைவர் கிடையாது.
அவர்களுக்கும் தளபதிதான் தலைவர் இன்றைக்கு. அதைக் கண்டு அலறுகிறார்கள். 1923இல் ஆண்டில், எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்றால், நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்; சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் தான் நுழைவுத் தேர்வு எழுத முடியும். சமஸ்கிருத்ததிற்கும், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கும் சம்பந்தமே கிடையாது. எல்லாமே ஆங்கிலத்தில் இருந்தது. எதற்காக சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று வைத்திருந்தார்கள் என்றால், சமஸ்கிருதம் தெரிந்தவர்கள்தான் டாக்டராக முடியும்; மற்ற மக்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒருபோதும் டாக்டராக முடியாது என்றிருந்த சூழலை, அன்றைய நீதிக் கட்சி முதல்வராக இருந்த ராமராய நிங்கர் என்கிற பனகல் அரசர், மருத்துவக் கல்வி சமஸ்கிருத நுழைவுத் தேர்வைத் தூக்கினார்.
நுழைவுத் தேர்வு ரத்து! கலைஞரின சாதனை!
கலைஞருடைய சிறப்பு என்னவென்றால், கலைஞர் அண்ணாவிடம் கற்றுக்கொண்டார்; பெரியாரிடம் கற்றுக்கொண்டார் என்பதெல்லாம் வேறு. ஆனால், ஆட்சி நிருவாகத்தை அவர் யாரிடம் கற்றுக்கொண்டார் தெரியுமா? பனகல் அரசிடம் கற்றுக்கொண்டார். ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுதே பனகல் அரசரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்தான் கலைஞர் அவர்கள். பனகல் அரசர் மருத்துவக் கல்வி படிக்கவேண்டும் என்றால், சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் நுழைவுத்தேர்வு எழுத முடியும் என்று இருந்த நிலையை மாற்றினார். அடுத்தகட்ட பாய்ச்சலாக கலைஞர் அவர்கள், நுழைவுத் தேர்வையே எடுத்து சாதனை செய்தார்.
அதற்குப் பிறகு, தளபதி அவர்கள், நீட் நுழைவுத்தேர்வு வந்தவுடன், இந்தியா முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு உண்டு.. தமிழ்நாட்டில் கூட நீட்டை எதிர்க்கின்ற தேசிய கட்சிகள் அவர்கள் ஆளுகின்ற மாநிலத்தில் நீட்டை இம்ப்ளிமெண்ட் செய்துவிட்டார்கள். ஆனால், சமரசமின்றி நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்த ஒரே தலைவர் யார் என்றால், தளபதி ஒருவர்தான். அதேபோன்று, இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டில் கலைஞர் அவர்களை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. முன்னேறிய ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக மோடி அரசு கொண்டு வந்தது. அந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டை பி.ஜே.பி. அரசு கொண்டு வந்த பொழுது, அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. அரசு, வன்னியர், கள்ளர், செட்டியார், நாயுடு எல்லாருக்குமான இட ஒதுக்கீட்டை குழிதோண்டிப் புதைத்து, அந்த மசோதாவை ஆதரித்துவிட்டு, இன்றைக்கு வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுப்பதாக ஒரு நாடகத்தை நடத்துகிறார்கள். கலைஞர் மண்டல் கமிசனைக் கொண்டு வந்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். இந்த அ.தி.மு.க. அரசு, முன்னேறிய ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராகக் கொண்டு வந்தது.
சமூக நீதியின் குரல் என்றால் என்ன தெரியுமா? அன்றைக்கு நாடாளுமன்றத்தில், கூட்டணிக் கட்சியேயானாலும், கூட்டணிக் கட்சியைச் சார்ந்தவரை ஆதரித்துப் பேசும்போது, பக்கத்திலிருந்த நமது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ‘இது என்ன அநியாயம்?’ என்று ஒருகுரல் கொடுத்தார்களே; அந்தக் குரல் தான் சமூகநீதியின் குரல். திராவிட முன்னேற்றக்கழகம் இந்திய அளவில், முன்னேறிய ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை, நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்தது தளபதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை
கலைஞர் அவர்கள் இடஒதுக்கீட்டில், 1973ல் ஆட்சிக்கு வந்த பொழுது, அன்றைக்கு எஃப்.சி.யாக இருந்த வெள்ளாளக் கவுண்டர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார். அதற்குப் பிறகு 1989ல், பி.சி.யாக இருந்த வன்னியர், கள்ளர், மீனவர்,குயவர், நாவிதர் இன்னும் பல்வேறு ஜாதிகளைச் சேர்த்து அவர்தான் முதல் முறையாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள் இருந்த ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக மாற்றினார். இப்பொழுது அ.தி.மு.க.கொண்டு வந்திருக்கிறதே, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்று சொல்லி, புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களே, அதை அவர்களால் செய்ய முடியாது.
யார் செய்ய முடியும் என்றால், ஆண்டவர் சொன்னார் என்றால், ஆண்டவரேதான் செய்ய முடியும். எப்பொழுது செய்வார்? தளபதி முதலமைச்சரான பிறகுதான், வன்னியருக்கு உள்ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். இன்றைய நாளில், உண்மையான சமூக நீதி எது தெரியுமா? சமூக நீதி பேசுகின்ற தி.மு.க. அல்லாதவர்கள் கூட உண்மையான சமூக நீதி என்னவென்றால், சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கின்ற அ.தி.மு.க. அரசை தேர்தலில் ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு, டெபாசிட் இழக்கச் செய்வதுதான் உண்மையான சமூகநீதி ஆகும். இன்றைக்கு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; நடுநிலை பேசுகின்றவர்களால் தான் ஆபத்து. அண்ணா தி.மு.க.வை விமர்சிக்காமல் தி.மு.க. ஆதரிப்பவர்கள், அவர்கள் உண்மையில் தி.மு.க.வை ஆதரிப்பவர்கள் அல்ல. இரண்டு பக்கமும் துண்டு போட்டு வைக்கிறார்கள். அதேபோல், தி.மு.க.வைத் திட்டுகிறவர்கள் அந்தப் பக்கத்தில் அ.தி.மு.க. பெயர் எடுப்பதற்காக தி.மு.க.வை திட்டுகிறவர்கள்.
ஆகையால், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்முடைய தளபதி அவர்கள் அ.தி.மு.கவிற்குள்ளே சென்று, இரட்டை இலை வாக்குகளையெல்லாம் உதய சூரியன் வாக்குகளாக மாற்றிவிட்டார். அதனால் மாபெரும் வெற்றியாகவிருக்கிறது. அதனைப் பக்குவமாக நாம் மக்களிடம் கொண்டு சென்றுவிட்டால், நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். மார்ச் ஒன்றாம் தேதி தலைவர் தளபதி அவர்களின் பிறந்த நாள். பிறந்த நாள் பரிசை தமிழக மக்கள் ஏப்ரல் 6ம் தேதி தருவார்கள். தேர்தல் ஆணையமே அந்த பிரம்மாண்டமான பரிசை மே 2ம் தேதி அறிவிக்கப் போகிறது. அப்பொழுது சமூகநீதி மாநாடாக இதே திருச்சியில், இதே இடத்தில் தலைவர் பதவியேற்று வந்தபிறகு, அந்த ஆட்சியை, சமூகநீதி ஆட்சியாக நாம்கொண்டாடவேண்டும். கொரோனா ஒழிய வேண்டும் என்றால், நாமெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். அதுபோன்று, தமிழகத்தைப் பிடித்து ஆட்டுகின்ற அ.தி.மு.க. என்கிற தொற்றுநோய் ஒழியவேண்டும் என்றால், உதயசூரியன் என்கிற தடுப்பூசியைப் போட்டால்தான் மக்களுக்கு விடிவு காலம். இல்லையென்றால், வாய்ப்பே இல்லை.
இவ்வாறு வே.மதிமாறன் பேசினார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்