Politics

"கூட்டணியில் சேர்க்குறீங்களா.. நாங்க சேர்த்துக்கட்டுமா?”: அ.தி.மு.கவை மிரட்டும் பா.ஜ.க- பம்மும் பழனிசாமி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க, தே.மு.தி.க இடையே பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஆனாலும் இருகட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என ஃபேஸ்புக்கில் பதிவிட்டது கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதுபோக, டி.டி.வி தினகரனின் அ,ம.மு.க-வை கூட்டணியில் இணைக்க வேண்டும் என அ.தி.மு.க-வை நெருக்கி வருகிறது பா.ஜ.க. ஆனால் இதற்கு ஓ.பி.எஸ் ஒப்புக்கொண்டாலும், எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், அ.ம.மு.க தமது கூட்டணிக்குத் தேவையில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கருதுவதாகத் தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க-வை ஆட்டிப்படைக்கும் பா.ஜ.க-வின் ஆலோசனையை தட்டமுடியாமல் தவித்து வருகிறார் பழனிசாமி.

அ.ம.மு.கவை அ.தி.மு.க கூட்டணியில் இணைக்க மறுக்கும் பட்சத்தி;, பீகார் தேர்தலைப் போல, அ.தி.மு.க தங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் அ.ம.மு.க-வுடன் ‘உள்கூட்டணி’ அமைக்க பா.ஜ.க திட்டமிடுவதாகவும், அதற்கு ஏற்றபடி தொகுதிகளை அளிக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இதனால், செய்வதறியாது திகைத்துள்ளது அ.தி.மு.க தலைமை. பா.ஜ.க ஏற்படுத்தியிருக்கும் புதிய குழப்பத்தால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது கட்சி நிர்வாகிகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணியில் எந்தெந்தக் கட்சி இணையவேண்டும் என்பதைக் கூட சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையில் அ.தி.மு.க தலைமை இருப்பதைக் கண்டு அ.தி.மு.க தொண்டர்களே கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சியின் முடிவுகள் டெல்லியில் உறுதி செய்யப்படும் வரை நமக்கு விடிவு இல்லை என தொண்டர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: “புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி உடைகிறது” : ரங்கசாமியை நம்ப வைத்து கழுத்தை அறுத்த பா.ஜ.க !