Politics

தேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை அறிவித்தார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்நிலையில் உதகை நகரில் உள்ள 36 வார்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வேலுமணியின் உத்தரவின்பேரில் வீடு வீடாக சென்று 500 ரூபாய் பணம், ஒரு வேட்டி, ஒரு சேலை, 200 ரூபாய் மதிப்பிலான ஒரு தட்டு ஆகியவற்றை அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர் அக்கட்சியின் கிளைச் செயலாளர்கள் மூலம் விநியோகம் செய்து வந்துள்ளனர்.

Also Read: தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு!

இதை அறிந்த உதகை நகர தி.மு.க செயலாளர் ஜார்ஜ் உள்ளிட்ட தி.மு.கவினர் அதை தடுக்க சென்ற போது அ.தி.மு.கவினர் அரிவாள் மூலம் நகரச் செயலாளர் ஜார்ஜை தாக்க முயன்றனர். இதை கண்டித்து தி.மு.கவினர் உதகையில் இருந்து 20 கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உதகை வட்டாட்சியர் குப்புராஜ், அ.தி.மு.கவினர் பொருட்களை விநியோகம் செய்த வாகனத்தை பறிமுதல் செய்து, பரிசுப் பொருட்களை வழங்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தி.மு.கவினர் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனிடையே நீலகிரி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் உடனடியாக அதனையும் பறிமுதல் செய்ய வேண்டும் என தி.மு.கவினர் கோரிக்கை வைத்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து ஒரு மணி நேரத்தில் அமைச்சர் வேலுமணியின் உத்தரவின்பேரில் அ.தி.மு.கவினர் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் மற்றும் பரிசு பொருட்களை பட்டுவாடா செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் பிரதமரும் முதல்வரும்.. பழனிசாமியின் ‘தேர்தல் ஸ்டன்ட்’ - மு.க.ஸ்டாலின்