Politics
“பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டில் குற்றச்சம்பவங்களையே உண்டாக்கும்” - ‘தினகரன்’ தலையங்கம்!
எரிபொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்காவிடில் மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் எனக் குறிப்பிட்டு ‘தினகரன்’ நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் துளியளவு கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மக்கள் நலன் மீது இந்த அரசுகளுக்கு எவ்வளவு அக்கறை உள்ளது என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம். இனி வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எரிபொருளுக்கு மாற்று வழியை உடனே கண்டுபிடிக்க முடியாது. அதற்கான சாத்தியமும் தற்போது இல்லை.
மாற்று எரிபொருளுக்கு மாறுங்கள் என மத்திய அமைச்சர் சொல்கிறார். எந்த மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தலாம். ஆட்சியில் இருந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுவது நியாயமா? பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும்; அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்கிற சாதாரண விஷயம் கூடவா அரசுக்குத் தெரியவில்லை.
எதிர்ப்புத் தொடர்ந்து வலுத்து வருவதால், எதிர்வரும் சட்டசபை தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, விலையை சிறிது காலத்துக்கு ஒரே நிலையில் நீட்டிக்கலாம். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வழக்கம் போல், மீண்டும் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கும். தினமும் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டாலும் மாதம் ரூ. 3 ஆயிரம் பெட்ரோலுக்காக செலவிட வேண்டிய அவல நிலையை நடுத்தர மக்கள் சந்திக்கின்றனர். வருமானத்தில் குறிப்பிட்ட பெரிய தொகையை பெட்ரோலுக்காக ஒதுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தேவையற்ற இடங்களிலும் கூட சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதில் மும்முரம் காட்டும் அரசுகள், விலைவாசி உயர்வை குறைப்பதில் அக்கறை காட்டலாமே? பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகை செய்ய வேண்டியதை விட்டு விட்டு, ஆட்சியில் அமர்ந்துகொண்டே குறை கூறுவது ஏற்புடையதல்ல. ஏழைகளுக்கான ஆட்சி என்று சொல்லும் அரசு, ஏழைகளுக்காக என்ன திட்டங்களை செய்துள்ளது? எங்கள் ஆட்சியில் மூன்று வேளையும் மக்கள் சாப்பிடுகிறார்கள். இது எங்களுடைய சாதனை என ஆட்சியாளர்கள் பேசினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, மக்களிடம் இன்னும் தாராளமான பணப்புழக்கம் இல்லாத நிலையில், விலைவாசி உயர்வு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இது அரசுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அது குறித்து பேசுவதில்லை. வளர்ச்சி என்ற வார்த்தை மட்டும் மக்களை வாழ வைத்துவிடாது என்பதை ஆட்சியாளர்கள் அழுத்தமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் வேளையில், காய்கறி விலைகளும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இனி தினக்கூலி செல்பவர்கள், காய்கறி சமைத்து சாப்பிடுவது கேள்விக் குறியாகிவிடும். அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு இவை இரண்டும் சமுதாயத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக, குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும். பழிபோடுவதை விட்டுவிட்டு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் குறைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் உடனே இறங்க வேண்டும். மக்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு மனசாட்சியோடு அரசுகள் செயல்படும் என நம்புவோம். இல்லாவிட்டால், தக்க நேரத்தில் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!