Politics

“உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் குடியரசை திராவிடம்தான் உருவாக்கும்” - பேரா., ராஜன் குறை கிருஷ்ணன் ஆய்வு!

இந்திய தேசியமும், திராவிடமும் உருவான காலகட்டம், அவை இரண்டும் ஏற்படுத்திய முன்னுரிமைகள், மாறுபட்ட பார்வைகள், விளைவுகள் என அவற்றின் தொடர்பான அனைத்தையும் குறித்து, டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் ஆய்வு ரீதியாக எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை, திராடவிட சிந்தனைப் போக்கில் ஆர்வம் கொண்டுள்ள ஒவ்வொருவரும் ஆழ்ந்து படித்தறிய வேண்டிய ஒன்றாகும்!

அக்கட்டுரையின் விவரம் பின்வருமாறு:-

“திடப்பொருட்களின் உருவம் தெளிவாக இருக்கும். உருண்டை, தட்டை, உயரம், அகலம் என்றெல்லாம் தெளிவான பரிமாணங்கள் இருக்கும். காற்றிற்கும், வாயுக்களுக்கும் உருவம் இருக்காது. அருவமாக இருந்து செயல்படும். வாசனை, நாற்றம் என நாசிக்கு புலனாகும், ஆனால் காட்சிக்கு புலனாகாது. ஓவியம் வரைபவர்களில் உருவங்களை அப்படியே பிரதியெடுத்து அச்சாக வரைபவர்கள் உண்டு; ஆனால் சிலர் அருவமாக வர்ணங்களை மட்டும் வைத்து வரைவார்கள். அந்த அருவச்சித்திரம் மனநிலையின், மனோவியலின் நுட்பங்களை புலப்படுத்தும் என்பதே கருத்தாகும்.

அதுபோல சரித்திர நிகழ்வுகளை உருவங்களைப் பிரதியெடுக்கும் ஓவியம் போல ஆண்டுகளை, தேதிகளைச் சொல்லி, நடந்த சம்பவங்களை, இன்னார் இதனை செய்தார். இதனால் இது நிகழ்ந்தது என விவரித்து எழுதலாம். உதாரணமாக இப்போது தமிழக ஊடகங்களில் இதுவரை நிகழ்ந்த தேர்தல்கள், அதில் அமைந்த கூட்டணிகள், வெற்றி தோல்விகளை பல விதங்களில் தொகுத்துக் கூறுகிறார்கள். இந்த வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும், கட்டுரைகளைப் படிக்கும் இளைஞர்களுக்கு ஏதேதோ பல நிகழ்வுகள் முன்னுக்குப் பின் முரணாக நிகழ்ந்ததாக தோன்றலாம். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதைப்போல அணிகள் மாறி, மாறி சேர்வதாகத் தோன்றலாம்.

எப்படி தலைவர்களை, கட்சிகளை மதிப்பிடுவது என்ற குழப்பம் கூட சிலருக்குத் தோன்றலாம். ஒருவேளை அதற்கு மாறாக வரலாற்றை அருவமான கருத்தியல் போக்குகளுக்கிடையே நிகழும் யுத்தமாக எழுதினால் அது வேறொரு புரிதலை தரலாம். அதனால் இந்த கட்டுரை இரண்டாவது முறையைப் பின்பற்றி அருவச்சித்திரமாக தமிழக வரலாற்றைக் கூற முயற்சி செய்கிறது. சற்றே கவனமாக இந்த முறையில் சிந்தித்தால் கூடுதலாக சில தெளிவுகள் நம் மனதில் ஏற்படலாம். அப்படி அருவமாக சிந்திக்க வசதியாக இந்த கட்டுரையில் கட்சிகளின், தலைவர்களின் பெயர்கள் எல்லாம் தவிர்க்கப்படுகின்றன. ஒரு கட்சிக்குள், ஏன் ஒரு குறிப்பிட்ட நபருக்குள் கூட வெவ்வேறு கருத்தியல்கள் வெவ்வேறு சமயங்களில் செயல்படலாம். அதனால் சமயத்தில் இந்த கட்டுரை விடுகதை போல இருக்கும்; ஆனாலும் சிந்திக்க பலன்தரலாம்.

உதாரணமாக கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் புகழ்பெற்ற முதல் வரியில் கார்ல்மார்க்ஸ் a spectre is haunting europe என்று கூறுவார். ஸ்பெக்டர் என்ற ஆங்கில வார்த்தையை பேய், பிசாசு, பூதம், ஆவி என பல தமிழ் சொற்களாக மொழியாக்கம் செய்யலாம். அவர் கம்யூனிஸ தத்துவத்தைக் கண்டு ஐரோப்பிய சமூகம் மிரண்டு போயிருப்பதைக் குறிக்க அதை ஒரு பூதம் என்று கூறினார். தொழிற்சங்கத் தோழர்கள் தொழிலாளர் வர்க்கத்தை "கோடிக்கால் பூதமடா" என்று தங்கள் முழக்கங்களில் வர்ணிப்பார்கள். இப்படியாக பூதம் என்ற உருவகம் அருவமான ஒரு மக்கள் திரள் ஆற்றலை அல்லது மக்களை ஒன்றுபடுத்தும் கருத்தியலை குறிக்கிறது. இதுபோன்ற உருவகங்களைப் பயன்படுத்தி நாம் தமிழக வரலாற்றை சிந்தித்துப் பார்ப்போம்.

காலனீய ஆட்சியிலிருந்து புறப்பட்ட இரண்டு பூதங்கள் தமிழகத்தில் காலனீய ஆட்சியின் இறுதியில் இரண்டு பூதங்கள் உருவாயின. ஒன்று இந்திய தேசியம்; மற்றொன்று திராவிடம். நாம் பூதங்கள் என்று சொல்வதால் அவை தீயவை என்று பொருளில்லை. கருத்தியல் ரீதியான அருவத்தன்மையைக் குறிக்கவே சொல்கிறோம். அதனால் அவற்றில் சிறியது, பெரியது என்ற பாகுபாடும் கிடையாது. எந்த கருத்துமே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கோடிக்கணக்கான மக்களை தன்வயப்படுத்தும் சாத்தியம் கொண்டது. அதே போல இந்த கருத்தியல் பூதங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பார்வைகள் உருவாகி பூதங்கள் பிளவுபடும் சாத்தியமும் உண்டு. இந்திய தேசிய பூதத்திற்கு இரண்டு கண்கள். ஒன்று பார்ப்பனீயம்; மற்றொன்று பன்மைத்துவம்.

இந்த இரண்டு கண்கள் உருவாக்கும் பார்வைகள் கலந்து இயங்கித்தான் பூதத்தின் செயல்பாடுகளை தீர்மானிக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த செயல்பாடுகள் மாறுபட்ட முன்னுரிமைகள் கொண்டதாக இருக்கும். இறையாண்மைக்கு முன்னுரிமை கொடுப்பதும், சமூக மாற்றத்திற்கு முன்னுரிமை கொடுப்பதும், இரண்டு முக்கிய போக்குகள். இறையாண்மைக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்கு முன்னுரிமை கொடுத்து மற்றொரு அடையாளத்தை அந்நியன், எதிரி என்று சொல்லி விரோதத்தை வளர்ப்பது. இது எதிரியை வெளியே அடையாளம் கண்டு போர் புரிவது. சமூக மாற்றத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என்பது சமூகத்தில் வேரோடியுள்ள ஏற்றத்தாழ்வுகள், ஆண்டான்-அடிமை முறை, பொருளாதார சுரண்டல் ஆகியவற்றை களைய முன்னுரிமை கொடுப்பதாகும்.

இந்த அணுகுமுறை எதிரியை சமூகத்திற்குள்ளேயே இனம் காண்பது. பார்ப்பனீயம் வெகுகாலமாகவே இந்திய மண்ணில் பேரரசுகளை தோற்றுவிக்க, வழி நடத்த தர்ம சாஸ்திரங்களை, வர்ண, ஜாதி சிந்தனையை உருவாக்கி வந்துள்ளது. அது காலனீய ஆட்சியில் இந்து மதம் என்ற பெயரில் முன்னெப்போதையும் விட அதிகமாக அனைத்து மக்களையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவர முயன்றது. வட இந்தியாவில் இது முஸ்லீம்களை தன் எதிரியாக வரித்துக் கொண்டு இயங்கியது. பன்மைத்துவ தேசியம் இந்தியாவில் வேரோடியிருக்கும் ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, ஜாதீயம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை சீர்திருத்த முக்கியத்துவம் கொடுத்தது. இது காலனீய ஆட்சியை எதிர்ப்பதை விட சமூகப் பிளவுகளை, மேடு பள்ளங்களை சீராக்குவதையே முக்கியமாகக் கருதியது.

திராவிட பூதத்திற்கும் இரண்டு கண்கள். ஒன்று தமிழ், மற்றொன்று பார்ப்பனீய எதிர்ப்பு, பார்ப்பனரல்லாதோர் என்ற அடையாளம். தமிழ் பார்வை என்பது சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் மேலாதிக்கத்திற்கு எதிராக இருந்தாலும், அது ஒருபுறம் இறையாண்மை நோக்கிற்கும், மற்றொரு புறம் பார்ப்பனீயத்திற்கும் இணையாக செயல்பட வல்லது. ஆனால் பார்ப்பனரல்லாதோர் அடையாளம் அதுசார்ந்த பார்ப்பனீய எதிர்ப்பு என்பது ஆரியம், திராவிடம் என்ற முரணை அடிப்படையாகக் கொண்டதால் இந்திய தேசியத்தின் பார்ப்பனீய பார்வைக்கு முற்றிலும் எதிரானது. சமூக மாற்றத்தை தீவிரமாக முன்னிறுத்துவது; ஏனெனில் இது சமூகத்திலும் பார்ப்பனீய, ஜாதீயக் கருத்தியலை எதிர்த்து இயங்குவது.

Also Read: “திராவிட இயக்க அடித்தளத்தை தகர்க்கும் முயற்சிக்கான கருவி ‘ரஜினி’ ” - சுப.வீரபாண்டியன் அறிக்கை!

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பூதங்களின் மோதல்

சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயசட்டம் மாநிலங்களைத்தான் அரசு என்று அழைக்கிறது (State). ஒன்றிய அரசாங்கம் (Union Government) என்று தான் அனைத்திந்திய அரசை குறிக்கிறது. இதுதான் பன்மைத்துவ பார்வை. ஆனால் நடைமுறையில் அதிகாரம் என்பது ஒன்றிய அரசாங்கத்திடம் குவிந்திருப்பதால் அதுதான் அரசாகவும் (State), மாநிலங்களெல்லாம் அரசாங்கங்களாகவும் (Governments) விளங்குகின்றன. இது பார்ப்பனீய கருத்தியலின் ஆதிக்கம். இந்த கருத்தியல் முரண்பாடு இந்திய தேசியத்திற்கும், திராவிடத்திற்குமான போராட்டத்தின் மையக்களமாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் மக்களாட்சி நடைமுறைகள், தேர்தல்கள் வலுப்பெற்ற போது தமிழகத்தில் திராவிடம் மிகுந்த வலுவடைந்தது. இந்திய தேசியத்தால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் அது திராவிடத்திலிருந்தே தனக்கொரு மாற்றை (Proxy) உருவாக்கியது. அதுதான் அனைத்திந்திய திராவிடம்.

இதன் இரண்டு கண்கள் முற்றிலும் முரண்பட்ட பார்வைகளைக் கொண்டவை. ஒன்று நகல்வாதம்; அது திராவிட அரசியலை நகல்செய்வது. மற்றொன்று முரண் வாதம். அதாவது திராவிடத்தை எதிர்த்து அழிப்பது. இந்த பூதம் அனைத்திந்தியத்தின் திராவிட வடிவம் என்பதால் தனக்கென உள்ளீடற்றது. அதனுள் இயங்கும் தீவிர முரண் காரணமாக அது ஒன்று முரண்வாத பார்வையை இழந்து திராவிடத்தில் கலக்கவேண்டும்; அல்லது நகல்வாத பார்வையை இழந்து அனைத்திந்தியத்தில் கலக்கவேண்டும். இதை வேறொரு விதமாகவும் கூறலாம். அனைத்திந்திய திராவிட பூதத்தின் உருவாக்கமே திராவிட எதிர்ப்பு என்பதால் அது திராவிடத்தை அழிக்க முடிந்தால் அனைத்திந்தியத்துடன் சேர்ந்து விடும்.

அழிக்க முடியாவிட்டால் திராவிடத்துடன் சேர்ந்துவிடும். இந்த இரண்டில் ஒன்று நிகழும் வரை திராவிடத்திற்கும், அனைத்திந்தியத்திற்குமான யுத்தத்தில் இரண்டு சக்திகளுடைய மாற்றாகவும் மாறி, மாறி செயல்படும். அதாவது இந்திய தேசியம், திராவிடம் இரண்டும் மாறி, மாறி தன்னுள் செயல்படும் இடைநிலைக் களமாக, ஆங்கிலத்தில் Buffer zone என்று சொல்லப்படுவதாக இயங்கும். வேறு வார்த்தைகளில் சொன்னால் ஒரு அரசியல் பச்சோந்தியாக இருக்கும். மரத்தில் ஏறினால் மரத்தின் வர்ணம். இலையில் ஊர்ந்தால் இலையின் வர்ணம். தீவிரமாக பிளவுபடும் இந்திய தேசிய பூதம் இந்திய தேசியத்தினுள் பார்ப்பனீய பார்வை வலுவடைந்து கிட்டத்தட்ட பூதத்தை இரண்டாக பிளந்துவிட்டது எனலாம்.

பன்மைத்துவ பார்வை வலுவிழந்து போராடிக் கொண்டிருக்கிறது. பார்ப்பனீய பூதம் அதை முற்றிலும் வெளியேற்றி அழிக்கத் துடிக்கிறது. தீவிர இஸ்லாமிய வெறுப்பு, முற்றிலும் பெருமுதலீட்டிய நலன் என்ற பார்வைகளைப் பெற்று பன்மைத்துவ தேசியத்தின் சாத்தியங்களை ஒழித்துவிட முனைகிறது. ஒன்றிய அரசாங்கத்தை (Union Government) ஒற்றை அரசாக (Unitary State) தகவமைக்கத் துடிக்கிறது. திராவிட பூதம், அதன் முரண்-நகலான அனைத்திந்திய திராவிட பூதம் இரண்டிற்குமே இந்திய தேசியத்தின் பன்மைத்துவ பார்வையுடன் உறவு கொள்வது சுலபமானது. பன்மைத்துவ பார்வை முதிர்ச்சியடைந்தால் அது திராவிடத்துடனேயே ஆரோக்கியமான உறவு கொள்ளும். அது பலவீனமடைந்தால் தன்னுடைய திராவிட மாற்றான (Proxy) அனைத்திந்திய திராவிடத்துடன் உறவு கொள்ளும். இந்திய தேசியத்தின் பார்ப்பனீய பார்வையுடன் உறவு கொள்வது திராவிடத்திற்கும் சரி, அதன் முரண்-நகலான அனைத்திந்திய திராவிடத்திற்கும் சரி கடினமானதுதான். பார்ப்பனீய இந்திய தேசியம் முற்றும்போது திராவிடம் அதன் முதல் எதிரியாகவே மாறித்தான் தீரும்.

அனைத்திந்திய திராவிடமோ பெரும் சிக்கலுக்கு உள்ளாகும். அதன் முரண் பார்வை, நகல் பார்வை இரண்டையும் அதனால் கலந்து இயங்க முடியாது. முரண் பார்வையை அதிகரிக்கச் சொல்லி பார்ப்பனீயம் வற்புறுத்தும். களச்சூழ்நிலையோ நகல் பார்வையை அதிகரிக்கச்சொல்லி கேட்கும். இலையில் மரத்தின் நிறமாகவும், மரத்தில் இலையின் நிறமாகவும் வெளிப்பட்டு மாட்டிக் கொள்ளும். இடைநிலக்களம் என்ற Buffer zone போர்க்களமாகும். இந்திய தேசியம், திராவிடம் இரண்டும் சேர்ந்து இயங்க ஒரே வழி இந்திய தேசியத்தின் பன்மைத்துவ பார்வை வலுவடைந்து, முதிர்ச்சியடைந்து முழுமையான மாநில சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஏற்படுவதுதான்.

அதற்கு மாற்றாக பார்ப்பனீய இந்திய தேசியம் திராவிடத்தை அழிக்க முயன்றால் அதுமுடிவற்ற முரண்பாட்டிற்கே வழி வகுக்கும். ஏனெனில் இன்று பல்வேறு மாநிலங்களில் அதனதன் பண்பாட்டுவேர்களிலிருந்து பூதங்கள் உருவாகிவிட்டன. இந்திய தேசியத்தால் அவை அனைத்தையும் அழிக்கவும் முடியாது, அடக்கவும் முடியாது. பார்ப்பனீய பார்வை தன் தோல்வியை சுலபத்தில் ஏற்றுக்கொள்ளாது. அதன் குறுகிய பார்வையில் அது வெற்றிவாகை சூடுவதாகவே கருதிக்கொள்ளும். இந்திய தேசியத்தினுள் அது பன்மைத்துவப் பார்வையை வெற்றிகொண்டுவிட்டதாக நினைக்கும். ஆனால் இந்திய தேசிய பூதத்திற்கு வெளியே இன்று பல மாநில பூதங்கள் உருவாகிவிட்டன, உருவாகி வருகின்றன. அவை பன்மைத்துவ பார்வையை தவிர்க்க இயலாததாக மாற்றுவதை பார்ப்பனீய தேசியத்தால் தடுக்க முடியுமா என்பதே கேள்வி. இஸ்லாமிய வெறுப்பும், பெருமுதலீட்டிய நலன்களும் அதனை தூக்கிப் பிடிக்கலாம்; அது தற்காலிகமானது. திராவிடம் இந்திய பன்மைத்துவத்தின் ஆதார விசை என்றால் மிகையாகாது. என்றைக்கிருந்தாலும் அது உண்மையான இந்திய கூட்டாட்சி குடியரசை உருவாக்கும் என்றே வரலாற்று விசைகளின் இயக்கங்களை கவனிக்கும்போது தோன்றுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “உலகிலேயே கட்டமைப்புள்ள ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்” - தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!