Politics
“புதுவை ஜனநாயக படுகொலையை எதிர்த்து திமுக காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்” - மு.க.ஸ்டாலின்
மத்திய பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!" என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தைப் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்யும் படுபாதகச் செயலையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது.
துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடியைக் கொண்டு, புதுவை யூனியன் பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசின் உரிமைகளைப் பறித்ததுடன், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து முதலமைச்சர் நாராயணசாமி அவர்களும் கூட்டணியினரும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வந்தன.
துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களை மாற்ற வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு - போராட்டங்கள் நடத்தப்பட்டபோது அலட்சியமாக இருந்து, புதுச்சேரி மக்களை வஞ்சித்த மத்திய பா.ஜ.க. அரசு, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களை மாற்றிவிட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் அவர்களைத் துணை நிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பாக நியமித்த போதே இதன் உள்நோக்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.
மிகவும் மோசமான - அரசியல் நாகரிகமற்ற அந்த உள்நோக்கத்தின் அடிப்படையில், குதிரை பேரம் நடத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் - தாங்களாகவே நியமித்துக்கொண்ட உறுப்பினர்களுக்குப் பேரவையில் வாக்குரிமை உண்டு எனச் சொல்லியும், புதுச்சேரியில் மக்கள் நலன் காத்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசைக் கவிழ்த்திருக்கிறது பா.ஜ.க.
பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளையும் - சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி அவர்கள். ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.
தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில் ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாவிட்டாலும், அடிமை அ.தி.மு.க.வை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவதுபோல, புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணை நிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயற்சித்தால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தி.மு.கழகம் துணை நிற்கும்.
அதிகார துஷ்பிரோயகம் செய்து சட்டமன்றங்களில் சடுகுடு ஆடலாம். மக்கள் மன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அதனால், இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!
Also Read
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!