Politics
மாநிலங்களவையில் இருந்து விடைபெற்றார் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் : கண்ணீர் மல்க பிரியாவிடை
காங்கிரஸ் எம்.பியும், மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் பிப்ரவரி 15ம் தேதியோடு முடிவடைகிறது. இதையொட்டி மாநிலங்களவையில் இவர்களுக்குப் பிரியாவிடை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், குலாம் நபி ஆசாத் பேசுகையில், “பாகிஸ்தானுக்குச் செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். அங்குள்ள சூழ்நிலைகளைப் பற்றி நான் கேள்விப்பட்ட போது ஒரு இந்திய முஸ்லிமாக நான் பெருமை கொள்கிறேன்.
தீவிரவாதமும், பயங்கரவாதமும் நாட்டிலிருந்து ஒழிய வேண்டும். எல்லையைக் காக்கும் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழப்பது எப்போது முடிவுக்கு வரும்?” என கண்ணீர் மல்க குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் தனது இறுதியுரையாற்றினார்.
முன்னதாக பேசிய பிரதமர் மோடி, “உயர்ந்த பதவிகள் வரும், அதிகாரம் வரும். இதையெல்லாம் எப்படிக் கையாளுவது என்பதை நாம் குலாம் நபி ஆசாத்திடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். குலாம் நபி ஆசாத் ஒரு ஆகச் சிறந்த மனிதர். அவர் வகிக்காத பதவிகள் இல்லை.
குஜராத்தைச் சேர்ந்த சிலர் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிக்கொண்டபோது, ஆசாத்ஜியின் முயற்சிகளையும், பிரணாப் முகர்ஜியின் முயற்சிகளையும் நான் ஒரு போதும் மறக்கமாட்டேன். அவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்” என பிரதமர் மோடி பேசினார். அப்போது ஒருகட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது மாநிலங்களவையில் இருந்து விடைபெறும் குலாம் நபி ஆசாத்துக்கு கண்ணீருடன் விடை கொடுத்தார் பிரதமர் மோடி.
மக்களுக்காகவும், இந்திய நாட்டிற்காகவும் 28 ஆண்டுகளாக மாநிலங்களவையிலும், மக்களவையிலும் குரல் கொடுத்தவர் குலாம் நபி ஆசாத். மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக 3 ஆண்டுகள் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாது, மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார்.
பகுதிச் செயலாளராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய குலாம் நபி ஆசாத், இந்திய தேசிய காங்கிரசின் பொதுச்செயலாளராக 9 முறையும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக 18 ஆண்டுகளும் இருந்துள்ளார்.
குலாம் நபி ஆசாத்துடன் சேர்ந்து, நஜீர் அகமது லாவே மற்றும் முகமது ஃபயாஸ், ஷம்ஷர் சிங் ஆகியோரும் பிப்ரவரி 15ம் தேதியிலிருந்து விடைபெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!