Politics

“பாரத ரத்னா விருதுக்கு தகுதியில்லாதவர் சச்சின்” - காங்கிரஸ் எம்.பி. கடும் விமர்சனம்!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போலிஸாரின் அடக்குமுறையை மீறி அமைதியான முறையில் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

இவர்களின் போராட்டத்திற்கு உலக முழுவதும் இருந்தும் ஆதரவு குரல்கள் ஒலித்து வருகிறது. கிரேட்டா தன்பெர்க், ரிஹானா, மீனா ஹாரிஸ், மியா கலீபா உள்ளிட்ட உலக பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

இவர்களின் ஆதரவை எதிர்க்கும் விதமாக, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கும்ளே, ரவி சாஸ்திரி, லதா மங்கேஷ்கர், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கான் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் புயலை கிளப்பியது. மேலும் மத்திய பாஜக அரசுதான் அவர்களைத் தூண்டி உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

சச்சினின் கருத்து குறித்து,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில் “வேறு துறையைப் பற்றி பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை அவமானப்படுத்தும் நோக்கில் அவர்களைத் தீவிரவாதிகள் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜஸ்பீர் கில், “சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் அல்ல. ஏதோவொன்றை எதிர்பார்த்து அரசுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கிறார். அவர் தனது மகன் அர்ஜுனை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தேர்வு செய்ய விரும்பினார். சச்சின் பாரத ரத்னாவுக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிக்க மக்களிடமே விட்டுவிட விரும்புகிறேன்’’ என்று விமர்சித்துள்ளார்.

அதேபோன்று, மகாராஷ்டிர நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவும், “மத்திய பாஜக அரசு, ‘பாரத ரத்னா’ விருது பெற்ற லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை நிர்ப்பந்தப்படுத்தி, ரிஹானாவுக்கு எதிராக ட்வீட் போட வைத்துள்ளது. இதுபோல தேசிய அடையாளம் கொண்டோரை தங்கள் விளம்பரத்துக்காகத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. லதா மங்கேஷ்கரும், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மக்களின் கிண்டலுக்கும் ஆளாகியதற்கு மோடி அரசுதான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.

Also Read: ரிஹான்னா கருத்துக்கு எதிர்ப்பு - விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.கவினரின் குரலை ஒலிக்கிறாரா சச்சின்?