Politics
ஆறுமுகசாமி ஆணையத்தின் நீட்டிப்பும்.. ஜெயலலிதா நினைவிடத் திறப்பும்..! - முரசொலி தலையங்கம்
குடியரசு தினமான ஜன.26ஆம் தேதி நாளேடுகளில் மூன்று செய்திகள் வெளியானதை நாம் பார்த்தோம். முதலாவதாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் 10-ஆவது முறையாக ஆறுமாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஜூலை 24ஆம் தேதி வரை ஆணையத்தின் நீட்டிப்பு இருக்கும் என்று அந்த அரசு உத்தரவுப்படி கணக்காகிறது. 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணையம் இதுவரை 150 பேரிடம் விசாரணை செய்து இருக்கிறது. இந்த ஆணையம் அமைப்பதற்குக் காரணமாக இருந்த துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை இவ்வாணையம் பலமுறை அழைத்தும் அவர் ஆஜராகி சாட்சியம் சொல்ல முன்வரவில்லை.
இன்று வானத்திற்கும், பூமிக்குமாகக் குதித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசால் எந்த நோக்கம் நிறைவேற அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற ஒத்துழைப்பு நல்கவில்லை. ஆனால், என்ன சொல்கிறார்கள் - ஜெயலலிதா ‘எங்கள்’ அம்மா என்று சிலாகித்துச் சொல்கிறார்களே தவிர, ஆணையத்தின் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வர அவர்கள் முயலவில்லை. வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்தின் உண்மை நிலை என்ன? அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பதை ஆறுமுகசாமி ஆணையத்தின் வழி இந்த நாட்டுக்குச் சொல்லாமல் ஆணையத்தின் காலத்தைஜூலை 24 வரை நீட்டிப்புச் செய்து விட்டார்கள். ஆணையத்தின் நோக்கத்தை நிறைவேற்ற ஒத்துழைப்புக்கொடுக்கத் தவறிவிட்டார்கள்.
இரண்டாவது செய்தியாக ஜன.27ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் திறப்பதாக வெளியாகி இருக்கிறது. நேற்று நினைவிடத்தையும் திறந்து வைத்துவிட்டார்கள். ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருக்கிறது என்று சொன்ன மனிதர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நினைவிடத் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நினைவிடத்தை திறந்து வைத்து இருக்கிறார். ஜெயலலிதா ஒரு கட்சியின் தலைவராக இருந்திருந்தால் மட்டும் இப்படி நடந்து இருக்குமா?அரசுப்பணம் நினைவிட கட்டுமானத்திற்கு என்று ரூ.80 கோடி செலவாகி இருக்க முடியுமா? அவர் தமிழ்நாட்டின் முதல்வராக மரணம் அடைந்ததனால்தான் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவ்வளவு செல்வாக்குள்ள முதல்வர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று கிளப்பியவர் தி.மு.க.காரர் இல்லை. பன்னீர்செல்வம்; துணை முதல்வராக இருப்பவர். அவரே ஆணையத்தின் முன்னே சாட்சியம் அளிக்காமல் நினைவிட நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கிறார். நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஒரு செல்வாக்குள்ள முதல்வர் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே, உண்மையில் என்னதான் நடந்தது என்று தெரிந்து கொள்வதில் அக்கறைக் கொண்டு இருக்கிறார்கள். அனுதாபத்தோடு அதை அறிந்து கொள்ள நினைக்கிறார்கள்.
ஆனால், அந்த அக்கறையோ, அனுதாபமோ பன்னீருக்கோ, பழனிச்சாமிக்கோ இல்லை. அதற்குப் பதிலாக நினைவிடத்தை எழுப்பி ஆணையத்தின் செயற்பாட்டை மக்களிடமிருந்து மறைக்க நினைக்கிறார்கள். இவர்களின் இந்த நடவடிக்கைகளைக் கவனித்த நமது கழகத்தலைவர் சில மாதங்களுக்கு முன்பே ‘நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கும்’என்று கூறினார். இதோடு மூன்றாவது செய்தியாக கழகத் தலைவர் ஸ்டாலின் வீர வணக்கநாள் கூட்டத்தில் பேசுகிற போது, ஆணையத்தைப் பற்றியும், நினைவிடத் திறப்பு விழாப்பற்றியும், ஜெயலலிதாவின் இறப்புப் பற்றியும் எடுத்துரைத்து உரையாற்றி இருப்பதை நாம் படித்துப் பார்த்தோம். அதில் அவர்கள் ஒரு வினாவை எழுப்பி இருக்கிறார்கள். முதல்வர் பதவியில் இருக்கிறபோதே, தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய மூன்று பேர் மரணம்அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் மருத்துவமனையில் இருந்துஇருக்கிறார்கள்.
அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் இருந்தபோதுதான் மறைந்தார். அவர் இருக்கிற வரை அவரின் உடல் நிலை குறித்து தினந்தோறும் காலையிலும், மாலையிலும் அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த சாதிக்பாட்சா நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்வார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்து தினம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது விஜயபாஸ்கர் அப்போதும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார். அவர் ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பற்றி தினந்தோறும் நாட்டு மக்களுக்கு எதுவும் சொல்ல வில்லை. அது ஏன்? - என்ற கருத்தைத் தான் வினாவாகக் கழகத் தலைவர் ஸ்டாலின்அவர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.இது மட்டுமன்று ஜனவரி 26ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாகுறித்து கழகத் தலைவர் நீண்ட விளக்க அறிக்கையை மிக விவரமாக வழங்கிஇருக்கிறார்.
அதன் ஒரு பகுதியில், ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மம் என்ன, அதற்கு யார் யாரெல்லாம் காரணம் என்பதை, நான்குஆண்டுகள் கழித்தும் கண்டுபிடிக்க முடியாத கண்டுபிடிக்க விரும்பாத, ஜெயலலிதாவின் உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத, பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைப்பதற்கான, அடிப்படை தார்மீக உரிமையோ - அருகதையோ இருக்கிறதா என்பதுதான், நாட்டு மக்களும், ஜெயலலிதா விசுவாசிகளும் இப்போது எழுப்புகின்ற முக்கியக்கேள்வியாக இருக்கிறது"" என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் ஆராய வேண்டுமானால் தி.மு.கழக ஆட்சி அமையவேண்டும். மேலே சொன்ன ஆணையத்தின் நீட்டிப்பு என்பது ஜூலை வரை இருக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் முடிவுகள் தி.மு.கழக ஆட்சியைப் பிரகடனப்படுத்த இருக்கிறது.
அதன் பிறகு, ஜெயலலிதா மரணம் பற்றிய உண்மை நிலவரத்தை அறிய எல்லா வகை வசதிகளும் நம் கழக அரசுக்கு வாய்க்கும். ஜெயலலிதாவின் நினைவிடத்தைப் பற்றி நாம் ஒன்றும் விமர்சிக்கப்போவதில்லை. அதை வரலாறு உண்மை நிலவரத்தோடு பதிவு செய்து கொள்ளும். வருங்கால சந்ததியினர் அதனைப் படிப்பர்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!