Politics
அதிமுக பேனர்: நீதிமன்ற ஆணையை முதல்வரே தொடர்ந்து மீறுவது முறையா? - EPSக்கு திமுக எம்.எல்.ஏ சரமாரி கேள்வி!
“கோவையில் உள்ள பல மேம்பால கட்டுமான பணிகளை பத்து ஆண்டுகளாக தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை தாமதம் செய்து கொண்டிருப்பதன் காரணம் என்ன? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
சாலைகளில் கட் அவுட்கள் , பேனர்கள் வைக்கக் கூடாது என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் , ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு , நீங்களே அதை மீறுவது முறையா? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் பத்து ஆண்டுகளாக தாமதம் ஏன்? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்” என முதல்வர் பழனிசாமிக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ சரமாரியாக கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-
“முதல்வர் பழனிசாமியின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைத் துறையினால் கோவையில் உள்ள பல மேம்பால கட்டுமான பணிகள் ,எந்த ஒரு தொலை நோக்கு பார்வையும் , சரியான திட்டமிடலும் இல்லாமல் , மக்கள் படும் சிரமங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், கடந்த பத்து வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. மேம்பால கட்டுமான பணிகளை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை தாமதம் செய்து கொண்டிருப்பதன் காரணம் என்ன? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
SIHS காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் ( LC 4 )
சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பகுதியில் மேம்பாலம் கட்ட, கடந்த 201௦ ம் ஆண்டு டிசம்பர் மாதம் , திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களால், ரூ 23 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக கோவை மாவட்ட நிர்வாகம் மேம்பால பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதிலும், உரிய இழப்பீடுகள் வழங்குவதிலும் முறையானபடி நடவடிக்கை எடுக்கவில்லை..இது குறித்து நான் கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் பேசியுள்ளேன் .மக்களை திரட்டி பல கட்ட ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆனாலும் கடந்த பத்து ஆண்டு காலமாக இந்த மேம்பால கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? ஒரு மேம்பாலம் கட்டுவதற்கு பத்து ஆண்டுகளா? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம்( LC 5 )
கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சிகாலத்தில், தலைவர் கலைஞர் அவர்களால் நீலிகோணம்பாளையம் பகுதியில் LC 5 இரயில்வே மேம்பாலப் பணி துவக்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்குப்பிறகு 10 ஆண்டு காலமாக அந்தப் பணிகள் எதுவும் தொடங்காமல் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டு காலமாக இந்த மேம்பால கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாதது ஏன்? ஒரு மேம்பாலம் கட்டுவதற்கு பத்து ஆண்டுகளா? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்.
ஹோப் காலேஜ் தண்ணீர் பந்தல் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் ( LC 6 )
ஹோப் காலேஜ் தண்ணீர் பந்தல் ரயில்வே உயர்மட்டமேம்பாலம், கட்டுவதற்கு 2010 ம் ஆண்டு, திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 10 வருடங்களாகியும் 10 சதவிகிதப் பணிகள்தான் நடந்தது. அதற்குப்பிறகு அந்தப் பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக , அப்படியே கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டு காலமாக இந்த மேம்பால கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? ஒரு மேம்பாலம் கட்டுவதற்கு பத்து ஆண்டுகளா? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
விபத்தை ஏற்படுத்தும் கட் அவுட்கள்
சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு, விபத்து ஏற்படுத்தும் முறையில் கட் அவுட்கள் , பேனர்கள் வைக்கக் கூடாது என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் , ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு , நீங்களே அதை மீறுவது முறையா? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் என்ற பெயரில் ,உக்கடம் பெரியகுளத்தில் பணிகள் எதுவும் நிறைவடையாமல் ,கடந்த 25.06.2020 அன்று , தமிழக முதல்வரை வரவழைத்து, அவசரகதியில் திறந்து வைக்கப்பட்டது. அது என்ன நோக்கத்திற்காக அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது?. முடிக்காத பணிகளுக்கு அவசரமாக துவக்க விழாவா? நடக்காத பணிகளுக்கு சாதனை விழாவா? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகள்
கடந்த 2009 தி.மு.கழக ஆட்சியில், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் , கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 377 கோடி நிதி ஒதுக்கி, மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்த பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் சுமார் பத்து ஆண்டுகளாகியும் இனியும் முடிக்கப்படாமல் இருப்பது ஏன்? இதுதான் உங்களின் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் சாதனையா? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
சூயஸ் ஒப்பந்தம்
பொலிவியா நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு , 26 ஆண்டுகளுக்கு, ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு மக்கள் விரோத ஒப்பந்தத்தை வழங்கியதற்கு காரணம் என்ன? குடிநீரை வணிகமாக்குவதுதான் அரசின் திட்டமா? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
குடி மராமத்து பணிகள்
குடிமராமத்துப் பணிகளுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டமன்றத்தில் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் குடி மராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம் குறித்து முதல்வரிடம் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை முதல்வரிடம் இருந்து எந்த ஒரு தெளிவான பதிலும் இல்லை.
இந்த 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி இதுவரை கோவையில் என்ன குடி மராமத்து பணி செய்துள்ளீர்கள்? கோவையில் உள்ள சங்கனூர் ஓடைகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் , குடி மராமத்து பணிகள் எங்கு, எப்போது நடைபெற்றது? கோவையில் குடி மராமத்து பணிகளுக்கு ஒதுக்கிய பல கோடி ரூபாய் எங்கே? மக்கள் கேட்கிறார்கள்! முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
சிறு ,குறு, நடுத்தர , தொழில் நிறுவனங்கள் வீழ்ச்சி
கோவை மாவட்டத்தில் நெருக்கடியில் தவிக்கும் லட்சக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள் , நூற்பாலைகள் , தொழில் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு , மின்சார கட்டணம், கடன் தள்ளுபடி , வட்டி தள்ளுபடி , வரி சலுகைகள் , வங்கிகளில் கடன் முன்னுரிமை , கடனுக்கான வட்டி சதவிகிதம் குறைப்பு உள்ளிட்ட எந்த ஒரு சலுகைகளும் தமிழக அரசு வழங்காததால் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனங்கள் இப்போது 8 மணி நேரம் இயங்குவதே அரிதாக உள்ளது. கோவையில் தொழில் துறையை நம்பி வாழும் குடும்பங்கள் வேறு தொழில்களுக்கும் வேறு இடங்களுக்கும் மாறும் நிலைமை உருவாகியுள்ளதற்கு காரணம் நீங்கள் தானே?. முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
விமான நிலைய விரிவாக்க பணிகள்
கோவை விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்கு 2010 ம் ஆண்டு, திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களால் சுமார் 355 கோடி ரூபாய் நிதி நிலத்தை கையகப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக நிலம் எடுக்கப்படுமா அல்லது விடப்படுமா போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் பல ஆயிரம் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை எண்ணி தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள்.கோவையின் ஒட்டு மொத்த தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் இத்தனை ஆண்டுகளாக தாமதம் ஏன்? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
மேற்கு புற வழிச் சாலை
2011 ம் ஆண்டு தி மு க ஆட்சியின் போது, 284 கோடி திட்டச்செலவில், கோவைப்புதூரில் பாலக்காடு சாலையிருந்து மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் 26-கிலோமீட்டர் நீளமுள்ள மேற்கு புறவழிச்சாலை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த திட்டத்தில் இதுவரை சர்வே பணிகள் கூட முடியவில்லை. மேற்கு புற வழிச் சாலை திட்டத்தை இன்னும் செயல்படுத்தாமல் இருப்பதன் காரணம் என்ன? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
உழவர் சந்தை அடுக்கு மாடி குடியிருப்புகள்
சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் பழுதடைந்துள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர இன்னும் தாமதம் செய்வதின் காரணம் என்ன? பத்து ஆண்டுகளாகியும் இன்னும் சிறு கல் கூட நகர்த்தப்படாதது ஏன்? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
வெள்ளலூர் குப்பை கிடங்கு
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, இப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு பிரச்சினைகளுக்கு இது வரையிலும் நிரந்தர தீர்வு காணாதது ஏன்? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
வெள்ளலூர் என்.ஜி.ஆர் தரைப்பாலம்
சிங்காநல்லூர் - வெள்ளலூர் செல்லும் ரோட்டில், நொய்யல் ஆற்றின் மீது உள்ள குறுகிய என்.ஜி.ஆர் பாலத்தின் பல இடங்களிலும், சுவர்களிலும், தாங்கு தூண்களிலும் விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் இந்த பாலம் இடிந்து விழும் சூழல் உள்ளது. கடந்த பத்து ஆண்டு காலமாக இந்த தரைப் பால கட்டுமானப் பணிகளை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள்
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் , பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தாறுமாறாக தோண்டப்பட்டு பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக பயனற்ற வகையில் முக்கிய சாலைகள் அனைத்தும் உள்ளன. இதுதான் உங்கள் ஸ்மார்ட் சிட்டியா? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு சாலை கோவை மாநகராட்சி 40 , 41 வது வட்டம், ஸ்ரீராம் நகர் இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு சாலையில் இருந்து சத்தி சாலை வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு முற்றிலும் பயனற்ற வகையில் உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு நிறுவனத்திடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று, இந்த பகுதியில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கு மத்திய அரசுடன் கலந்து பேசி , அனுமதி பெற கடந்த பல ஆண்டுகளாக ஒரு சிறு முயற்சி கூட எடுக்காதது ஏன்? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே ! பதில் சொல்லுங்கள்
ABP நியூஸ் மற்றும் சி-வோட்டர் நடத்திய சர்வேயில், மோசமான முதலைமைச்சர்கள் பட்டியலில் 5வது இடம் பெற்ற முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே, கோவை மக்களின் மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கு உங்களிடம் பதில் உள்ளதா? மக்கள் கேட்கிறார்கள் . பதில் சொல்லுங்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!