Politics

“முதற்கட்ட ஊழல் புகார்களுக்கே இவ்வளவு பதற்றம் வேண்டாம்” - முதல்வர் பழனிசாமிக்கு துரைமுருகன் பதிலடி!

“தி.மு.க. செய்துள்ள சாதனைகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல், தி.மு.கழகத்தையோ, எங்கள் தலைவரையோ விமர்சிக்க, ஊழல் மலைமீது அமர்ந்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கோ அவரது அமைச்சரவை சகாக்களுக்கோ அருகதை இல்லை” என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தி.மு.க.வினர் வீட்டுக்காக உழைத்து வருகிறார்கள்” “சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா?” என்று “தலையும் தெரியாமல் வாலும் தெரியாமல்” முதலமைச்சர் பழனிசாமி புலம்பியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சரின் கண்களுக்கு “கமிஷனும்” “கலெக்சனும்” மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் எங்கள் கழகத் தலைவர் சென்னை மேயராக - உள்ளாட்சித்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராகச் சென்னை மாநகரத்திற்கும் – தமிழகத்திற்கும் ஆற்றிய சாதனைகள் தெரிந்திருக்க நியாயமில்லை. அவருக்கு எந்த டெண்டரில் என்ன சதவீதம் என்று கேட்டால் - குறிப்பு இல்லாமலேயே பழனிசாமி பதில் சொல்லி விடுவார். தி.மு.க ஆட்சியில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், துணை முதலமைச்சராக எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆற்றிய பணிகள் எப்படித் தெரியும்?

ஆனால், தினமும் எடப்பாடி பழனிசாமி கோட்டைக்குப் போவதும் - அதற்கு முன்பு மறைந்த ஜெயலலிதா அம்மையார் “சம்மன்” அனுப்பினால் அவரைப் பார்ப்பதற்கு போயஸ் தோட்டத்திற்குப் போவதும் எந்தப் பாலத்தின் வழியாக? அதாவது தெரியுமா பழனிசாமிக்கு ? அல்லது காரில் ஏறி அமர்ந்தவுடன் டெண்டர் கோப்புகளில் என்ன கமிஷன் வரும் என்று கணக்குப் பார்ப்பதால் - மறந்துவிட்டாரா? முதலமைச்சர் பழனிசாமி பாணியிலேயே சொல்வதென்றால் - வீட்டிலிருந்து காரில் ஏறியதும் தூங்கி விடுகிறாரா? சென்னை மாநகர் முழுவதும் சில நாட்கள் பெய்த கனமழைக்குத் தாங்க முடியாமல் தத்தளித்து நின்றது. பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. தொலைக்காட்சிகள் தேங்கி நின்ற தண்ணீரை எடுத்துக் காட்சிகளாக வெளியிட்டன. ஆனால் அதையெல்லாம் மறந்து விட்டு - 19 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியிருந்ததாக இன்னொரு “110 அறிவிப்பு” பொய்யைக் கட்டவிழ்த்து விட்டுள்ள முதலமைச்சருக்கு முதலில் சென்னையில் உள்ள மழைநீர்க் கால்வாய்களின் நீள அகலமாவது தெரியுமா?

சென்னை மாநகரை “மேம்பாலங்களின் தலைநகராக” மாற்றிக் காட்டியவர் எங்கள் கழகத் தலைவர். மீஞ்சூர், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களைச் செயல்படுத்தியவர் எங்கள் கழகத் தலைவர். ஏன், மழைநீர் கால்வாய்களை விரிவுபடுத்தியதும் - புதிய மழைநீர் கால்வாய்களை - அதாவது 2071 கிலோ மீட்டர் வரை சென்னை மாநகரில் முதன்முதலில் உருவாக்கியதும் எங்கள் கழகத் தலைவர்தான்! அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியை அமைச்சர் வேலுமணியிடம் “டெண்டர் ஊழலுக்காக” குத்தகை விட்டது மட்டுமே பழனிசாமி. அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த புதிய பேரூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் முடங்கிக் கிடப்பதும் - சென்னையைச் சுற்றி தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட மின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதும் மட்டுமே அ.தி.மு.க. ஆட்சியின் கேடுகெட்ட நிர்வாகத்திற்கு போதுமான நினைவுச் சின்னங்கள்! சிவப்புக் கம்பளம் விரித்து வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்ட முதலமைச்சருக்கு வேறு என்ன தெரியும்?

“மேடையில் அமர்ந்திருப்பவர்கள் மிட்டா மிராசுகளோ, தொழிலதிபர்களோ இல்லை” என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர். அவர்கள் அந்த நிலையையும் கடந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. அ.தி.மு.க. மேடையில் இன்று இருந்தவர்கள் ஊழல்வாதிகள். அதுவும் – வாக்கி டாக்கி ஊழல் - பினாமி கம்பெனிகள் வைத்து அரசு கஜானாவில் ஊழல் செய்தவர்கள் - ரேசன் அரிசியில் ஊழல் செய்தவர்கள்- எல்லாவற்றிற்கும் மேலாக பல்வேறு ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பவர்கள். இது தவிர, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்தவர்கள்தான்! ஏன், அவர்களுக்கெல்லாம் தலைவராக மேடையில் நின்று பேசியவர்கள் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்! அதில் பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை டெண்டர் மற்றும் குடிமராமத்து ஊழல் மூலம் பினாமி சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளவர்! இன்னொருவர் கரப்ஷன் பணத்தை அமெரிக்க டாலர்களில் வாங்கி - தன் குடும்பத்தின் பெயரிலும், பினாமியின் பெயரிலும் சொத்துக்களை குவித்து - ஊழல் தடுப்புத்துறையின் விசாரணையில் இருப்பவர். ஆகவே அ.தி.மு.க.வின் “கார்ப்பரேட் அதிபர்கள்” “ஊழல் அதிபர்கள்” “ஊழல் முதலைகள்” தான் இன்று மேடையில் இருந்தார்கள்! இதுதான் பழனிசாமி தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் மக்களுக்குக் காட்டியுள்ள தனது ஆட்சியின் அடையாளம்!

தி.மு.க. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பியிருக்கும் பழனிசாமிக்கு தி.மு.க. வரலாறும் தெரியாது - தி.மு.க. சாதனைகளும் புரியாது. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளைத் தனியாக ஒரு அறையில் இருந்து படித்துப் பாருங்கள். அப்போது, தெரியும் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் இந்த மாநிலத்திற்கு என்ன சாதனை செய்தார்கள் என்று தெரியவரும். ஏன், அடிமை முதலமைச்சராக இருந்தாலும் கோட்டையில் நின்று தேசியக் கொடி ஏற்றினாரே பழனிசாமி- அது எங்கள் கழகம் வாங்கிக் கொடுத்த உரிமை! ஆனால் அ.தி.மு.க.வின் பத்தாண்டுகால ஆட்சியில் - தமிழகத்தின் மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோனது. தமிழ்நாட்டு மக்களின் நிம்மதி தொலைந்தது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் கோரத் தாண்டவமாடுகிறது. தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து - என்ன அடி விழுந்தாலும் தாங்கிக் கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டு மத்திய பா.ஜ.க அரசுக்கு அடிமையாக இருந்தாரே பழனிசாமி - அந்த அடிமைத்தனத்திற்கு வழங்கப்பட்ட விருதுகள் அவை! “நாங்கள்தான் ஆளும் கட்சி. மனுக்களைப் பெற்று என்ன செய்கிறார். அது குப்பைத் தொட்டிக்குப் போய்விட்டது” என்று அடிப்படை நிர்வாகமே தெரியாமல் ஒரு முதலமைச்சர் பேசியிருக்கிறார். எங்கள் கழகத் தலைவர் கொரோனா காலத்தில் மக்களிடம் பெற்ற மனுக்கள்- அதற்கு முன்பு பெற்ற மனுக்கள் எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், தலைமைச் செயலாளரிடமும் வழங்கப்பட்டுள்ளன. “அவற்றை குப்பைத் தொட்டியில் வீசி விட்டேன்” என்று இன்று ஒப்புக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். இவரைத் தமிழகம் முதலமைச்சராகப் பெற்றது சாபக்கேடு! இவர்தான் நல்லாட்சி தந்து விட்டோம் என்று பொய்யிலே “முதலமைச்சராக” பொறுப்பேற்று- பொய்யிலேயே ஆட்சி செய்கிறார்.

நாட்டிலேயே கொரோனா தடுப்பில் முற்றிலும் தோல்வியடைந்த முதலமைச்சர் பழனிசாமிதான். அவர் தன் முதுகில் தானே தட்டிக் கொடுத்துக் கொள்வது கேலிக்கூத்து. இதுவரை கொரோனா நோய்த் தடுப்பில் ஈடுபட்டு- களப்பலியான மருத்துவர்களுக்குக் கூட அறிவித்த தொகையை கொடுக்க வக்கில்லாத அரசு அ.தி.மு.க அரசு. கொரோனா கொள்முதலிலேயே மனசாட்சி இன்றி ஊழல் செய்த அரசு அ.தி.மு.க அரசு. நீட் தேர்வை முதன் முதலில் எழுத வைத்ததே எடப்பாடி பழனிசாமி! அவர் ஆட்சியில்தான் அனிதா என்ற மாணவி உள்ளிட்ட 13 மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் தேர்தல் ஜூரம் என்ற “அதிகபட்ச வெட்ப” நிலையில் இருக்கும் பழனிசாமி சிறப்பான ஆட்சி தந்திருக்கிறோம் என்று புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார்! முதலமைச்சர் மீதும் - அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும் முதல்கட்டமாகக் கொடுத்திருக்கின்ற ஊழல் புகார்களுக்கே பழனிசாமி இவ்வளவு பதற்றப்படக்கூடாது. அனைத்து ஊழல் புகார்களும் கொடுக்கப்படும் போது இவருக்குத் தூக்கமே வராது போலிருக்கிறது. அந்த அளவிற்கு ஊழல் மலை மீது அமர்ந்திருக்கும் பழனிசாமிக்கும் - அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் தி.மு.க. பற்றியோ எங்கள் கழகத் தலைவர் பற்றியோ விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது?

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்துப் போட்டதே எங்கள் கழகத் தலைவரின் போராட்டத்தாலும் - உயர்நீதிமன்ற உத்தரவினாலும் தான். ஆனால் திரு. பழனிசாமி இந்த இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை. பதவிக்குப் பயந்து வாயைப் பொத்திக் கொண்டு இருந்த பழனிசாமி - 10 சதவீதம் என நீதிபதி பரிந்துரைத்த இடஒதுக்கீட்டை 7.5 சதவிகிதமாகக் குறைத்த பழனிசாமி இப்போது இந்த உள் இடஒதுக்கீட்டிற்கு உரிமை கொண்டாடுவதற்குக் கொஞ்சமாவது கூச்சப்பட வேண்டாமா?

“தமிழ்நாட்டு வரலாற்றிலே சிறப்பான ஆட்சி தந்தது அ.தி.மு.க.தான்” என்று கற்பனைக் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. “ஊழலுக்காக முதலமைச்சரே ஜெயிலுக்குப் போனதும்” “முதலமைச்சர் மீதே சொத்துக் குவிப்பு வழக்கு வந்ததும்” அ.தி.மு.க. ஆட்சியில்தான். இதுவரை, அக்கட்சியின் சார்பாக நான்கு முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அதில் ஒரு முதலமைச்சர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதானவர் - பிறகு சிறையும் சென்றவர். மீதியுள்ள இரண்டு முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சொத்துக் குவிப்புப் புகாரில் சிக்கியுள்ளவர்கள்; நீதிமன்றத்தின் தண்டனையைப் பெற வேண்டியவர்கள் என்பதை ஏனோ எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார். ஆகவே “தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்” என்று “வீராப்பு”ப் பேசியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு நான் ஒரேயொரு தகவலை மட்டும் தெரிவிக்கிறேன். ஏனென்றால் அந்தத் தகவலை இன்னும் உங்களுக்கு உளவுத்துறை கூட சொல்லியிருக்க மாட்டார்கள். பத்தாண்டு ஊழல் ஆட்சிக்கு- நீங்கள் தமிழக மக்களுக்குக் கொடுத்துள்ள தொல்லைகளுக்கு - இன்னல்களுக்கு – “ போதும் உங்கள் சகவாசம்” என தங்களது வாக்குகள் மூலம் “உங்களை ஓட ஓட விரட்டி அடிக்க” மக்கள் தயாராகி விட்டார்கள்! அதுவரை பழனிசாமி அவர்களே என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லுங்கள். மக்கள் நம்பத் தயாராக இல்லை! முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே சாதனைகளைச் சொல்ல முடியாமல் திணறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, அடுத்தடுத்த கூட்டங்களிலும் திக்குமுக்காடப் போகிறார் என்பது மட்டும் நிச்சயம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை” - அ.தி.மு.க அரசுக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்!