File image
Politics

“அ.தி.மு.க ஆட்சி முடிவுக்கான கவுன்ட்-டவுன் தொடங்கிவிட்டது” : டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி சாடல்!

தி.மு.க அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் தி.மு.க தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளையும் நேரில் சந்திக்கும்போது கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆளும் அ.தி.மு.க அரசு எவ்வளவு மோசமாகச் செயல்படுகிறது என தெரியவருகிறது. இதனால் பொதுமக்கள் பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் குறைகளை தீர்வு காண்பதற்கு தி.மு.க தலைமையிடம் பொதுமக்கள் கருத்துகள் அறிக்கையாக வழங்கப்படும்.

அ.தி.மு.கவின் ஆட்சி முடிவுக்கான கவுன்ட்-டவுன் தொடங்கிவிட்டது. தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரை மீதான தடை எந்த அளவுக்கு நீடிக்கும் என தெரியாது. ஏனென்றால் மத்திய அரசுக்கு கைப்பாவையாக மாநில அரசு செயல்படுகிறது.

பள்ளி திறப்பது குறித்து இந்த அரசு என்ன செய்வதன்று தெரியாமல் தகுதியானவர்களிடம் ஆலோசனை கேட்காமல் செயல் படுகிறது. நோய்த்தொற்று தொடக்க காலம் முதலே அதனை தடுக்காமல் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை செய்வது குறித்து ஏற்கனவே தமிழக அரசு அனுப்பி வைத்த தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் முடிவு எடுக்க தமிழக அரசு ஏன் இன்னும் அழுத்தம் தரவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.

Also Read: எழுவர் விடுதலை..தாமதிக்கும் ஆளுநர்.. சட்டத்தின்படிதான் ஆட்சி நடக்கிறதா? -சந்தேகம் எழுப்பும் மு.க.ஸ்டாலின்