Politics

“தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையை ஏற்படுத்திவிட்டது அ.தி.மு.க அரசு”- கே.என்.நேரு பேச்சு!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தி.மு.க வில் இணையும் நிகழ்வு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தி.மு.க வில் இணைந்தனர்.

பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, “தி.மு.க ஆட்சியில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன்பிறகு வந்த அ.தி.மு.க அரசு இந்தியாவில் இருக்கும் யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கலாம் என ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதனால் வட மாநிலத்தவர் பலர் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பணியில் சேர்ந்துள்ளனர்.

தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் நடக்கும் தேர்வுகளில் பல முறைகேடுகள் நடப்பதால் அதில் முறைகேடாக தேர்ச்சியடைந்து வட மாநிலத்தவர் மத்திய அரசு நிறுவனங்களில் வேலைக்குச் சேருகிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் வட மாநிலத்தில் வேலைக்கு சேர முடிவதில்லை. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டம் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்படும்.

தற்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருத்து கூற கூட அனுமதி மறுக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு காரணம் தி.மு.கவும் காங்கிரஸும் தான் என சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் பேசுகிறார்கள். ஆனால் கலைஞர் முதலமைச்சராக இருந்த வரை நீட் தேர்வுக்கு அனுமதி வழங்கவில்லை. பா.ஜ.கவும், அ.தி.மு.க அரசும் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. அதைப் பேசக் கூட சட்டமன்றத்தில் அனுமதி தரப்படுவதில்லை.” எனத் தெரிவித்தார்.

Also Read: “கொரோனாவால் இறந்த மருத்துவர் குடும்பங்களை வஞ்சிக்காமல் ரூ.50 லட்சம் இழப்பீட்டை வழங்குக”: உதயநிதி ஸ்டாலின்