Politics
ஜல் ஜீவன் திட்ட டெண்டர் முறைகேடு : ஊழலை அம்பலப்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவர்களை மிரட்டும் அதிகாரிகள்!
ஜல்ஜீவன் திட்டத்தில் ‘பேக்கேஜ் டெண்டர்’ முறையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஊராட்சி மன்றத்தலைவர்களை மிரட்டி வாபஸ் வாங்கச் சொல்லும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் கிராமங்களில் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் புதுக்கோட்டையில் வருகிற 9 ஆம் தேதி பேக்கேஜ் முறையில் டெண்டர் கோரப்பட்டிருந்தது. ஏற்கனவே இதை ரத்து செய்யவேண்டும் என மாண்புமிகு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதையும் மீறி டெண்டர் அறிவித்திருந்த நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், வழக்கு தொடரப்பட்ட தேதிக்கு முன் தேதியிட்டு திட்டத்தை அமல்படுத்தியதைப் போல கோப்புகள் தயாரிக்கப்படுவது ஒரு அதிகாரி பேசிய ஆடியோ பதிவின் மூலம் வெளிவந்துள்ளது.
அதிகாரிகளின் இந்த ஊழல்போக்கை கண்டித்து தி.மு.க தலைவர் அவர்கள் அறிக்கையின் மூலம் கண்டித்து ஜனநாயகத்தை காப்பாற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களின் உரிமையை நிலை நாட்டுவதற்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார்.
வெட்ட வெளிச்சமாக ஊழல் வெளியே வந்ததைக் கண்டு விரக்தியடைந்த ஆளுங்கட்சி அமைச்சரின் தூண்டுதலின்பேரில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு, 'நீங்கள் தொடர்ந்துள்ள வழக்கை உடனே வாபஸ் வாங்க வேண்டும் இல்லாவிட்டால் உங்களுடைய செக் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்; உங்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்’ என்று மிரட்டி வருகிறார்கள்.
ஆளுங்கட்சியின் ஊழலுக்கு துணை போகின்ற அதிகாரிகளின் இந்த செயலை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கண்டிக்கின்றோம். தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!