Politics
“அன்னைத் தமிழகத்தைக் காக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவோம்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (24-8-2020) மாலை, திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் குறித்தும் - கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகள் குறித்தும் விசாரித்தறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.
முன்னதாக, கழக ஆரம்பகாலத் தொண்டர் சிங்கை சா.பழனிவேலு அவர்களது திருவுருவப் படத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு :
சிங்கை பழனிவேலு அவர்களின் படத்திறப்பு விழா - கழகத்தில் உள்ள ஆரம்பகாலத் தொண்டருக்கு நாம் செய்யும் சிறப்பு.
தந்தை பெரியாரின் கொள்கைகள் ஆழமாக வேரோடிப் போயிருந்த ஒரு தொண்டருக்குச் செய்யும் பணி, அண்ணாவின் கோட்பாடுகளை இதயத்தில் ஏந்தி இந்த இயக்கத்திற்காகத் தொண்டாற்றியவருக்கு நாம் ஆற்றியுள்ள கடமை.
ஏன், முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற நண்பராக- அப்பகுதிக்குத் தலைவர் வந்தால் ஓடோடி வரும் தளபதியாகத் திகழ்ந்த சிங்கை பழனிவேலுவிற்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.
பகுத்தறிவிற்கும், தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் கோட்டையாகத் திகழும் இந்தப் பகுதியில் சிங்கை பழனிவேலு பெரியாருக்கும், அண்ணாவிற்கும், முத்தமிழறிஞருக்கும், எனக்கும் கிடைத்தார் என்பதை இந்த நேரத்தில் பெருமையாகச் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் மன்னை பூமி சுயமரியாதை வீரர்கள் நிறைந்த பூமி. அப்படிப்பட்ட சுயமரியாதை வீரர்களில் ஒருவர்தான் சிங்கை பழனிவேலு.
கீழத்திருப்பாலக்குடி ஒரு காங்கிரஸ் கிராமமாக இருந்தது. முதன் முதலில் 7 பேரை சேர்த்துக்கொண்டு 1957-ல் அதாவது தனது 15-வது வயதில் மறைந்த என்.வி.நடராசன், சத்தியவாணி முத்து ஆகிய இருவரையும் அழைத்து வந்து தி.மு.க. கொடியை அந்த கிராமத்தில் ஏற்றியவர். அதற்காக அந்த ஊர் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து புளியங்குச்சியால் இளைஞர்களை அடித்திருக்கிறார்கள். கழகத்திற்காக இளம் வயதிலேயே அடி வாங்கியவர்.
நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ள அவர் 1959-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு தமிழ் முரசு ஏடு நடத்தி தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டவர்.
பேரறிஞர் அண்ணா, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எல்.கணேசன் பெரியவர் மன்னை, மானமிகு ஆசிரியர் ஆகியோர் சிங்கப்பூர் சென்றால் அவர்களின் ஒருங்கிணைப்பாளர் இவர் தான். அங்கு அனைவருக்கும் உற்றதுணையாக இருந்தவரும் இவர்தான்.
அந்த சிங்கை பழனிவேலு அவர்கள், தன் புதல்வி பூங்கொடி-சா.பாண்டியன் திருமணத்தை 1.9.1986 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடத்த விரும்பினார்.
அந்த தேதியில் தலைவர் கலைஞர் அவர்கள் வர இயலவில்லை என்பதற்காக “ தலைவர் கலைஞர் தலைமையில்தான் என் மகள் திருமணம் நடக்கும்” என்று பிடிவாதமாகத் தள்ளி வைத்து- பிறகு 1.10.1986 அன்று அந்த திருமணத்தை நடத்தினார்.
திருமணத்திற்குத் தலைமை தலைவர் கலைஞர் அவர்கள். முன்னிலை பெரியவர் முன்னாள் அமைச்சர் மன்னையார் அவர்கள். வாழ்த்துரை மானமிகு ஆசிரியர் அவர்கள்.
முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்களும் பங்கேற்ற அந்த திருமண விழாவில் தான், “அன்னைத் தமிழ் மொழியைப் பாதுகாக்க இந்தி திணிப்பை எதிர்த்துப் போராட வாரீர்” என்ற அழைப்பு விடுத்தார் தலைவர் கலைஞர். ஆகவே, படத்திறப்பு விழா இப்போது சரியான தருணத்தில்தான் நடைபெறுகிறது.
விமான நிலையத்திற்குச் சென்றால் “இந்தி தெரிந்தால்தான் இந்தியர்” என்ற புதிய பாடம் அதிகாரிகளால் புகுத்தப்படுகிறது. “இந்தி தெரியவில்லை என்றால் மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பிலிருந்து வெளியேறுங்கள்” என்று தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
இந்தியை - சமஸ்கிருதத்தைத் திணித்து- நம் செம்மொழியாம் தமிழைப் புறக்கணிக்கும் தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள்.
அன்று தந்தை பெரியார் போராடியது போல், பேரறிஞர் அண்ணா போர்க்குரல் எழுப்பியது போல், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்மொழியைக் காப்பாற்றத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டது போல், இன்றைக்கு நாம் மத்திய பா.ஜ.க. அரசின் தமிழ்மொழி விரோதக் கொள்கையை எதிர்த்து வருகிறோம். அன்னைத் தமிழைக் காக்கப் போராடி வருகிறோம்.
அந்த உணர்வுகளுக்கு எல்லாம் நமக்கு வழிகாட்டியாக- சிங்கை பழனிவேலு போன்ற ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோர் இருக்கும் கழகம்தான் இந்த திராவிட முன்னேற்றக் கழகம்.
சிங்கப்பூரில் இருந்தாலும் கழகத்திற்காகக் குரல் கொடுத்து மறைந்த சிங்காரவேலு, சோமசுந்தரம், முருகு.சீனிவாசன், முருகையன், சு.ஆறுமுகத்தை நினைவு கூறி, சிங்கை பழனிவேலு படத்தை இன்று திறந்து வைப்பது- தியாக உணர்வு மிக்க தொண்டருக்கு- இந்த இயக்கத்திற்காக உழைத்த தொண்டருக்கு- நாம் அனைவரும் செலுத்தும் நன்றிக்கடன் என்று சொல்லி- இது போல் கொள்கை உணர்வுகளுடன், தமிழனுக்கே உள்ள தன்மான உணர்வுடன் அனைவரும் செயல்படுவோம். அன்னைத் தமிழகத்தைக் காக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவோம். நன்றி!”
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!