Politics

“அ.தி.மு.க அமைச்சர்களால் முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்க முடியாது; மோடிதான் முடிவெடுப்பார்” : முத்தரசன்

பா.ஜ.க எனும் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக அ.தி.மு.க உள்ளது. இனி அ.தி.மு.க-வால் மீள முடியாது என சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய இரா.முத்தரசன், “நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்ததற்கு பா.ஜ.க அரசே முழுமுதற் காரணம். உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தபோதே, விமானப் போக்குவரத்தை மத்திய பா.ஜ.க அரசு தடை செய்திருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

கொரோனா காலத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க அரசு ஆர்.எஸ்.எஸ் மனுதர்மக் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. மின்சாரத் திருத்தச் சட்டம் உள்பட பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளைப் பாதிப்படையச் செய்துள்ளது.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உடனடியாக தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி, முதல்வர் சிறப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீட், உதய் மின் திட்டம் போன்றவற்றை எதிர்த்தார். ஆனால், முதல்வர் பழனிசாமி, தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து வருகிறார். பா.ஜ.க எனும் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக அ.தி.மு.க உள்ளது. இனி அ.தி.மு.க-வால் மீள முடியாது.

தி.மு.க தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி கொள்கை ரீதியானது. எங்களின் முதல்வர் வேட்பாளர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டோம். தமிழக உரிமைக்காகவும், மக்களின் பிரச்னைகளுக்காகவும் ஒன்றிணைந்து போராடி வருகிறோம்.

எங்களது கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

தி.மு.கவுக்கு பா.ஜ.க போட்டி என்பது பகல் கனவு. பா.ஜ.கவுடன் உள்ள கட்சிகளை மக்கள் நிராகரிப்பர். அ.தி.மு.க அமைச்சர்களால் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்க முடியாது. அ.தி.மு.கவின் எந்த முடிவாக இருந்தாலும் மோடிதான் தீர்மானிப்பார்.

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுவார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அவர் கோட்டையில் கொடி ஏற்ற மாட்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்து மாணவர்களின் அழுத்தத்தை போக்கிடுக” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!