Politics

“தொடரும் பெரியார் சிலை மீதான அவமதிப்பு: இதற்கு முற்றுப்புள்ளி வைக்காதது கேவலம்” - அதிமுக அரசை சாடிய வைகோ!

கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளன என்கிற செய்தி கேட்டு துடிதுடித்துப்போனேன் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகாரர்கள் கொடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த அநியாயச் செயலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்மைக் காலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.

தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேவலமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்துக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும் – பார்

அவர்தாம் பெரியார்

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர் பெரியார்!

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் யுனெஸ்கோ அமைப்பு 27.06.1973 அன்று புத்துலகச் சிற்பி என்றும், தொலைநோக்குச் சிந்தனையாளர்; தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; மூட நம்பிக்கை; அறியாமை; அர்த்தமற்ற சம்பரதாயங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்றும் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது அளித்து, பெரியார் அவர்களை உலகத் தலைவராக உயர்த்தி வைத்தது.

1919 ஆம் ஆண்டிலேயே தாம் வகித்துவந்த பதவிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டவர் பெரியார். உத்தமர் காந்தியடிகள் ஈரோட்டில் பெரியாரின் மாளிகைக்கே வந்து தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறப்பும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கையான மது ஒழிப்புப் போராட்டத்திற்கு தனது மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் ஆகியவர்களையும் இணைத்துக்கொண்டு போராடி, காந்தியாரின் பாராட்டுகளையும் பெற்றவர் பெரியார்.

காங்கிரஸ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் தந்தை பெரியார் அவர்கள் செய்திட்ட அரும்பணிகளின் காரணமாக தமிழ் மொழியும், தமிழ் மக்களும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரும் உன்னதமான நிலையை எட்ட முடிந்தது.

பெரியாரின் பெருமைகளை உணர்ந்துகொண்டதனால்தான் இந்திய அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. தமிழக அரசையே தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கையாக்கினார் பேரறிஞர் அண்ணா. “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுமே பெரியாரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். பெரியாரின் புகழ் சிதறல்கள்” என்று பெருமைபட பேசினார் அண்ணா.

Also Read: பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க விஷமிகள் திட்டம் - தி.மு.க MLA கண்டனம்

சமூக நீதி, மதநல்லிணக்கம், பெண் உரிமை, மதச்சார்பற்ற தன்மை, சாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் ஆகிய முற்போக்குக் கொள்கைகளுக்கு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து, இந்தியத் துணைக் கண்டத்திற்கே தமிழகம் வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு தந்தை பெரியார் அவர்களின் ஓய்வறியாத உழைப்புதான் காரணம் என்பதை அவரது எதிரிகளும் ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு பல வகைகளிலும் பெருமையும், சிறப்பும், புகழும் கொண்ட தந்தை பெரியார் அவர்களின் சிலை தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுகிறது என்பதை தமிழக அரசு இனியாவது உணர்ந்து தக்க நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

இனியும் இப்படிப்பட்ட வன்செயல்கள் நடைபெறாமல் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், அனைத்துத் தலைவர்களின் சிலைகள், நினைவுச் சின்னங்கள் ஆகியவைகளை காப்பாற்றிடவும் பொறுப்புணர்ச்சியுடன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “தமிழக மக்களின் ஆதரவை பெறாத கும்பலே பெரியாரை அவமதிக்கிறது” - கனிமொழி கடும் கண்டனம்!